வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

ஜெயலலிதாவுடன் சேர்ந்த இடதுசாரிகளுக்கு "சேர்வார் தோஷம்''!: கருணாநிதி

நேற்று வரை ஜெயலலிதாவின் சிறுதாவூர் நில ஆக்கிரமிப்புகள், பற்றி அரசிடம் கொண்டு வந்து மனு கொடுத்து, அதை காலி செய்யச் சொன்னவர்களும் இதே கம்யூனிஸ்ட்டுகள்தான். இன்றைக்கு அதைப் பற்றி மூச்சு விடாமல் இருப்பவர்களும் இதே கம்யூனிஸ்ட்டுகள் தான்! என்று முதல்வர் [^] கருணாநிதி [^] கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருப்பூர் தொகுதி எம்எல்ஏ கோவிந்தசாமி தனது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோருடன் திமுகவில் இணைந்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய கருணாநிதி கூறியதாவது:

எனக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை உடைத்து அதைக் கலகலக்கச் செய்து அதிலியிருந்து ஆயிரக்கணக்கானவர்களை திமுகவுக்கு இழுக்க வேண்டுமென்ற எண்ணம் எதுவும் இல்லை. அப்படிப்பட்ட அடிப்படை நோக்கம் கொண்டவனல்ல நான்.

ஆனால், நல்ல எண்ணம் கொண்ட ஒரு கட்சியை வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிய வேண்டுமென்று யார் எண்ணினாலும், அவர்களுக்கு அஞ்சக் கூடியவனல்லன் நான் என்பதை பல நேரங்களில் நிரூபித்துக் காட்டியிருக்கிறேன்.

நான் என்னுடைய பதினான்காவது வயதில் அரசியல் வாழ்வில் ஈடுபட்டேன். தந்தை பெரியாரின் பேச்சைக் கேட்டு, பட்டுக்கோட்டை அண்ணன் அழகிரிசாமியின் பேச்சைக் கேட்டு, அண்ணன் ஜீவானந்தத்தின் பேச்சைக் கேட்டு, அந்த அரசியல் கொள்கைகளில் நாட்டம் கொண்டவன் நான்.

அண்ணன் ஜீவானந்தம் அவர்களை நான் ஏதோவொரு கட்சியின் தலைவர் என்றில்லாமல், எனக்கு மிக நெருக்கமான ஒரு கட்சியின் தளகர்த்தராக நான் அவரைப் பார்த்திருக்கிறேன். அவரோடு சேர்ந்து உழைத்திருக்கிறேன், பாடுபட்டிருக்கிறேன். எனக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே ஒரு பந்தபாசம் உண்டு என்பதை பலரும் அறிவார்கள்.

இன்றைக்குக் கூட இடதுசாரி இயக்கங்கள் வலது, இடது என்று, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் என்று இரண்டாகப் பிரிந்திருந்தாலும், இரண்டு தலைமையிலே உள்ளவர்களுக்கும் நான் நெருக்கமான நண்பனாக விளங்கியவன். அவர்கள் ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இன்றைக்கும் நண்பனாக இருப்பவன்.

அவர்கள் ஒருவேளை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். காரணம், அவர்கள் இன்றைக்கு சேர்ந்து இருக்கின்ற இடம் அப்படி.

அதனால் தான் ஒரு உண்மைத் தொண்டனாகிய நம்முடைய கோவிந்தசாமியையே அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றால், "சேர்வார் தோஷம்''- சேர்ந்த இடம் அப்படி.

உங்களுக்குச் சொல்கிறேன், மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்ட் இயக்கத்தில் ஒரு தியாக சீலர்- இன்றைக்கு இல்லை, மறைந்து விட்டார்- பெயர் வி.பி.சிந்தன். அவர் என்னுடைய ஒவ்வொரு பிறந்த நாள் விழாவிற்கும் என் வீட்டிற்கு வருவார், ஒரு சிகப்புத் துண்டை போர்த்துவார், போர்த்திக் கொண்டே சொல்வார்- இது எங்கள் கட்சி அனுமதிக்காத ஒன்று, இருந்தாலும் உங்களிடம் உள்ள தனிப்பட்ட அன்பின் காரணமாக இதை உங்களுக்கு அணிவிக்கிறேன் என்று சொல்லி அணிவிப்பார் வி.பி. சிந்தன்.இப்படியெல்லாம் கம்ïனிஸ்டு இயக்கத்திலே நண்பர்கள், தலைவர்கள் உண்டு. அவர்களுடைய வழியைப் பின்பற்றினார் கோவிந்தசாமி என்பதற்காக அவருக்கு தண்டனை தரப்பட்டது.

அந்தத் தண்டனையை அவர்கள் நிறைவேற்றுகின்ற தருணத்தில் நான் அவருக்கு உங்கள் சார்பாக அபயம் அளித்திருக்கிறேன். நீங்களும் என்னோடு சேர்ந்து அவருக்கு அபயம் அளித்திருக்கிறீர்கள். அது தான் இந்த விழா என்பதை நீங்களும் அறிவீர்கள், நானும் அறிவேன்.

ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆனாலும், இந்தியக் கம்யூனிஸ்ட் ஆனாலும் அவர்கள் அடிக்கடி தங்களுடைய கொள்கைகளை மாற்றிக் கொள்பவர்கள் அல்ல. ஆனால் ஏதோ ஒரு மாயை இப்போது, அவர்கள் தங்களுடைய "கொள்கையை மாற்றுவதையே தங்களுடைய கொள்கையாக'' ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்ன செய்வது?.

நேற்று வரையிலே ஜெயலலிதாவினுடைய நில ஆக்கிரமிப்புகள் , தாழ்த்தப்பட்ட மக்களுடைய வீடுகளை ஆக்கிரமித்த இந்தச் செய்திகள் [^] அவர்களுக்குத் தெரிந்தது சிறுதாவூர் பற்றி அரசிடம் கொண்டு வந்து மனு கொடுத்து, அதை காலி செய்யச் சொன்னவர்களும் இதே கம்யூனிஸ்ட்டுகள்தான். இன்றைக்கு அதைப் பற்றி மூச்சு விடாமல் இருப்பவர்களும் இதே கம்யூனிஸ்ட்டுகள் தான்!.

இதை நான் சொல்வதற்குக் காரணம், ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் வர வேண்டும் என்பதிலே அவர்கள் தலைகீழாக நிற்கிறார்கள். அதற்காக கங்கணம் கட்டிக் கொண்டு இன்றைக்கு திமுகவை, அரசை, கழக அரசின் சாதனைகளையெல்லாம் மறைக்கப் பார்க்கிறார்கள். மறைத்துக் கொண்டும் வருகிறார்கள்.நிச்சயமாக அதை மறைக்கவும் முடியாது. கழக அரசின் சாதனைகள் மங்கவும் மங்காது.

ஒன்றை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். இது கூட நம்முடைய கோவிந்தசாமி மீது- அல்லது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிவபுண்ணியம் மீது- அந்த இரண்டு கட்சித் தலைமையும் நடவடிக்கை [^] எடுக்கலாம்.

சட்டமன்றக் கூடத்தில் பல தலைவர்களுடைய படங்கள் எல்லாம் வைக்கப்பட்டிருப்பது உங்களுக்குத் தெரியும். ராஜாஜி படம், பெரியார் படம், அண்ணா படம், எம்.ஜி.ஆர். படம், என் படம் என்று இந்தப் படங்கள் எல்லாம் வைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு நாள் நம்முடைய சிவபுண்ணியம் என்னைப் பார்த்து, எல்லா படங்களையும் வைத்திருக்கிறீர்கள், உங்களுக்கு ஜீவானந்தம் அவர்களிடம் அளவற்ற அன்பு உண்டு, "அண்ணன், அண்ணன்'' என்று சொல்வீர்களே, அந்த அண்ணன் ஜீவானந்தம் படம் வைக்க வேண்டாமா என்று கேட்டார்.அவரோடு சேர்ந்து கொண்டு கோவிந்தசாமியும் இதே கேள்வியைக் கேட்டார். நான் அப்போது அதற்கான நேரம் வரும், வைக்கப்படும் என்று சொன்னேன்.

இப்போது நேரம் வந்து விட்டது, அந்த ஜீவானந்தம் படமும் அந்த மண்டபத்திலே, இந்த நாளை முன்னிட்டு வைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.

பதிவு செய்தவர்: இராவணன்
பதிவு செய்தது: 27 Aug 2010 12:58 am
ஆமா கலைஞருக்கும் சேர்வார் தோஷம் தான் பிடித்தாட்டுகிறது. சோனியாவுடன் சேர்ந்த தோஷம் தான் ,ஈழத் தமிழனைக் கொல்ல,தமிழ்நாட்டைக் கொள்ளை அடிக்க,அவரை இட்டுச் செகிறது. இதற்கு அடுத்த கட்டம் மரணசனி தான்.

பதிவு செய்தவர்: மு க
பதிவு செய்தது: 26 Aug 2010 11:03 pm
எனக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே ஒரு பந்தபாசம் உண்டு என்பதை பலரும் அறிவார்கள். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியை போல நான் ஒரு அன்றாடம் காய்ச்சி அல்ல. பதவி, பணம் சொத்து என்று வரும் பொது நான் கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களை உதறி தள்ளவும் தயங்கமாட்டான் என்பதை பல முறை நிரூபித்து காட்டியிருக்கிறேன். ஆதலால் எனக்கு என்ன முக்கியம் என்றால் எனக்கு என் பிள்ளை பெண்மார்களுக்கும் பேரப்பிளைகளுக்கும் பதவி மட்டும் ஆயிரக்கணக்கான கோடிகளில் சொத்து இவை மற்றும்தான் முக்கியம். கட்சி, கட்சி தொண்டர்கள் இவையெல்லாம் தூசு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக