மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்ட வனப்பகுதியில் தண்டவாளம் உள்ளது. இதை நேற்று இரவு 11.15 மணிக்கு காட்டு யானைகள் கூட்டமாகக் கடந்து சென்றபோது 2 குட்டி யானைகள் தண்டவாளத்தில் சிக்கியது. இதைப் பார்த்த மற்ற யானைகள் அவற்றை காப்பாற்ற முயன்றன. அந்த நேரத்தில் அப்பகுதி வழியாக வந்த சரக்கு ரயிலில் யானைக் கூட்டம் அடிபட்டது. இதில் 5 யானைகள் அதே இடத்தில் இறந்தன, 3 யானைகள் பலத்த காயம் அடைந்தன.
காயம் அடைந்த யானைகளின் அலறலால் அப்பகுதியில் சுற்றித் திரிந்த 25 யானைகள் அங்கு கூட்டமாக வந்துவிட்டன. இதனால் ரயில் போக்குவரத்து சுமார் 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது.
பலத்த காயம் அடைந்த 3 யானைகளில் 2 யானைகள் நேற்று காலை பரிதாபமாக இறந்தன.
இந்த விபத்து குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது,
இந்தப் பகுதியில் யானைகள் ரயிலில் அடிபட்டு இறப்பது அதிகரித்து வருகிறது. ரயில்கள் அதி வேகத்தில் வருவதால் யானைகள் உயிர் இழந்துவிடுகின்றன. ஆகையால், யானைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரயிலின் வேகத்தை மணிக்கு 40 கிலோ மீட்டராக குறைக்க வேண்டும். அப்பொழுது தான் இந்த உயிரிழப்பைத் தவிர்க்க முடியும் என்று அவர் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து ஜெயராம் ரமேஷ் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், யானைகளின் பாதுகாப்பு குறித்து ரயில்வே துறை சற்றும் அக்கறை காட்டவில்லை என்று தெரிகிறது. இது வேதனை தருகிறது.
யானைகளை தேசிய பாரம்பரிய விலங்காக அறிவிக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இந்த துயரச் சம்பவம் நடந்திருப்பது வருத்தம் தருகிறது. இதுகுறித்து விரைவில் ரயில்வே போர்டு அதிகாரிகளை சந்தித்துப் பேசப் போகிறேன்.
இதுபோன்ற சூழ்நிலைகளில் யானைகளை காப்பாற்றத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். இதை ரயில்வே செய்தாக வேண்டும் என்றார் அவர்.
இந்தியாவிலேயே ரயில் விபத்தில் அதிக அளவிலான யானைகள் இறந்திருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து ஜெயராம் ரமேஷ் கூறுகையில், யானைகள் ரயில் மோதி பலியாவது இது முதல் முறையல்ல. ஆனால் இப்போது நடந்திருப்பது மிகப் பெரிய விபத்தாகும். வட கிழக்குப் பகுதியில் இதுபோன்ற விபத்துக்கள் அதிகம் நடப்பது வருத்தம் தருகிறது என்றார்.
பதிவு செய்தது: 24 Sep 2010 5:17 pm
இறந்த யானைகளின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் இழப்பிடு தொகை வழங்க படும்.. மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க படும் - மம்தா பநேர்ஜி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக