வியாழன், 9 செப்டம்பர், 2010

3வது அணி..பாமகவின் முயற்சி காலம் கடந்தது: திருமாவளவன்

மூன்றாவது அணி அமைந்தால், அதற்குத் தலைமையேற்க பாமக விரும்புவது அக் கட்சியின் காலம் கடந்த முயற்சி என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

கோவையில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல சிறப்புச் செயற்குழு கூட்டத்திற்குப் பின் நிருபர்களிடம் பேசிய அவர்,

சட்டசபை தேர்தலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தயாராகி வருகிறது. 80 தொகுதிகளை தீர்மானிக்கக் கூடிய வலிமையான வாக்கு வங்கியை தலித் சமூகம் பெற்றுள்ளது.

வெளியுறவுத் துறை செயலர் நிரூபமா ராவின் இலங்கைப் பயணம் எவ்வித பயனும் அளிக்கவில்லை. தமிழர்கள் மீதான சிங்கள அரசின் அடக்குமுறை தொடர்கிறது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள 11,000 தமிழர்களின் கதி என்ன ஆனது எனத் தெரியவில்லை.

தமிழர் பகுதிகளில் ராணுவத்தினரின் குடும்பங்களை குடியமர்த்துவதாகக் கூறி சிங்களர்களை குடியமர்த்துகின்றனர். இந்திய அரசு இதை தடுக்க வேண்டும்.

அண்ணா பிறந்த நாளையொட்டி, சிறைகளில் 7 முதல் 10 ஆண்டுகள் வரை கழித்த கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் சிறையில் பல ஆண்டுகளாக உள்ளனர். அவர்களை விடுதலை செய்யக் கோரி துணை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மனு அளித்துள்ளேன்.

சாதி வாரி கணக்கெடுப்பு வரவேற்புக்குரியது. அதன் மூலமாக தலித் மக்களுக்கான இடஒதுக்கீடு உயரும் வாய்ப்புள்ளது.

திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது. வரும் சட்டசபைத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்று திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்.

பாமக உள்ளிட்ட தோழமைக் கட்சிகளை இக்கூட்டணிக்கு அழைக்க முயற்சி எடுத்து வருகிறோம்.

மூன்றாவது அணி அமைந்தால் பாமக தலைமையேற்க விரும்புவதாக மருத்துவர் ராமதாஸ் கூறுவது அக்கட்சியின் காலம் கடந்த முயற்சி. அதற்கான வாய்ப்பை பாமக கை நழுவ விட்டுவிட்டது.

மற்றவர்கள் தன்னைக் கவனிக்க வேண்டும் என்பதற்காக திமுக மீது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றச்சாட்டுகளைத் தெரிவிக்கிறார். காங்கிரஸாரே அவரது விமர்சனங்களைப் பொருட்படுத்துவதில்லை என்றார் திருமா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக