ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

TNA இப்போதைக்கு இப்படியே காலத்தைப் போக்கலாம்.

சுருதி மாறிய பேச்சு
(வாகுலன்)
இனப் பிரச்சினையின் தீர்வு தான் எல்லாவற்றிலும் முன்னுரிமை பெற வேண் டியது என்று தமிழ்த் தலைவர்கள் நீண்ட காலமாகக் கூறி வந்தார்கள். ஐம்பதுகளின் நடுப்பகுதியிலிருந்து மிக அண்மைக்காலம் வரை இத் தலைவர்களின் பேச்சு இவ்வாறா கவே இருந்தது. தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று வெவ்வேறு பெயர்களில் வலம் வந்தாலும் ஒரே பாணியி லேயே பேசினார்கள். தமிழ்ப் பிரதேசங்களின் அபிவிருத்தியில் ஏன் அக்கறை செலுத்துவதில்லை என்ற கேள்விக்கு இவர்களின் பதில் அது.
இன்று சுருதி கொஞ்சம் மாறியிருக்கின்றது. தமிழ்ப் பிரதேசங்களின் அபிவிருத்திக்கு முன்னுரிமை அளிக்கின்றார்கள் என்று தவறாக நினைத்துவிடாதீர்கள். இனப் பிரச் சினைக்கான தீர்வைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு அன்றாடப் பிரச்சினை கள் பற்றிப் பேசுகின்றார்கள்.
புலிகளும் இப்படித்தான் பேசினார்கள். எந்த அரசாங்கத்துடன் பேசினாலும் அன்றாடப் பிரச்சினை பற்றியே பேசினார்கள். இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்பது புலிகளுக்கு வேப்பங்காய் மாதிரி. அதனால் அரசியல் தீர்வு பற்றிய பேச்சைத் தவிர்ப்பதற்காக அன்றாடப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்தார்கள்.
இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களும் இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு அன்றாடப் பிரச்சினைகள் பற்றியே கூடுதலாகப் பேசுகின்றார்கள்.
அன்றாடப் பிரச்சினைகளும் பேச வேண்டியவைதான். உதாரண மாக மீள்குடியேற்றம் பிரதானமான அன்றாடப் பிரச்சினை. அது பற்றிப் பேசாமலிருக்க முடியாது. ஆனால் பிரதான பிரச்சினையான இனப் பிரச்சினையின் தீர்வு பற்றியும் பேச வேண்டுமே. இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்குமேயானால் மற்றைய எல்லாப் பிரச்சினைகளும் மறைந்துவிடலாம்.
புலிகளின் தீர்வு தனிநாடு என்பதால் அவர்கள் அரசியல் தீர்வு பற்றிப் பேசவில்லை. கூட்டமைப்புத் தலைவர்கள் அரசியல் தீர்வு பற்றிய பேச்சைக் குறைத்துக்கொண்டதற்கு அது காரணமல்ல. அரசியல் தீர்வு பற்றி என்ன செய்வது என்பதில் சரியான முடிவுக்கு வர இயலாமையே காரணம்.
இவர்கள் சிலகாலம் தனிநாட்டு அலையோடு அள்ளுண்டு போனவர்கள். இப்போதும் சிலர் அந்த அலையில் நனைய விரும்புகின்ற போதிலும் கூடுதலானோர் அதனோடு தங்களை இனங்காட்ட விரும்பவில்லை. ஆனால் ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வு காண்பதற்காகத் தங்களை முழுமையாக ஈடுபடுத்தவும் இயலாத நிலையில் உள்ளனர்.
இவர்கள் அடிக்கடி வெளிப்படுத்தும் நிலைப்பாடே இவர்களுக்குத் தடையாக இருக்கின்றது. முழுமையான தீர்வைத் தவிர வேறு எதையும் ஏற்க முடியாது என்று கூறகின்றார்கள். இந்த நிலைப்பாடு தீர்வை வெகுதூரம் தள்ளிவிடும் என்பது கூட்டமைப்புத் தலைவர்களுக்குத் தெரியும். இன்றைய நிலையில் கிடைக்கும் தீர்வை ஏற்றுக்கொண்டு கூடுதலான அதிகாரங்களுக்காகத் தொடர்ந்து முயற்சிப்பதே ஆக்கபூர்வமான அணுகுமுறை என்பது அவர்கள் அறியாததல்ல.
முழுமையான தீர்வையே ஏற்போம் எனக் கூறியது புலியின் வாலைப் பிடித்தது போலாகிவிட்டது. அந்த நிலைப்பாட்டிலிருந்து இறங்கி வருவது அவர்களுக்குச் சங்கடமான சங்கதி. அதனால் இனப் பிரச்சினை பற்றிய பேச்சைப் பின்தள்ளிவிட்டு உடனடிப் பிரச்சினைகள் பற்றிப் பேசுகின்றார்கள். இப்போதைக்கு இப்படியே காலத்தைப் போக்கலாம்.
(வாகுலன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக