ஹைதராபாத்: நடிகை ரோஜா அதிமுகவில் இணைந்து வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஹைதராபாத்தில் பரபரப்பு கிளம்பியுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்தவரான ரோஜா தமிழ் சினிமாவில் தான் முதலில் அறிமுகமானார். தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வமணியை மணந்தார்.
சினிமா வாய்ப்புகள் எல்லாம் தேய்ந்து போன பின்னர் ஆந்திர அரசியலில் நுழைந்தார். முதலில் தெலுங்கு தேசத்தில் இணைந்தார். அந்தக் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுடன் ஏற்பட்ட மோதலையடுத்து, காங்கிரசுக்குத் தாவினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி இவரை காங்கிரசில் சேர்த்துக் கொண்டார். ஆனால், அவரது மறைவுக்குப் பின் காங்கிரசில் ரோஜாவை கண்டுகொள்ளவே ஆளில்லை.
இதனால் வேறு கட்சி தேடிக் கொண்டிருந்தவருக்கு தமிழக சட்டமன்றத் தேர்தல் நினைவுக்கு வந்துவிட்டதாகத் தெரிகிறது. அதே போல குஷ்பு போன்ற கலர்புல் நபர்களை திமுக இழுத்துப் போட்டுள்ளதால் அதிமுகவும் தனது கட்சிக்கு பிரச்சாரம் செய்ய நடிகை, நடிகர்களுக்கு வலைவீசி வருகிறது.
கடந்த தேர்தலில் சிம்ரன், விந்தியா போன்றவர்கள் எல்லாம் அதிமுகவுக்காக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ததது நினைவுகூறத்தக்கது.
இப்போது அதிமுக வீசிய வலையில் ரோஜா சி்க்கியுள்ளதாகத் தெரிகிறது. விரைவில் ரோஜா அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைச் சந்தித்து கட்சியில் இணைவார் என்கிறார்கள்.
ஆனால் சிம்ரன், விந்தியா போல அல்லாமல் ரோஜா தானும் தேர்தலில் போட்டியிட விரும்புவதாகக் கூறப்படுகிறது. குஷ்பு போன்றவர்களை திமுக நிறுத்தினால் எதிர்த்து ரோஜாவை அதிமுக நிறுத்தலாம் என்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக