தஞ்சை பெரிய கோவில் 1000 ஆண்டுகள் நிறைவு விழாவில், முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார் என்றும், சிறப்பு தபால் தலை மற்றும் சிறப்பு நாணயம் வெளியிடப்படுகிறது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
ராசராச சோழனின் தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்டு 1000 ஆண்டுகள் முடிவுற்ற நிலையில் இவ்வாண்டு நிறைவு விழா கொண்டாடுவது குறித்து 27.7.2010 அன்று ஒரு பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.
அதனையொட்டி தஞ்சாவூர் பெரிய கோயில் 1000 ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சிகள் 2010 செப்டம்பர் திங்கள் 22 முதல் துவங்கி 26 வரை நடைபெறவுள்ளன.
22.9.2010 முதல் 24.9.2010 வரை மூன்று நாட்கள் ஒவ்வொரு நாளும் மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை பெரிய கோயில் வளாகத்தில் கலை நிகழ்ச்சிகளும், சிவகங்கைப் பூங்கா, இராசராசன் மணிமண்டபம், தொல்காப்பியர் சதுக்கம், பழைய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, கரந்தை ஆகிய ஐந்து இடங்களில் நாட்டுப்புறக் கலைஞர்களின் சங்கமம் நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.
இந்த நாட்டுப்புற நிகழ்ச்சிகளில் மொத்தம் 1000 கலைஞர்கள் கலந்து கொள்வார்கள். தஞ்சையைச் சார்ந்த 75 கலைக் குழுக்கள் இவற்றில் இடம்பெறும். பெரிய கோயில் வளாகத்தில் 22ஆம் தேதி தேன்மொழி ராஜேந்திரன் குழுவினர் வழங்கும் கலை நிகழ்ச்சிகளும், சீர்காழி சிவசிதம்பரம் வழங்கும் தமிழிசை நிகழ்ச்சியும், திருநங்கை நர்த்தகி நடராஜ் நாட்டிய நிகழ்ச்சியும், சுதா ரகுநாதன் இசை நிகழ்ச்சியும் நடைபெறும். நிகழ்ச்சிகள் மாலை 5.30க்குத் தொடங்கி 9.30 வரை நடைபெறும்.
23ஆம் தேதி மாலை 5.30 முதல் 9.30 வரை மதுரை முத்து குழுவினர் வழங்கும் நாட்டுப்புற நிகழ்ச்சிகளும், டி.எம். கிருஷ்ணா வழங்கும் இசை நிகழ்ச்சியும், நடனக் கலைஞர் ஜாகீர் உசேன் நடன நிகழ்ச்சியும் பெரிய கோயில் வளாகத்தில் நடைபெறும்.
24ஆம் தேதி அலங்காநல்லூர் ஆறுமுகம் குழுவினர் வழங்கும் பறையாட்டமும், அரித்துவாரமங்கலம் ஏ.கே. பழனிவேல் குழுவினர் வழங்கும் கருவி இசையும், அருணா சாய்ராம் இசை நிகழ்ச்சியும் மாலை 5.30 முதல் 9.30 வரை பெரிய கோயில் வளாகத்தில் நடைபெறவுள்ளன.
செப்டம்பர் 24ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் ஒரு சிறப்புக் கண்காட்சியினை துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்தக் கண்காட்சியில் சோழர்கால ஓவியங்கள், கல்வெட்டுகள், கற்சிற்பங்கள், நிழற்படங்கள், செப்பேடுகள், இசைக் கருவிகள், போர்காட்சிகள், அகழ்வாய்வு படங்கள் கும்பகோணம் கவின்கலைக் கல்லூரி மாணவர்கள் தீட்டிய 100 ஓவியங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்படும். மேலும், தஞ்சை நகர் குறித்த 1000 புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்படும்.
செப்டம்பர் 24ஆம் தேதி தமிழ் பல்கலைக் கழகத்தில் "இந்தியப் பெருமைக்குத் தஞ்சையின் பங்களிப்பு" என்ற தலைப்பில் ஓர் ஆய்வரங்கத்தை முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்து சோழர்கால ஓவியங்கள் என்ற நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார். இந்த ஆய்வரங்கத்தில் பல்வேறு அறிஞர்கள் பங்கேற்க உள்ளனர்.
செப்டம்பர் 25ஆம் தேதி காலை 09.00 மணியளவில் பெரிய கோயில் வளாகத்தில் நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடைபெறும். அதனைத் தொடர்ந்து காலை 10.30 மணிக்கு பெரிய கோயில் வளாகத்தில் நிதியமைச்சர் அன்பழகன் தலைமையில் மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி வரவேற்புரையுடன் ஒரு கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இக்கருத்தரங்கத்தில் ஔவை நடராசன், குடவாயில் பாலசுப்ரமணியன், சாரதா நம்பி ஆரூரன், நடன காசிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பெரிய கோயிலின் பெருமைகள் என்ற தலைப்பில் அதன் பல்வேறு சிறப்புகளைக் குறித்துப் பேசுவார்கள்.
செப்டம்பர் 25ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு பெரிய கோயில் வளாகத்தில் திருக்குவளை சகோதரிகளின் மங்கல இசை நிகழ்ச்சியும், ஓதுவார்களின் திருமுறை இசை நிகழ்ச்சியும் நடைபெறும். பின்னர் பத்மா சுப்ரமணியம் குழுவினர் வழங்கும் 1000 நடன மணிகள் வழங்கும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெறும். இரவு 8.00 மணிக்கு திலகர் திடலில் தி.க.ச.புகழேந்தி தி.க.ச.கலைவாணன் குழுவினரின் இராசராச சோழன்" வரலாற்று நாடகம் நடைபெறும்.
செப்டம்பர் 26ஆம் தேதி காலை 10.00 மணிக்கு பெரிய கோயில் வளாகத்தில் களிமேடு கிராமத்தினர் வழங்கும் திருமுறை ஓதுதல் நிகழ்ச்சி நடைபெறும். அன்று மாலை 05.00 மணிக்கு ஆயுதப் படையினர் பயிற்சித் திடலில் நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் கருணாநிதி நிறைவு விழாப் பேருரை ஆற்றுவார்கள். நிதியமைச்சர் அன்பழகன் விழாவிற்குத் தலைமையேற்கிறார்.
இந்நிகழ்ச்சியின்போது மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.இராசா சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் ஜி.கே.வாசன் அவர்கள் பெற்றுக் கொள்கிறார்.
மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ச.சு.பழனிமாணிக்கம் சிறப்பு நாணயம் வெளியிட மத்திய திட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணைஅமைச்சர் வே.நாராயணசாமி பெற்றுக் கொள்கிறார்.
இவ்விழா நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து "பூங்காவில் பூங்காற்று" என்னும் கலை நிகழ்ச்சி 30 வாரங்கள் சனிக்கிழமைதோறும் சுற்றுலாப் பண்பாட்டுத் துறையால் சிவகங்கைப் பூங்காவில் நடத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சிகளுக்கெல்லாம் முன்னோடியாகத் தெருவோரத் திருவிழா என்ற கலை நிகழ்ச்சி 2010 ஆகஸ்ட் திங்கள் 14 முதல் நடைபெற்று வருகின்றது. டிசம்பர் 26ந்தேதி தொடங்கி ஒருமாத காலம் “இந்திய நாட்டியத் திருவிழா” கோயில் வளாகத்தில் நடக்கும். இதில் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த நாட்டியக் கலைஞர்கள் கலந்துகொண்டு நடன நிகழ்ச்சிகளை வழங்குவார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக