வியாழன், 16 செப்டம்பர், 2010

சிறுவன் பலி! பேருவளையில் பொலிஸார்-கொள்ளையர் துப்பாக்கி சமர


பேருவளை நகரில் நேற்று புதன்கிழமை பிற்பகல் பொலிஸாருக்கும் கொள்ளைக் கோஷ்டியொன்றுக்குமிடையே நடைபெற்ற துப்பாக்கிச் சமரின் போது, இடையில் சிக்கி எட்டு வயதுச் சிங்கள சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார். இவரது தந்தை படுகாயமடைந்துள்ளார்.
இந்தத் துப்பாக்கிச் சமரின் இடையில் சிக்கி பேருவளை மொறகல பகுதியைச் சேர்ந்த சுதில் நிலுபுல் (8 வயது) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
கொள்ளைக் கோஷ்டியொன்று பேருவளை நகரில் நடமாடுவது தொடர்பான தகவலொன்றையடுத்து மஹரகமவிலிருந்து சென்ற பொலிஸாருக்கும் கொள்ளைக் கோஷ்டிக்குமிடையிலேயே இந்தத் திடீர் மோதல் இடம்பெற்றுள்ளது.
கொள்ளையர்களை அடையாளம் காட்டுவதற்காக அங்கு சென்ற பொலிஸாருடன் சந்தேகநபர் ஒருவரும் சென்றுள்ளார். கொள்ளைக் கோஷ்டியினரை சுற்றிவளைத்துப் பிடிக்கும் நோக்கில் பொலிஸார் அங்கு சென்றபோது பேருவளை நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நின்ற கொள்ளையர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே துப்பாக்கிச் சமர் ஏற்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் பெருமளவில் இருந்த வேளையில் இந்தத் துப்பாக்கிச் சமர் வெடித்ததால் மக்கள் செய்வதறியாது திகைத்து நாலாபுறமும் சிதறியோடினர். இதன்போது, அப்பகுதியில் ஆட்டோ ஒன்றினுள்ளிருந்த எட்டு வயதுச் சிறுவனொருவன் மீது துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்துள்ளன.
சிறுவன் உடனடியாக பேருவளை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைக்குட்படுத்திய பின் அவர் மேலதிக சிகிச்சைக்காக நாகொட ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்ட போதும் அங்கு உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் சிறுவனின் தந்தையும் படுகாயமடைந்துள்ளார்.
இந்த நிலையில் பொலிஸார் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியவாறு அந்தக் கொள்ளைக் கோஷ்டி காரொன்றிலேறி தப்பிச் சென்றுள்ளது. கொள்ளையர்களைப் பிடிக்க விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக நான்கு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக