இலங்கை சென்றதால் சர்ச்சையில் சிக்கிய நடிகை அசின் ரகசியமாக சென்னை வந்தார். மலையாளத்தில் ஹிட்டான பாடிகார்ட் படம் தமிழில் ரீமேக் ஆகிறது. சித்திக் இயக்குகிறார். இதில் விஜய், அசின் ஜோடியாக நடிக்கின்றனர்.
இப்படத்தின் இறுதிகட்டப் பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இதில் நடிப்பதற்காகவே அசின் கடந்த திங்கட்கிழமை அன்று வந்தார்.
கிழக்குகடற்கரை சாலையில் ஒரு பங்களாவில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தார். அசம் பாவிதங்கள் நிகழாமல் தடுக்க பங்களா வெளியே போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர்.
இன்று எண்ணூரில் படப்பிடிப்பு நடந்தது. அங்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நடிகர் நடிகைகள் இலங்கை செல்லக் கூடாது என்று திரைப்பட சங்கங்கள் தடை விதித்துள்ளன.
இந்த தடையை மீறி அசின் இந்தியில் தயாராகும் ரெடி படப்பிடிப்புக்காக இலங்கை சென்றார். இலங்கை அதிபர் ராஜபக்சே மனைவியுடன் தமிழர் பகுதிகளில் சுற்றுப் பயணமும் செய்தார். அவர் இலங்கை செல்லக் கூடாது என்று ஏற்கனவே திரைப்பட சங்கங்களும் நாம் தமிழர் இயக்கமும் வற்புறுத்தின. அதை மீறி சென்றதால் எதிர்ப்பு வலுத்தது.கடந்த மாதம் சென்னையில் கூடிய நடிகர் சங்க பொதுக்குழுவில் அசினுக்கு ராதாரவி, சத்யராஜ் போன்றோர் கண்டனம் தெரிவித்தனர். அசின் நடிகர் சங்கத்தில் ஆஜராகி மன்னிப்பு கேட்க வேண்டும், என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் அசின் இலங்கை சென்ற விவகாரம் குறித்து திரைப்பட சங்கங்களின் கூட்டுக்குழு கூடி விரைவில் முடிவு செய்யும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராமநாராயணன் கூறி உள்ளார்.இலங்கை சென்ற விவகாரம் நடிகர் சங்கத்தின் கண்டனம் போன்றவை குறித்து அசினிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
இலங்கை பயணத்தை சிலர்தான் எதிர்க்கிறார்கள். என் மீது அவதூறுகள் பரப்பப்படுகின்றன. குறிப்பிட்ட சிலர்தான் இதுபோன்ற செய்திகளை பரப்புகிறார்கள். ஏற்கனவே இந்தி படப்பிடிப்புக்காக மும்பை போனதும் நான் அங்கேயே தங்கிவிட முடிவெடுத்து விட்டதாக வதந்திகள் கிளப்பினர். தொழில் விஷயமாகத்தான் அங்கு போனேன்.
மலையாளத்தில் இருந்து தமிழ் படங்களுக்கு வந்ததும் சென்னையில் தங்கினேன். அதுபோல் இந்திப்படங்களில் நடிப்பதால் மும்பைக்கு போனேன்.
தமிழ் படங்களில் நடிக்க மறுப்பதாக வரும் தகவல்களிலும் உண்மையல்ல. சித்திக் இயக்கும் தமிழ் படத்தில் தற்போது நடித்துக்கொண்டு இருக்கிறேன். இந்த படத்தின் கதை மூன்று வருடங்களுக்கு முன்பே எனக்குத் தெரியும்.
சல்மான்கான் ஜோடியாக ரெடி இந்திபடத்தில் நடிக்கிறேன். சல்மான்கான் ஜாலியாக பழகக்கூடியவர். அவருடன் நடிப்பது சிறந்த அனுபவம்.
கொச்சின் ஐ.பி.எல். கிரிக்கெட் அணிக்கு விளம்பர தூதுவராக இருப்பது பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எனக்கு விளையாட்டு ரொம்ப பிடிக்கும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக