ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

சுடக்கூடாது-ப.சிதம்பரம் எந்த பிரச்சனையாக இருந்தாலும் கைது செய்யலாம்

எந்த பிரச்சனையாக இருந்தாலும் கைது செய்யலாம்;சுடக்கூடாது-ப.சிதம்பரம்

இலங்கை போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களில் ஒரு பகுதியினர் இன்னும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். போர் முடிந்ததும் அவர்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவார்கள் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்து இருந்தார். ஆனால் அதன்படி நடக்கவில்லை.

சமீபத்தில் சென்னைக்கு வந்த இலங்கை தமிழ் எம்.பி.க்கள் முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து இலங்கை தமிழர்களின் நிலைமையை விளக்கினார்கள்.
முகாம்களில் அடைப்பட்டு கிடக்கும் தமிழர்களை சொந்த இடங்களுக்கு இலங்கை அரசு அனுப்பவில்லை. அதற்கு பதிலாக தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் சிங்களர்களை குடியமர்த்தி வருகிறது என்று தெரிவித்தனர்.

இதையடுத்து முதலமைச்சர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் மத்திய அரசு ஒரு குழுவை அனுப்பி மறுவாழ்வு பணிகளை ஆய்வு செய்யவேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று விரைவில் ஒரு சிறப்பு பிரதிநிதியை இலங்கைக்கு அனுப்பி வைப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்தார்.

இந்நிலையில் இன்று முதல்வர் கருணாநிதியை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேரில் சந்தித்தார்.



இச்சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் ப.சிதம்பரம்.



அப்போது, ‘’இலங்கைத்தமிழர் மறுவாழ்வுப்பணிகள் குறித்து முதல்வருடன் ஆலோசனை செய்தேன்.மறுவாழ்வுப்பணிகளை பார்வையிடுவதற்காக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி இந்த வாரம் இலங்கை செல்கிறார். வீடுகள்,கட்டுமானப்பணிகளை இந்திய அதிகாரி நேரில் ஆய்வு செய்வார்’’என்று தெரிவித்தார்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து சுடப்படுகிறார்களே? என்ற கேள்விக்கு,

’’இந்த ஆண்டு ஒரு நிகழ்வுதான் நடந்துள்ளது. அது வருந்தத்தக்க விசயம். இந்தியா-இலங்கை ஒப்பந்தப்படி கடலில் மீனவர்களை சுடக்கூடாது. அதை நாங்கள் இலங்கையிடம் வலியுறுத்தி கூறியுள்ளோம்’’என்று தெரிவித்தார்.



எந்த பிரச்சனையாக இருந்தாலும் கைது செய்யலாம். சுடக்கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்தி உள்ளோம்.



திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியில் நிறைய பேர் சேருகிறார்களே காரணம் என்ன? என்ற கேள்விக்கு, ’’ மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் தமிழ்நாட்டில் திமுகவும் மக்கள் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.

அதனால் சமுதாய நோக்குடன் நல்ல எண்ணம் கொண்டவர்கள் இங்கு வந்து சேருகிறார்கள்’’என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக