இளையான்குடி: லிபியா நாட்டில் 80 தமிழர்கள் கொத்தடிமைகளாக இருப்பதாக அங்கிருந்து தப்பி வந்திருக்கும் இளையான்குடியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,மதுரையில் வில்லியம்ஸ் டிராவல்ஸ் என்ற நிறுவனம் உள்ளது. அது லிபியாவில் தங்கும் வசதியுடன் அதிக சம்பளம் கிடைக்கும் வேலை வாங்கித் தருவதாக விளம்பரம் செய்தது. இதை நம்பி அந்த வேலையை எப்படியாவது வாங்கிட வேண்டுமென்று அந்த நிறுவனத்திற்கு ரூ. 1 லட்சம் கொடுத்தேன். அவர்களும் சொன்னபடி என்னை லிபியாவுக்கு அனுப்பி வைத்தார்கள். அவர்கள் சொன்னது எல்லாம் பொய் என்று அங்கு சென்ற பிறகு தான் தெரிந்தது. எனக்கு தோட்ட வேலை கொடுத்தனர். இவ்வளவு பணம் கொடுத்து வந்துவிட்டோம் என்ன செய்வது என்று நான் அந்த வேலையைச் செய்தேன். அதிக சம்பளம் என்று சொன்னார்கள் அல்லவா. ஆனால் அங்கு இது நாள் வரை சம்பளமே கொடுக்கவில்லை. என்னைப் போன்று ஏமாந்த சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த தமிழர்கள் 80 பேர் உள்ளனர். நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சம்பளத்தைக் கேட்டதற்கு எங்களை கட்டிடத்தில் வைத்து பூட்டி வைத்தனர். அங்கிருந்து ஒரு வகையாக தப்பித்து இளையான்குடியில் இருக்கும் என் உறவினர்கள் உதவியால் இந்தியாவுக்கு வந்தேன். அங்கு ஆதரவின்றி அவதிப்படும் தமிழர்களை மீட்கும்படி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறேன். அவரும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக