சனி, 28 ஆகஸ்ட், 2010

57 நாடுகளில் அகதிகளாக தஞ்சம் கோரியுள்ள இலங்கைத் தமிழர் : 73 ஆயிரம் பேர் இந்தியாவுக்கு சென்றுள்ளனர்!

கனடாவுக்கு 492 தமிழர்கள் கப்பலில் சென்று புகலிடம் கோரியுள்ள நிலையில் போலி அகதிகள் கனடாவுக்கு பெரும் எண்ணிக்கையில் செல்வதாக கூறப்பட்டாலும் உண்மைகள் வேறுபட்டவையாக உள்ளதாக அந்நாட்டுப்பத்திரிகையான “வன்கூவர்சன்” தெரிவித்திருக்கிறது.

உலகிலுள்ள செல்வந்த நாடுகளுக்குச் செல்லும் புகலிடம் கோருவோரின் எண்ணிக்கை சடுதியா அதிகரித்திருக்கவில்லை என்று அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகராலயம் கூறுகிறது.சில நாடுகளில் புகலிடம் கோருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள அதேசமயம், வேறு சிலநாடுகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் யூ.என்.எச்.சி.ஆர். தெரிவித்துள்ளது.19 நாடுகளில் எண்ணிக்கை அதிகரித்தும் 25 நாடுகளில் குறைவடைந்தும் உள்ளது. சராசரியாக சிறியளவு மாற்றமே ஏற்பட்டுள்ளது.
2009 இல் ஸ்காந்திரேலிய நாடுகள் புகலிடம் கோரும் விண்ணப்பங்களை அதிகளவில் பெற்றுள்ளன.2008 இலும் பார்க்க 13 சதவீதத்தால் இத்தொகை அதிகரித்துள்ளது.தெற்கு ஐரோப்பாவில் புகலிடம் கோரும் விண்ணப்பங்கள் அதிகளவுக்கு வீழ்ச்சிகண்டுள்ளன. சில இடங்களில் உதாரணமாக இத்தாலியில் 42 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அகதிகளை ஏற்றுக்கொள்ளும் விடயத்தில் பாராட்டுக்குரிய நாடாக கருதப்படும் அதாவது உலகில் மூன்றாவது இடமாக விளங்கும் கனடாவில் புகலிடம் கோருவோர் தொகை 10 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்திருக்கிறது.ஹெயீட்டி,மெக்ஸிக்கோவிலிருந்து புகலிடம் கோருவோர் தொகை குறைவடைந்ததே இதற்கான பிரதான காரணமாகும்.அதேசமயம்,ஜேர்மனியில் புகலிட விண்ணப்பங்கள் 25 சதவீதத்தாலும் பிரான்ஸில் 19 சதவீதத்தாலும் அதிகரித்திருக்கிறது.
அகதிகளுக்கு உதவுவதில் இரண்டு விதமான ஏற்பாடுகளை கனடா கொண்டிருக்கிறது. நாட்டிற்கு வெளியேயிருந்தவாறு புகலிடம் கோருவோர் இந்த முறைமையின் கீழ் உள்ளடக்கப்படுகின்றனர். இவர்கள் முகாம்களில் நிராதரவாக இருப்பவர்களாகும். இந்த அகதிகளில் 1 இலட்சம் பேரை வருடாந்தம் 20 நாடுகள் உள்ளீர்க்கின்றன. கனடா 10 ஆயிரம் தொடக்கம் 12 ஆயிரம் பேரை உள்ளீர்க்கிறது. அதாவது அகதிகளில் 10 இல் ஒருவரை கனடா உள்ளீர்க்கிறது.
இரண்டாவது ஏற்பாடானது உள்நாட்டு புகலிடமுறைமையாகும். சித்திரவதை,கொடூரமான வழமைக்கு மாறான தண்டனை ஆபத்தை எதிர்நோக்கும் அகதிகளுக்கு பாதுகாப்பளிப்பது இரண்டாவது முறைமையில் அடங்குகிறது. அதாவது தமது தாய்நாட்டிலிருந்து கனடாவுக்கு நேரடியாக வருவோர் இந்த அகதிகளாகும்.
2009 இல் கனடாவுக்கு 34 ஆயிரம் பேர் வந்துள்ளனர்.இந்த வகையான அகதிகள் உலகளாவிய ரீதியில் 377,200 பேர் உள்ளனர்.343,000 பேர் ஏனைய நாடுகளில் புகலிடம் கோரியுள்ளனர்.இந்த முறைமையில் உள்ளடக்கப்படுவோரின் விண்ணப்பங்களை கனடிய குடிவரவு பிரஜாவுரிமை அதிகாரி பரிசீலனை செய்து தீர்மானிப்பார்.குடிவரவு அகதிகள் சபைக்கு இந்த விடயம் பாரப்படுத்தப்படும்.இந்த முறைமையே தற்போது புகலிடம் கோரும் எம்.வி.சன்சீ கப்பல் தமிழர்களுக்கு இடம்பெற்று வருகிறது.
இதேவேளை,கனடாவுக்கு வரும் தமிழ் அகதிகள் தமது அயல்நாடுகளுக்கு செல்வதில்லை என்று புகார் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், பிந்திய தகவல்களின் பிரகாரம் 146,098 அகதிகள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்களில் 126,955 பேர் வேறு நாடுகளில் இருப்பதாகவும் யூ.என்.எச்.சி.ஆர். தெரிவித்துள்ளது.உண்மையில் 73 ஆயிரம் பேர் இந்தியாவுக்கு சென்றுள்ளனர்.அத்துடன், 57 நாடுகளில் அகதிகளாக புகலிடம் கோரியுள்ளனர்.உலகில் மிகவும் ஆபத்தான பிராந்தியங்களில் சோமாலியா 93 சதவீதமாகவும் எரித்திரியா 94 சதவீதமாகவும் இலங்கை 92 சதவீதமாகவும் பட்டியலிடப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக