திருச்சி அடுத்த விராலிமலையில் ஆசிரமம் நடத்தி வந்தவர் பிரேமானந்தா. இவர் கற்பழிப்பு மற்றும் கொலை வழக்குகளில் 1994ம் ஆண்டு கைதாகி கடலூர் மத்திய சிறையில் இரட்டை ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். சர்க்கரை நோய், கண் பார்வை குறைபாடு ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டு இரண்டு ஆண்டுக்கு முன் கடலூர் அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் சிறுநீரகத்தில் கல், நுரையீரல் வீக்கம், இருதயக் கோளாறு, ரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தால் உயிரை காப்பாற்ற முடியும், என ஐகோர்ட்டில் அவரது சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் பேரில் பிரேமானந்தா தனியார் மருத்துவமனையில் தங்கி, சிகிச்சை பெற பரோல் வழங்கி, கோர்ட் உத்தரவிட்டது. கடந்த 20 நாட்களாக கடலூர் கிருஷ்ணா மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது வக்கீல் யானை ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: பிரேமானந்தாவுக்கு சிறுநீரகத்தில் ஏற்பட்ட கல்லை அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு நுரையீரல் வீக்கம், இருதயக் கோளாறு, கண் பார்வை குறைபாடு, ரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற பல்வேறு நோய்கள் உள்ளன. சர்க்கரை நோய் இருப்பதால் அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்துவதில் சிரமம் உள்ளது. அதற்கு இரண்டு மாதங்களுக்கு மேல் மருத்துவமனையில் தங்கி, படிப்படியாக சிகிச்சை அளிக்க வேண்டும், என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதன் அடிப்படையில், பிரேமானந்தா மேலும் ஒரு மாதம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற பரோல் வழங்க வேண்டும் என கடலூர் மத்திய சிறை கண்காணிப்பாளரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு வக்கீல் ராஜேந்திரன் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக