சனி, 18 செப்டம்பர், 2010

யுத்தம் முடிவடைந்த வேறு நாடுகளை போலன்றி இலங்கை தானாகவே வளர்ச்சி

யுத்தம் முடிவடைந்த வேறு நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை மிகவும் விரைவாக வளர்ச்சியை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது. சரியான கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டங்களின் ஊடாக இலங்கை அபிவிருத்தியை நோக்கி பயணிக்கின்றது.
செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி சர்வதேச சமாதான தினமாக அனுஷ்டிக்கப்படு வதை முன்னிட்டு கொழும்பில் அமைந்துள்ள ஐ.நா. அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நீல் புனே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வெளிநாட்டு தூதுவர்கள் தூதரக அதிகாரிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் முகவர் நிலையங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர். நீல் புனே அங்கு மேலும் உரையாற்றுகையில், சமாதானத்திலேயே நாடொன்றின் எதிர் காலம் தங்கியுள்ளது. சர்வதேச சமாதான தினம் என்பது புதியதொன்றல்ல. 1981 ஆம் ஆண்டிலிருந்து இந்த சமாதான தினம் ஐக்கிய நாடுகள் சபையினால் அனுஷ்டிக்கப்பட்டுவருகின்றது. உலக போர்நிறுத்தம் மற்றும் வன்முறையில்லாத நிலைமை என்ற பிரசாரத்தின் அடிப்படையில் இந்த தினத்தை அனுஷ்டிக்கவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை உலக மக்களிடம் கோரி  நிற்கின்றது.
உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் இளைஞர்களுக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கவேண்டுமானால் அதற்கு சமாதானம் அடிப்படையான விடயமாகும். அனைத்து விதமான ஆயுத மோதல்களிலும் இளைஞர்களும் சிறுவர்களும் பாதிக்கப்படுகின்றனர். பொருளாதார செயற்பாடுகளும் இளைஞர்களில் தாக்கம் செலுத்துகின்றன. அண்மைய உலக பொருளாதார நெருக்கடியின் காரணமாக 87 வீதமான இளைஞர்கள் தொழில்களை இழந்ததாக அண்மையில் ஐ.நா. செயலாளர் நாயகம் தெரிவித்திருந்ததை இந்த இடத்தில் நினைவூட்டுகின்றேன்.
எனவே, இளைஞர்கள் தொடர்பில் சிறந்த முறையில் கவனம் செலுத்தப்படவேண்டியது அவசியமாகும். இளைஞர்களே மாற்றங்களுக்கான முகவர்களாக இருக்கின்றனர். அவர்கள் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய இயந்திரமாக உள்ளனர். இன்றையதும் நாளையதும் இணைப் பாளர்களாக இளைஞர்கள் இருக்கின்றனர்.
சரியான கொள்கைகள் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்கள் மூலம் பொறுப்புள்ள பிரஜைகளாக இளைஞர்களை உருவாக்க முடியும்.முறையான உதவிகளை வழங்குவதன் மூலம் போரினால் பாதிக்கப்பட்ட இளைஞர்களை அவர்கள் முன் காணப்படுகின்ற சவால்களிலிருந்து மீட்டெடுக்க முடியும்.
சமூக பிரிவினைகளை தடுப்பதற்கு இளைஞர்களுக்கு உதவக்கூடிய காலம் தற்போது ஏற்பட்டுள்ளதாக உணரப்படுகின்றது. அந்த வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகள் இலங்கையர்களுடன் இணைந்து பல வேலைத்திட்டங்களை மேற்கொள்கின்றது.
அதாவது சமூகங்களுக்கு இடையில் மொழித் தடைகளை நீக்கும் பொருட்டு மொழிப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் சமூக விடயங்கள் தொடர்பான திறமைகளை வளர்த்துக்கொள்ள நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. கல்வி மற்றும் தொடர்ச்சியான அபிவிருத்தி போன்றவற்றுக்கு ஐ.நா.வின் பல அமைப்புகள் அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்றி வருகின்றன.
யுத்தம் முடிவடைந்த வேறு நாடுகளை போலன்றி இலங்கை தானாகவே வளர்ச்சி பாதையில் பயணிக்கின்றது. சவால்களுக்கு மத்தியிலும் விரைவான அபிவிருத்திக்கான சந்தர்ப்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியிலும் மனித மூலதனம் சிறப்பாக கட்டியெழுப்ப ப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக