வியாழன், 16 செப்டம்பர், 2010

சத்தீஷ்கரில் பெண்களுக்கு பாலியல் சித்ரவதைகளும், கொடூரமான ராணுவ என்கவுண்டர்களும் அப்பகுதியின்

சத்தீஷ்கர் மற்றும் பாஸ்டார் பகுதிகளின் துன்பக்கதைக்கு காரணம், அங்கு  நிறைந்துள்ள கனிம வளங்களே! இந்தியாவின் மொத்த இரும்புத்தாது வளத்தில் ஐந்தில் ஒரு பங்கு, சுமார் 2336 மில்லியன் டன் இரும்புத்தாது அப்பகுதியில் உள்ளது. தந்தேவடா, கான்கர், ராஜ்நந்த்கான், பாஸ்டார், துர்க் ஆகிய பகுதிகளில் கிடைக்கும் இரும்புத்தாதுவில் அதிகபட்ச அளவான 68% இரும்பு உற்பத்தி செய்ய முடியும்.  பாஸ்டார் பகுதியில் இரும்புத்தாதுவுடன், சுண்ணாம்புக்கல், பாக்ஸைட், (அணுசக்தி தயாரிக்க பயன்படும்) யுரேனியம், வைரம் ஆகிய கனிம வளங்களும் ஏராளமாக உள்ளன.  சத்தீஷ்கர் என்ற மாநிலம் புதிதாக உருவாக்கப்பட்டபோது அம்மாநிலத்தின் முதலாவது முதலமைச்சராக பதவி ஏற்ற அஜித் ஜோகி, ‘செல்வ வளமு’ள்ள அந்த நிலப்பகுதியில் வறுமையில் வாடும் மக்கள் வசிப்பதாக குறிப்பிட்டார். ‘செல்வவளம்’ மிக்க இந்தப் பகுதி காடுகளால் சூழப்பட்டிருந்தது. இந்தப் பகுதிகளுக்கு செல்வதற்கான வழிகள் அமைக்கப்படாதிருந்த அந்த சமயத்தில் ‘செல்வ வளம்’ மிக்க அந்தப்பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஏழை மக்களுக்கு எந்த சவாலும், பிரசினையும் இல்லை. ஆனால் உலக மயச்சூழலில் பெருகி வரும் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் பயனாக, நடைமுறையில் உள்ள காலனியாதிக்க போக்கின் விளைவாக ‘செல்வ வளம்’ மிக்க அந்த பகுதி மீது அப்பகுதியில் வசித்த ஏழை மக்கள் கொண்டிருந்த கட்டுபாட்டிற்கு பெரும் சவால் ஏற்பட்டது.
சத்தீஷ்கரின் வனப்பகுதியில் இருந்த வனவளங்களும், கனிம வளங்களும், அவற்றின் மதிப்பும் தெரியவந்த பின்னர் இப்பகுதி மீதான இறையாண்மையை பாதுகாக்க வேண்டியது இந்திய அரசு அமைப்புகளின் மிக முக்கியமான கடமையானது. அப்பகுதியில் ஏராளமான வன வளங்களும், கனிம வளங்களும் இருப்பதை கண்டறியாதவரை செயலற்று இருந்த அரசு அமைப்புகள், அப்பகுதியில் இருந்த வளங்களை கண்டறிந்த பின்னர் தங்கள் அதிகாரங்களை அப்பகுதியில் நிறுவத் தொடங்கின. மேலும் வளம் மிகுந்த அந்த நிலப்பகுதிகளை பன்னாட்டு நிதி மூலதன அமைப்புகளான டாடா, எஸ்ஸார், லாஃபார்ஜ், ஹோல்சிம் உள்ளிட்ட தொழில் கழகங்களிடம் ஒப்படைப்பதில் இந்திய அரசு அமைப்புகள் ஆர்வம் காட்டின. சாமானிய மக்களிடம் இருந்து கையகப்படுத்திய வளம் மிக்க நிலங்கள் தொழிற்கழகங்களுக்கு தாரை வார்க்கப்பட்டது. இதற்காக கிராம சபை உள்ளிட்ட அமைப்புகள் போலியாக செயல்படுத்தப்பட்டன. சட்டங்கள் மீறப்பட்டன.

ஆனால் இந்தப்பணி அரசு நினைத்தது போல எளிதானது அல்ல என்பது விரைவில் விளங்கியது. எஸ்ஸார் மற்றும் டாடா நிறுவனங்களுக்காக நில ஆர்ஜிதம் செய்வதற்கு பாஸ்டாரின் தெற்குப் பகுதியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.  பான்சி பகுதியில் ஆயுதப்படையினரின் துப்பாக்கி முனையில் நிலம் கையகப்படுத்தல் பணி நடைபெற்றபோது, லோகண்டிகுடா பகுதியின் பல கிராமங்களிலும் டாடா நிறுவனத்திற்காக நிலம் கையகப்படுத்தலுக்கு பலத்த எதிர்ப்பு நிலவியது. பல கிராம சபைகள் நிலத்தை கையளிக்க ஒப்புதல் அளிக்க வில்லை.

மாநிலத்தின் பல பகுதிகளிலும் நடைபெற்ற போராட்டங்களை மிகுந்த ஆயுத பலத்தோடு அரசு ஒடுக்க முயற்சித்தாலும், மக்களிடம் ஏற்பட்ட கொந்தளிப்புகளையும், பரவலாகி வரும் போராட்டங்களையும் அடக்குவது அரசுக்கு பெரும் சவாலாகவே இருந்தது. ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடுவதில் பாஸ்டார் பகுதிக்கு என்று ஒரு வரலாறு உள்ளது. சொத்துரிமையை வரையறை செய்வதிலும், உருவாக்குவதிலும் பாஸ்டார் பகுதியில் நிலவிய நடைமுறைக்கும், இந்தியாவின் மற்றப் பகுதியில் நிலவிய நடைமுறைக்கும் பல வேறுபாடுகள் இருந்தன. இப்பகுதியில் ஆட்சிபீடத்தில் இருந்தவர்களில் சிலரைத்தவிர மற்றவர்கல் அனைவரும், அரசின் அதிகாரங்களை வரையறை செய்வதில் காலனியாதிக்க மனநிலையிலேயே இருந்தனர். இந்தச் சூழ்நிலையில் ஆட்சி அதிகாரத்தில் ஏற்பட்ட தோல்வி, லஞ்ச-ஊழல், மிக மோசமாக உருவெடுத்த “வளர்ச்சி” ஆகியவை இந்தப் பகுதியில் ஆயுதங்கள் அதிகரிக்க காரணமாக அமைந்தன. பாஸ்டார் பகுதியில் மாவோயிஸ்ட் பிரசினையை எதிர்கொள்வதற்கு பல ஆண்டுகள் முன்னதாக பாஸ்டார் பகுதியை ஆட்சி செய்து வந்த மக்களின் அபிமானத்திற்கு உரிய தலைவரான ப்ரவீர் சந்திர பான்ஜ் டியோ, மத்திய பிரதேசத்தின் தலைநகரிலிருந்து வந்த உத்தரவுகளுக்கு கீழ்ப்படிய மறுத்த நேரத்தில் விரும்பத்தகாத சம்பவம் ஒன்றின் மூலமாக கொல்லப்பட்டார். நக்ஸலைட் வன்முறைக்கு எதிரான ஆதிவாசி மக்களின் தன்னெழுச்சியான எதிர்வினையே சல்வா ஜூடும் என்ற ஆயுதம் தாங்கிய படை என்று அப்போதைய சத்தீஷ்கார் மாநில அரசும், அதன் ஊதுகுழல்களாக விளங்கிய மீடியாக்களும் சித்தரித்தன.
இன்று கடந்த சில மாதங்களாக பச்சை வேட்டை என்ற பெயரில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பாஸ்டார் பகுதி யுத்த முனையாக காட்சி அளிக்கிறது. அப்பகுதி மக்கள் உரிமை இழந்து, தனிமைப்படுத்தப்பட்டு, பீதியில் உறைய வைக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கு பாலியல் சித்ரவதைகளும், கொடூரமான ராணுவ என்கவுண்டர்களும் அப்பகுதியின் அமைதிக்கு ஆபத்து ஏற்படுத்தி வருகின்றன.
வளர்ச்சி என்று கூறப்படும் இத்தகைய நடவடிக்கைகளில் வீடிழந்து, வாழும் இடத்திலிருந்து துரத்தியடிக்கப்படும் மக்கள் இனம், அவர்களது நிலமும், வளங்களும் கொள்ளையடிக்கப்படுவதை வன்முறையற்ற – ஜனநாயக வழிமுறைகளில் தடுத்து நிறுத்த முடியாது என்ற கசப்பான உண்மைகளை புரிந்து கொள்கிறார்கள். இது மிகவும் மோசமான சூழலாகும்! ஏராளமான கல்வியாளர்களையும், படிப்பாளிகளையும் கொண்ட நர்மதா பச்சாவ் அந்தோலன் போன்ற மக்கள் போராட்டக்குழுக்களும்கூட நிர்வாக மற்றும் நீதித்துறை அமைப்புகள் மூலமாக பூர்விக குடிமக்களின் நிலங்களும், இயற்கை வளங்களும் கொள்ளை போவதை தடுக்க முடியாது என்ற கசப்பான உண்மையை ஏற்றுக் கொள்கின்றனர்.  தற்போதைய நிலையில் மக்கள் ஒற்றுமை மற்றும் பலப்பிரயோகத்தின் மூலமாக மட்டுமே இதுபோன்ற பிரசினைகளை எதிர்கொள்ள முடியும். இதன் காரணமாகவே கலிங்கா நகர், நந்திகிராம் போன்ற பகுதிகளில் செய் அல்லது செத்துமடி என்ற நிலைக்கு மக்கள் செல்கின்றனர். இயற்கை வளங்களும், நிலமும் கொள்ளை போவதை தடுப்பதில் இந்த போராட்டங்களே முன்மாதிரியாக திகழ்கின்றன. இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள், எதை விலையாக கொடுத்தாலும் சரி: தங்கள் பகுதியில் அரசு அதிகாரிகளின் கால்கள் படக்கூடாது என்று நினைக்கின்றனர். இந்தச் சூழலில் அரசுத் தரப்பில் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் வன்முறைகள் வெடிக்கலாம்.”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக