ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

தேமுதிகவின் தலைமையை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி-விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை: தேர்தலின்போது கூட்டணி குறித்து அறிவிப்பேன். தேமுதிகவின் தலைமையை ஏற்கும் கட்சியுடன்தான் கூட்டணி வைப்பேன் என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூரில் தே.மு.தி.க. சார்பில் கேப்டன் விஜயகாந்த் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இது முற்றிலும் ஏழைகளுக்கான இலவச திருமண மண்டபம் என விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. முதல் நிகழ்ச்சியாக ஆறு ஜோடிகளுக்கு இலவச திருமண விழா நடைபெற்றது.

விஜயகாந்த் தலைமை தாங்கி ஆறு ஜோடிகளுக்கம் திருமணம் செய்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில்,

ஏழை-எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக இலவச திருமண மண்டபம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் மண்டபம் கட்டுவதற்கு ஆளுங்கட்சியினர் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்தனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தடுத்து நிறுத்த பார்த்தார்கள்.

இதுவரை நடத்தப்பட்ட இடைத்தேர்தல்கள் எல்லாம் ஆளுங்கட்சியினர் தேர்தலாக நடந்தது. நடைபெற உள்ள பொதுத்தேர்தல் பொது மக்கள் தேர்தலாக இருக்க வேண்டும். எல்லாம் பெண்கள் கையில்தான் இருக்கிறது. உங்களை நம்பிதான் நான் இருக்கிறேன்.

அந்த கட்சியுடன் கூட்டணி, இந்த கட்சியுடன் விஜயகாந்த் பேச்சுவார்த்தை நடத்துகிறார் என்று பல்வேறு தகவல்கள் வருகின்றன. தேர்தல் வரட்டும் நாங்கள் யாருடன் கூட்டணி என்பது அப்போது தெரியும். விஜயகாந்த் எங்கு இருக்கிறான் என்று தெரியும்.

இன்றைய அரசியலில் தேமுதிக இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலை இருக்கிறது. நான் ஏற்கனவே சொன்னது போல், என் தலைமையில் வரும் கட்சிகளுடன் கூட்டணி வைக்க தயார். தமிழ்நாட்டில் திமுக, அதிமுக ஆட்சியை மக்கள் மாறி மாறி பார்த்து விட்டார்கள். தேமுதிகவிற்கும் வரும் தேர்தலில் ஆதரவு கொடுப்பார்கள். பொதுத் தேர்தலை பெண்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்றார் விஜயகாந்த்.

இதுவரை, யாருடனும் கூட்டணி கிடையாது, மக்களுடனும், தெய்வத்துடனும் மட்டுமே கூட்டணி என்று கூறி வந்தார் விஜயகாந்த். ஆனால் தொடர்ந்து நடந்த தேர்தல்களில் தொடர் தோல்வியைச் சந்தித்து வந்ததால் கட்சியினர் சோர்வடைந்து விட்டனர்.

நல்ல வாக்கு வங்கியை வைத்திருக்கும் நாம் யாராவது ஒரு கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால்தான் கட்சிக்கு நல்லது என்று விஜயகாந்த்தை நச்சரிக்க ஆரம்பித்தனர்.

இதையடுத்து முதல் முறையாக தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என விஜயகாந்த் அறிவித்துள்ளார். மேலும் தனது தலைமையில்தான் கூட்டணி அமையும் என்பதையும் விஜயகாந்த் மீண்டும் கூறியுள்ளார்.

இதன் மூலம் திமுக, அதிமுக கூட்டணியில் விஜயகாந்த் இடம் பெற மாட்டார் எனத் தெரிகிறது. மாறாக, காங்கிரஸ் கட்சியை தனியாக இழுத்து அந்தக் கூட்டணிக்குத் தலைமை தாங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு கூட்டணி அமைந்தால் அதில் பாமகவும் இடம் பெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி ஒரு கூட்டணி அமைந்தால் அது நிச்சயம் திமுக, அதிமுகவுக்கு பலமான பாதிப்பை ஏற்படுத்தலாம். அதில் அதிமுகவுக்கே அதிக பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே விஜயகாந்த்தின் வியூகம் என்ன, அவர் அமைக்கப் போகும் கூட்டணி யாருடன் என்பது மீண்டும் எதிர்பார்ப்புக்குரியதாகியுள்ளது.

முன்னதாக விஜயகாந்த் வெளியிட்டிருந்த அறிக்கை:

இலங்கை தமிழர் இன்னல் தீரும்வரை எனது பிறந்த நாளை கொண்டாடுவதில்லை என்றிருந்தேன். எனினும் 2006-ம் ஆண்டு முதல் தொண்டர்களின் வேண்டுகோளுக்கிணங்க எனது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக அனுசரித்து வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நற்பணிகளை செய்து வருகிறோம்.

சென்ற ஆண்டு எனது பிறந்த நாளில் பிறக்கும் ஏழை பெண் குழந்தைகளுக்கு 10 ஆயிரம் முன்பணமாக கட்டி 20 ஆண்டுகளில் 2 லட்சம் கிடைக்கும் வகையில் எனது சொந்த செலவில் 40 லட்சம் கட்டியுள்ளேன்.

இந்த அடிப்படையில் இந்த ஆண்டு எனது பிறந்த நாளையொட்டி ஏழை குடும்பங்களை சேர்ந்த ஆண்களுக்கும், பெண்களுக்கும் இலவச திருமணங்களை நடத்துவது என்று திட்டமிட்டுள்ளேன். வாழ்க்கையில் திருமணச் செலவு பெரும் பங்கு வகிக்கின்றது.

இந்தச் சுமையை குறைக்கும் வகையில் `கேப்டன் விஜயகாந்த் திருமண மண்டபம்' ஒன்றை புதிதாக மாமண்டூரில் கட்டியுள்ளேன். அதில் ஏழை, எளிய மக்களுக்கு இலவச திருமணங்கள் நடத்துவது என்று தீர்மானித்துள்ளேன். மேலும் இந்த மண்டபத்தை அந்த ஊர் மக்களுக்கே உடைமையாக்குவது என்றும் முடிவெடுத்துள்ளேன்.

இதே முறையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள கழக நிர்வாகிகளும், ஆதரவாளர்களும் தங்களால் இயன்ற அளவு ஏழை, எளிய மக்களுக்கான இலவச திருமணங்களை எனது பிறந்த நாளையொட்டி, இந்த மாதம் முழுவதும் ஆங்காங்கே நடத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் 2012-ம் ஆண்டில் ஏழைகளே இல்லாத நிலையை உருவாக்க வேண்டுமென்று, 10-வது மற்றும் 11-வது ஐந்தாண்டு திட்டங்களில் திட்டமிடப்பட்டது. ஆனால் இன்றும் ஏழைகளின் எண்ணிக்கை அன்று இருந்ததைப் போலவே 20 சதவிகிதமாகவே உள்ளது. இதனால் கவர்ச்சி திட்டங்களைவிட வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டுமென்று வற்புறுத்தி வருகிறேன்.

இலவச திட்டங்கள் என்பவை, வலிக்கு நிவாரணம் போல் தற்காலிகமாக பயனளிக்கும். அதே நேரத்தில் நோய்க்கு மருந்து போல மக்களுக்கு தரமான கல்வியையும், கண்ணியமான வேலையையும் பெற்றுத்தருவதே ஒரு அரசின் நோக்கமாக இருக்க வேண்டும்.

வெறும் 2000 கிராம நிர்வாக அலுவலர்கள் பதவிக்கு சுமார் 10 லட்சம் பேருக்கு மேல் மனு போடுகிறார்கள் என்பதில் இருந்தே தமிழ்நாட்டின் அவலநிலை நன்கு தெரிகிறது.

இந்த நிலையை மாற்றிட, ஏழைகள் இல்லாத நாடு எங்கள் நாடு என்ற லட்சியத்தை அடைவதற்கு மக்களிடையே விழிப்புணர்ச்சியையும், மகத்தான வறுமை ஒழிப்பு இயக்கத்தையும் உருவாக்க எனது பிறந்த நாள் பயன்படட்டும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக