சென்னை:இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ மீது, சென்னை செஷன்ஸ் கோர்ட்டில் நேற்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில், "ஈழத்தில் நடப்பது என்ன' என்ற தலைப்பில் வைகோ பேசினார். இறையாண்மைக்கு எதிராகவும், தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக பேசியதாகவும் வைகோ மற்றும் கண்ணப்பன் மீது வழக்கு தொடரப்பட்டது.
இதில் வைகோ மீது, ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின், இவ்வழக்கு மூன்றாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்காக, விசாரணையை நீதிபதி பூபாலன் தள்ளி வைத்திருந்தார். செஷன்ஸ் கோர்ட்டில் நேற்று வைகோ ஆஜரானார்.அவர் மீதான குற்றச்சாட்டுகளை கோர்ட் அதிகாரி வாசித்தார். இதற்கு பதிலளித்த வைகோ, "நான் பேசியதை மறுக்கவில்லை; என் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன்' என்றார். இந்த வழக்கு விசாரணையை செப்., 6ம் தேதிக்கு நீதிபதி பூபாலன் தள்ளி வைத்தார்.
கோர்ட்டிற்கு வெளியே வந்த வைகோ, நிருபர்களிடம் கூறியதாவது:என் மீதும், கண்ணப்பன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கில் இருந்து கண்ணப்பனை விடுவித்துள்ளனர். தி.மு.க.,வில் சேர்ந்ததால் அவர் பேசியது குற்றமாகாதா? எதிர்க்கட்சியினர் என்ன பேசினாலும் குற்றமா? மத்திய, மாநில அரசுகள் இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்து விட்டன. ஐ.நா., பொதுச் செயலர், மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார்.
இதற்காக இலங்கையில் போராட்டம் நடத்தப்பட்டது; இதை இந்தியா கண்டிக்கவில்லை.அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா மீதான வழக்கில் வாய்தா வாங்குவதாகக் கூறி ஆர்ப்பாட்டம் நடத்துவது கேலிக்கூத்தானது. முல்லை பெரியாறு வழக்கிலும் பல வாய்தாவை இந்த அரசு வாங்கியுள்ளது. மக்கள் மன்றத்தில் அரசுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.இவ்வாறு வைகோ கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக