சனி, 21 ஆகஸ்ட், 2010

குமுதம் பிரச்சினை ஓய்ந்தது!- கருணாநிதிக்கு 'இந்து' ராம் நன்றி !

குமுதம் குழுமத்தில் ஏற்பட்ட அனைத்துப் பிரச்சினைகளும் சுமூகமாக தீர்ந்துவிட்டதாகவும், இதற்கு வழிகோலிய தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் இந்து நாளிதழ் முதன்மை ஆசிரியர் என்.ராம் தெரிவித்துள்ளார்.

குமுதம் குழுமத்தை ஆரம்பித்த எஸ் ஏ பி அண்ணாமலையின் மறைவுக்குப் பிறகு, அந்தக் குழுமத்தின் அனைத்துப் பத்திரிகைகளுக்கும் நிர்வாக ஆசிரியராகவும், உரிமையாளராகவும் இருந்தார் அவரது மகன் டாக்டர் எஸ் ஏ பி ஜவஹர் பழனியப்பன். அமெரிக்காவில் மருத்துவராகவும் பணியாற்றுகிறார் இவர்.

குமுதத்தில் பதிப்பாளராக இருந்த பி வி பார்த்தசாரதியின் மகனான என் வரதராஜனுக்கு நிர்வாக இயக்குநர் பதவி அளித்து, நிறுவனத்தை அவரது பொறுப்பில் விட்டிருந்தார் ஜவஹர். அவருக்கு சம்பளமாக ரூ 6.25 லட்சம் அளித்து வந்தார்.

ஆனால் குமுதம் நிர்வாகத்திலும், ஆசிரியர் குழு விவகாரங்களிலும் ஜவஹருக்கும் வரதராஜனுக்கும் சுமூகமான உறவு இல்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இரு தரப்பினரும் மாறி மாறி புகார் கூறி வந்தனர்.

டாக்டர் ஜவஹர் பழனியப்பன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வரதராஜன் மீது புகார் கொடுத்தார். அதில் குமுதம் அலுவலகத்தில் வரதராஜன் பெரும் நிதி மோசடி செய்து விட்டதாகவும், தனக்கு வழங்கப்பட்ட ரூ 6.25 லட்சம் சம்பளத்தைத் திருத்தி ரூ 10 லட்சமாக மோசடி செய்து பெற்று வந்ததாகவும் அந்தப் புகாரில் குறிப்பிட்டிருந்தார். ரூ 25 கோடிக்கும் மேல் அவர் மோசடி செய்ததாகவும் கூறினார்.

இதைத் தொடர்ந்து வரதராஜன் கைது செய்யப்பட்டார். ஆனால் முதல்வர் கருணாநிதியின் தலையீட்டின்பேரில், அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் கருணாநிதி, குமுதம் பிரச்சினை சுமூகமாகத் தீரவேண்டும் என்பதற்காகவே வரதராஜனை பிணையில் விடுவிக்கச் சொன்னதாகக் கூறினார்.

இதற்கிடையே குமுதம் விவகாரத்தில் ஜவஹருக்கும் வரதராஜனுக்கும் சமரசம் ஏற்படுத்தும் முயற்சி அரசின் ஆதரவுடன் தொடங்கியது. கடந்த நான்கு மாதங்களாக இந்த முயற்சி நடந்து வந்தது.

இருவருக்கும் பொது நண்பரான இந்து நாளிதழ் முதன்மை ஆசிரியர் என் ராமின் இல்லத்தில் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதியன்று இறுதிச் சுற்று சமரசப் பேச்சு நடந்தது. இதில் ஜவஹர் மற்றும் வரதராஜன் ஆகிய இருவருமே கலந்து கொண்டனர்.

இதன் முடிவில் இரு தரப்புக்கும் சுமூகமான ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டது. இதில் இருவரும் கையெழுத்திட்டு ஏற்றுக் கொண்டனர்.

இதன்படி குமுதம் குழுமத்தின் இரு இதழ்கள் வரதராஜன் மற்றும் டாக்டர் பி. ஸ்ரீனிவாசன் ஆகியோருக்கும், மீதம் உள்ள ஏழு இதழ்களின் உரிமை டாக்டர் பழனியப்பன் மற்றும் அவரது தாயார் கோதை அண்ணாமலை ஆகியோருக்கும் என முடிவு செய்யப்பட்டது.

குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்குள் இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து என் ராம் ஒரு செய்திக் குறிப்பையும் வெளியிட்டுள்ளார்.

அதில், குமுதம் பிரச்சனைக்கு சுமுகமான தீர்வு காணப்பட்டுவிட்டதாகவும், இந்த விவகாரத்தை தமிழக சட்டமன்றத்தில் அறிவித்தது மட்டுமின்றி, அதற்கான தீர்வுக்கு வழியமைத்துத் தந்த தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக