புதன், 18 ஆகஸ்ட், 2010

ரணில்,மாத்தயாவை பிரபாகரன் கூண்டில் போட்டு கொலை செய்ததை விட பொன்சேகாவுக்கு இழைக்கப்படுகின்ற அநீதி

ஜெனரல் சரத் பொன்சேகாவின் பதவிகளைப் பறித்து ஓய்வூதியத்தையும் நிறுத்தும் அளவிலான தீர்ப்பொன்றை இராணுவ நீதிமன்றம் வழங்கியிருப்பதன் மூலம் முழு இராணுவத்துறையும் அவமானப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இராணுவ நீதிமன்றத்தின் வழக்கு விசாரøணகளின் அனைத்து அறிக்கைகளும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் வலியுறுத்தினார்.
பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்தி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரது உரிமைகளைப் பறித்து அவரை சிறையில் அடைத்து வைத்திருப்பதானது மாத்தயாவை பிரபாகரன் கூண்டில் போட்டு கொன்றதையும் விட கொடுமையானது. இது உறுப்பினர் ஒருவரது சிறப்புரிமைப் பிரச்சினை. இதன் விசாரணை நடவடிக்கைகள் பொம்மையைப் போன்று போலியானதாக அமைய முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குடியியல் திருத்தச் சட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கூறுகையில்,
இந்தப் பாராளுமன்றத்தில் பல்வேறு சட்டங்கள் அங்கீகரிக்கப்படுகின்றன. பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்படுகின்ற சட்டங்களை எந்த நிறுவனமோ அல்லது நீதித்துறையோ நீதிமன்றங்களோ அமுல்படுத்துகின்றனவா அல்லது கடைப்பிடிக்கின்றனவா என்று கேள்வியெழுப்பினால் அவ்வாறு இல்லை என்பதே பதிலாக இருக்கும்.
முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் சரத் பொன்சேகா தற்போது மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார். இருப்பினும் அரசாங்கத்தினாலும் இராணுவ நீதிமன்றத்தினாலும் அவரது உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்ட நிலையில் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார்.
இராணுவ சேவையில் உள்ள ஒருவர் அரசியலில் ஈடுபடவோ அல்லது தேர்தல்களில் போட்டியிடவோ முடியாது என்பது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் அவ்வாறான சேவையில் உள்ள ஒருவர் அந்த சேவையில் இருந்து விலகியதன் பின்னரோ அல்லது ஓய்வு பெற்றதன் பின்னரோ அரசியலில் ஈடுபடுவதற்கும் தேர்தல்களில் போட்டியிடுவதற்கும் சகல உரிமைகளும் இருக்கின்றது என்று அரசியலமைப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான சட்ட வாக்கத்தில் நாம் கைச்சாத்திட்டிருக்கின்றோம். ஆனாலும் இங்குள்ள நிலைமை என்ன என்பது கேள்விக்குறியாகும். முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்பு கொண்டிருந்ததாக இராணுவ நீதிமன்றத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி அலுவிகார குற்றம் சுமத்தியிருந்தார். இந்த குற்றச்சாட்டினை இராணுவ நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுள்ளது.மேலும் அவர் மீது தேசத் துரோகம், சதித் திட்டம், அரச விரோதம் என்றவாறெல்லாம் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜெனரல் சரத் பொன்சேகா கூட்டுப் படைகளின் பிரதானி என்ற பதவியை 2009 நவம்பர் மாதம் 12 ஆம் திகதி ராஜினாமா செய்வதாக அறிவித்ததையடுத்து அதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஏற்றுக் கொண்டதாக அறிவித்தார்.
அன்றைய கால கட்டத்தில் அரசாங்கம் முதலில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதா அல்லது பொதுத் தேர்தலை நடத்துவதா என்ற அறிவிப்பு எதனையும் விடுக்காத காரணத்தினால் ஐக்கிய தேசியக் கட்சிகளாகிய நாம் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவில் தாமதத்தை ஏற்படுத்தினோம். அது தொடர்பில் அப்போது நாம் எதுவும் கூறாதிருந்தோம்.
இந்நிலை அதே மாதம் 26 ஆம் திகதி நடைபெற்ற கட்சிக் கூட்டத்தின் போது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கென பொது வேட்பாளர் ஒருவரைத் தெரிவது என எமது கட்சியின் தவிசாளர் காமினி ஜயவிக்கிரம பெரேரா கொண்டு வந்த யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பேரிலே நாம் ஜெரனல் சரத் பொன்சேகாவுடன் தொடர்பினை ஏற்படுத்தினோம். அந்த சந்தர்ப்பத்தில் ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ சேவையில் எந்த பதவியிலும் இருக்கவில்லை என்பதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். இவ்வாறான நிலையில் ஜெனரல் பொன்சேகா எமது கட்சியுடன் தொடர்பு கொண்டிருந்ததாக ஜனாதிபதி சட்டத்தரணியினால் கூறப்பட்ட பொய்க் குற்றச்சாட்டினை ஏற்றுக் கொண்ட இராணுவ நீதிமன்றம் அவரது பதவிகளையும் பட்டங்களையும் பறித்ததுடன் அவரது ஓய்வூதியத்தையும் நிறுத்துவதற்கு உத்தரவிட்டுள்ளது.
ஜெனரல் பொன்சே விடயத்தில் உண்மையான நிலைவரத்தை கண்டறியாத இராணுவ நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பினால் இந் நாட்டின் முழு இராணுவத்துறைக்குமே அவமானத்தை ஏற்படுத்திவிட்டது. மேலும் ஜெனரல் சரத்பொன்சேகா சி.டி.எம்.ஏ. தொலைபேசியுடன் தொடர்பு கொண்டு பேசியதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் சாட்சியமளித்துள்ளார். அப்படியாக அதில் பதிவு செய்யப்பட்டுள்ள குரல் ஜெனரல் பொன்சேகாவினுடையதா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டிய தேவையும் இராணுவ நீதிமன்றத்துக்கு இருக்கின்றது. இவ்வாறிருக்கும்போது இராணுவ நீதிமன்றத்தினால் ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிராக இவ்வாறானதொரு தீர்ப்பினை எவ்வாறு வழங்க முடியும்? பொய்யான குற்றச்சாட்டுகளாக எமது சக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உரிமைகள் பறிக்கப்பட்டவராகியுள்ளார். ஜெனரல் பொன்சேகாவின் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டமையானது ஏனைய அரச ஊழியர்களது ஓய்வூதியத்தையும் நிறுத்துவதற்கு ஒரு ஆரம்பமாக அமைந்துள்ளது. மேலும் புலிகளின் இரண்டாம் நிலைத் தலைவரான மாத்தயாவை பிரபாகரன் கூண்டில் போட்டு கொலை செய்ததை விட பொன்சேகாவுக்கு இழைக்கப்படுகின்ற அநீதி கொடுமையானது என்றே கூற வேண்டும்.
இது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரது சிறப்புரிமைப் பிரச்சினையாகும். இது தொடர்பிலான விசாரணைகள் போலியானதாக அமையாமல் அதனை இந்த சபையில் விவாதிப்பதற்கும் சந்தர்ப்பங்கள் உருவாக்க வேண்டும்.அத்துடன் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான இராணுவ நீதிமன்றத்தின் அனைத்து வழக்கு விசாரணை நடவடிக்கைகளின் அறிக்கைகளையும் இந்த பாராமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன். ஏனெனில் அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராவார் என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக