புதன், 4 ஆகஸ்ட், 2010

இன்ஸ்பெக்டர இந்திராணி அழுகிறார் காலில் விழ வருகிறார் லஞ்சம் சி.டி

நீங்க என்ன வேண்ணா பண்ணுங்க.... கடவுள்னு ஒருத்தர் இருக்கிறார். அந்த இன்ஸ்பெக்டர் அம்மா லஞ்சம் வாங்கினாங்க. அதை நான் வீடியோ பிடிச்சா குற்றவாளியா? லஞ்சம் வாங்கின இன்ஸ்பெக்டர் நல்லவ இல்லே!?’’ - இப்படிக் கதறியபடியே சிறை சென்றார் வீடியோ சுப்பிரமணியம்.அவர் தரப்பில் வெளியான சி.டி. போலீஸை அதிரவைத்திருக்கிறது.
வீடியோ சுப்பிரமணியம் போலீஸிடம் சிக்கி சிறைசென்ற விவகாரத்தை ஏற்கெனவே எழுதியிருந்தோம். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த உயர் போலீஸ் அதிகாரிகள், ‘சுப்பிரமணியம் நல்லவர் அல்ல. லஞ்சம் வாங்கும் அரசு அலுவலர்களையும், போலீஸாரையும் வீடியோ படம் எடுத்து வைத்துக்கொண்டு, பின்னர் அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டுபவர்!’ என்றார்கள்.
மேலும் ‘இன்ஸ்பெக்டர் இந்திராணி செல்போன் ‘சிம்’ வாங்கவே சம்பந்தப்பட்ட கடைக்குச் சென்றிருக்கிறார்.அவரை வீடியோ படம் பிடித்து லஞ்சம் பெற்றதாக மிரட்டியிருக்கிறார்.உண்மையில் இந்திராணி லஞ்சம் வாங்குவதாக வீடியோ ஆதாரங்கள் இருந்தால் அந்த இன்ஸ்பெக்டர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்!’ என்று அறிவித்திருந்தனர்.
தவிர, வீ.சு.வின் வீட்டை இரண்டு முறை சோதனையிட்டுள்ளனர். தொடர்ந்து இந்த விவகாரத் தை விசாரிக்க ஒரு ஏ.டி.எஸ்.பி. தலைமையில் 25 பேர் கொண்ட தனிப்படையை அமைத்திருப்பதாகவும்,தங்களுக்குச் சாதகமாக ஏதாவது சில ஆதாரங்களைத் திரட்டி,வீ.சு.வைத் தேசிய பாதுகாப்புச் சட்டப்படி சிறையில் அடைக்க திட்டமிட்டிருப்பதாகவும் போலீஸ் வட்டாரங்களில் தகவல்கள் உலா வருகின்றன.
இந்தச் சூழ்நிலையில்தான்  வீ.சு.வின் ஆதரவாளர்கள் தரப்பு, ‘இந்திராணி லஞ்ச வீடியோ விவகாரத்தில் நடந்தது என்ன?’என்பதை விளக்கும் விதத்தில் வீடியோ சி.டி.க்களை மீடியாக்களுக்கு அனுப்பியிருக்கிறது. அதைப் பார்த்து திருப்பூர் போலீஸே அலறிக் கொண்டிருக்கிறது. ‘போலீஸுக்கே கிடைக்காத வீடியோ கேஸட்டை வீ.சு. எப்படி யார் மூலம்  மீடியாக்கள் வசம் சேர்த்தார்?’ என்று சிண்டைப் பிய்த்துக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள். அந்த வில்லங்க லஞ்ச சி.டி. நம் அலுவலகத்திற்கும் வந்தது. அதைப்போட்டுப் பார்த்தோம்.
லஞ்சம் தந்ததாகச் சொல்லப்படும் எலக்ட்ரிக்கல் அண்ட் ஹார்டுவேர் கடைக்காரர் சரவணனிடம் இன்ஸ்பெக்டர் இந்திராணி ஏதோ சென்று வாங்கும் காட்சியுடன் அந்தப் படம்  தொடங்குகிறது. அப்போது ‘என்ன மேடம் வாங்கிட்டு இருக்கீங்க?’ என்று வீ.சு.வின் குரல் கணீரென்று ஒலிக்கிறது. உடனே பதறிப்போய் திரும்புகிறார் இன்ஸ்பெக்டர். ‘இல்லே சார்... நான் செல்லுதான் சார் வாங்கினேன்!’என்று தடுமாறுகிறார் இன்ஸ்பெக்டர். ‘இல்லையே, கல்யாணகவர்ல பத்தாயிரம் ரூபா பணம் போட்டு வாங்கினீங்க. அதையெல்லாம் இந்த வீடியோவில எடுத்திருக்கேன்!’ என்று வீ.சு. அதட்டல் தொனியிலேயே பேச, ‘இல்லே சார், நான் சிம்முதான் வாங்கினேன்!’ என்று சாதிக்கிறார்.
ஒரு கட்டத்தில், ‘விட்டுடுங்க சார். அதை எனக்கு வாங்கலே. எங்க டிரைவருக்கெல்லாம் கொடுக்கணும்.அதற்கு இவர் ஒப்புக்கிட்டுத்தான் கொடுத்தார்!’ என்றெல்லாம் அழுகிறார்.  ‘என்னை விட்டுடுங்க.. உங்க கால்ல வேண்ணா விழறேன்!’ என்று அழுதுகொண்டே சுப்பிரமணியத்தின் கால்களில் விழப்போகிறார். அதை அவர் தடுக்கிறார். ‘நீங்க வாங்கின லஞ்சப் பணத்தை அவர்கிட்ட கொடுங்க!’ என்று தொடர்ந்து சொல்கிறார். அப்போதும் தொடர்ந்து காலில் விழுந்து தப்பிக்கவே பார்க்கிறார் இன்ஸ்பெக்டர்.கையெடுத்துக் கும்பிடுகிறார். தேம்பித்தேம்பி அழுகிறார்.
தன் பாக்கெட்டில் கைவிட்டு எதையோ எடுக்க முனைகிறார்.பிறகு சுதாரித்துக்கொண்டு ‘நீங்க ரெக்கார்டு பண்ணாதீங்க சார். என் வாழ்க்கையே பறிபோயிடும்.விட்டுடுங்க!’என்று கெஞ்சுகிறார். எனினும் இன்ஸ்பெக்டரையும், சாட்சி சரவணனையும் நேருக்கு நேர் நிறுத்தி ‘எதற்காக பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். நீ கொடுத்தே’ என்கிற விசாரணையை நடத்துகிறார். இன்ஸ்பெக்டர் முன்னுக்குப்பின் முரணாகவே பேசி ‘என்னை விட்டுடுங்க சார், போயிடறேன்’ என்று கெஞ்சுகிறார்.
வீ.சு.வும் அசராமல், ‘நீங்க ஒரு லேடி  போலீஸ் இன்ஸ்பெக்டர். நான் உங்களை ரெக்கார்டு பண்ணாம விட்டா, உங்க  டிபார்ட்மெண்ட் ஆட்களே என்னை விடமாட்டங்கள்ல? எங்க அதிகாரியவே கடத்திட்டுப் போயிட்டான் வீடியோ சுப்பிரமணியம்னு நீங்க புகார் செஞ்சா என் நிலைமை என்னவாகும்? என்கவுன்ட்டர் பண்ணிடமாட்டீங்க?முதல்ல பணத்தைத் திருப்பிக் கொடுத்துடுங்க.இல்லே உங்களுக்கு மேலே உள்ள போலீஸ் அதிகாரிக்கு போன் பண்ணி அவங்களை வந்து மீட்டுட்டுப் போகச் சொல்லுங்க’ என்கிறார் வீ.சு.
அதற்கும் கண்ணைத் தேய்த்துக்கொண்டு சிறு பெண் போல் அழுகிறார் அந்த இன்ஸ்பெக்டர். திரும்பவும் காலில் விழ வருகிறார். வீ.சு. நகர்ந்துகொண்டே டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு போன் செய்கிறார். இன்ஸ்பெக்டர் இந்திராணி லஞ்சம் வாங்கி வீடியோவில் மாட்டியிருக்கும் தகவலைச் சொல்கிறார். சில நிமிடங்களில் அந்தப் பகுதியே பரபரப்பாகிறது. அந்தக் கடைக்கு வெளியே உள்ள சாலையில் திமுதிமுவென்று வரும் போலீஸாரை நோக்கி கேமரா திரும்புகிறது. போலீஸ் வீ.சு.விடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது தெரிகிறது. பிறகு அவர்கள் கேமராவைப் பிடுங்க, ‘நானே கொடுக்கறேன் சார்!’ என்று வீ.சு. கத்துவதும் ஒலிக்கிறது.
தொடர்ந்து கேமராவில் ஒலிப்பதிவு மட்டும் கேட்கிறது.“நீங்க என்னவேண்ணா பண்ணுங்க.... கடவுள்னு ஒருத்தர் இருக்கிறார்.. ஒரு இன்ஸ்பெக்டர் அம்மா லஞ்சம் வாங்கினாங்க. அதை நான் பிடிச்சா குற்றவாளியா?’’ என்று உறுமுவது கேட்கிறது.
இந்த சி.டி பற்றி வீ.சு.வின் நண்பர்கள் வட்டாரத்தில் விசாரித்தபோது, “வீ.சு.வை அடித்து உதைத்து போலீஸார் வேனில் ஏற்றியபோதே நூற்றுக்கணக்கான மக்கள் கூடிவிட்டனர்.அதில் தனக்குத் தெரிந்த ஒருவரிடம்தான் இந்த கேஸட்டை கழற்றிக் கொடுத்துவிட்டாராம் வீ.சு. இதற்கு முன்பு அவர் எடுத்த கேஸட்டில் அந்தம்மா தொலைபேசியில் லஞ்சம் கேட்டது,நேரில் லஞ்சம் வாங்கியது எல்லாமே இருக்கிறதாம். நிச்சயம் அவர் சிறையிலிருந்து திரும்பிய பின்பு இதில் நடந்த உண்மையை முழுமையாக வெளியிடுவார்!’’  என்றனர். 
இந்த வீடியோ?சுப்பிரமணியத்தால் ‘யாருக்கெல்லாம் பணிநீக்க, பணிஇடமாற்ற ஓலை வருமோ?’ என்ற கலங்கி நிற்கிறது போலீஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக