செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

3 பேருக்கு தூக்கு : தர்மபுரி பஸ் எரிப்பில்மாணவியர் மூன்று பேர் உயிரோடு எரிந்து அ.தி.மு.க

தர்மபுரி அருகே, கோவை விவசாய பல்கலைக்கழக பஸ்சை  எரித்து, மாணவியர் மூன்று பேர் உயிரோடு எரிந்து சாக காரணமாக இருந்த மூன்று பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை, சுப்ரீம் கோர்ட் நேற்று உறுதி செய்தது. குற்றவாளிகளின் செயல், "காட்டுமிராண்டித்தனமானது, வெறுக்கத்தக்கது மற்றும் சமூகத்திற்கு எதிரான குற்றம்' என, நீதிபதிகள்  தங்கள்  தீர்ப்பில்  கூறினர்.

கடந்த 2000ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி, கொடைக்கானல் "பிளசன்ட் ஸ்டே' ஓட்டல் வழக்கில், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு தனி  கோர்ட் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இது, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க., வினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பலவிதமான போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டனர்.தர்மபுரி மாவட்டத்திலும் இதுபோன்ற போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது, தர்மபுரியை அடுத்த இலக்கியம்பட்டியில், கோவை விவசாய பல்கலைக்கழக மாணவியர் சுற்றுலா வந்த பஸ்சுக்கு, போராட்டக்காரர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். பஸ்சில் இருந்த மாணவியர் 44 பேர் மற்றும் ஆசிரியர்கள் இரண்டு பேரும் ஜன்னல் வழியாகவும், கண்ணாடிகளை உடைத்தும் வெளியேறினர். கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி என்ற மூன்று மாணவியர் மட்டும் சிக்கிக் கொண்டனர். அவர்கள் தீயில் எரிந்து சம்பவ இடத்திலேயே பலியாயினர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தர்மபுரி டவுன் போலீசார் இந்த வழக்கை விசாரித்து, தர்மபுரியைச் சேர்ந்த மாது என்ற ரவீந்திரன், நெடு என்ற நெடுஞ்செழியன், கொட்டப்பட்டி முன்னாள் ஊராட்சித் தலைவர் முனியப்பன், முன்னாள் ஒன்றிய செயலர் ராஜேந்திரன், டெய்லர் மணி உட்பட 31 பேரை கைது செய்தனர்.முதலில், கிருஷ்ணகிரி கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தது.

அதன்பின், சென்னை ஐகோர்ட் உத்தரவுபடி சேலம் முதலாவது செஷன்ஸ் கோர்ட்டில்   விசாரணை நடந்தது. தர்மபுரி கலெக்டர், தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழக துணைவேந்தர் உட்பட 123 பேர் வழக்கில் சாட்சியம் அளித்தனர். வழக்கு விசாரணை முடிந்து 2007 பிப்ரவரி 16ம் தேதி நீதிபதி கிருஷ்ணராஜா தீர்ப்பு கூறினார். குற்றம் சாட்டப்பட்ட நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோருக்கு மரண தண்டனையும், 25 பேருக்கு தலா ஏழு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இரண்டு பேர் விடுதலை செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை நடந்த போதே குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான டெய்லர் மணி, உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.

தீர்ப்பு : தீர்ப்பை எதிர்த்து மரண தண்டனை பெற்ற மூவரும், மற்றவர்களும் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். அப்பீல் மனுக்களை விசாரித்த சென்னை ஐகோர்ட், மூவருக்கு வழங்கிய மரண தண்டனையை 2007 டிசம்பர் 6ம் தேதி உறுதி செய்தது. மற்றவர்களுக்கு விதிக்கப்பட்ட ஏழு ஆண்டு சிறைத் தண்டனையை இரண்டு ஆண்டு தண்டனையாக குறைத்தது.ஐகோர்ட்  உறுதிசெய்த மரண தண்டனையை எதிர்த்து மூவரும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்தனர். இவர்களின் மனுக்களை நீதிபதிகள் சிங்வி மற்றும் சவுகான் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் விசாரித்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. முனியப்பன், ராஜேந்திரன் மற்றும் நெடுஞ்செழியன் ஆகிய மூன்று பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை நீதிபதிகள் உறுதி செய்தனர்.

தீர்ப்பை வாசித்த நீதிபதி சவுகான் கூறியதாவது:பஸ்சை எரித்து, மாணவியர் மூன்று பேர் உயிரோடு எரிந்து சாக காரணமாக இருந்த குற்றவாளிகள் மூன்று பேரின் செயல் காட்டுமிராண்டித்தனமானது, வெறுக்கத்தக்கது மற்றும் சமூகத்திற்கு எதிரானது. இந்தக் கொடூரச் செயலைச் செய்தவர்களுக்கு மரண தண்டனை அளிப்பதே சரியாக இருக்கும். இது அரிதிலும், அரிதான வழக்கு என்பதால், இந்தத் தண்டனை பொறுத்தமானதே. மற்ற 25 பேரும் ஏற்கனவே சிறையில் அனுபவித்த தண்டனை போதும். தற்போது ஜாமீனில் உள்ள அவர்களுக்கான உத்தரவாத பத்திரங்களை விடுவிக்க வேண்டும்.மாணவியர் உயிரோடு எரிந்து சாகக் காரணமாக இருந்த மூன்று பேருக்கும் கீழ்கோர்ட்  விதித்த மரண தண்டனை சரியானதே. அதில் தலையிட எந்தவிதமான முகாந்திரமும் இல்லை. இதுபோன்ற கொடூர குற்றங்களை யாரும் நியாயப்படுத்த முடியாது. மூன்று அப்பாவி இளம் மாணவியர் சாகவும், மற்ற 20 பேர் தீக்காயம் அடையவும் காரணமாக இருந்த செயல் இழிவானது மற்றும் மிருகத்தனமானது.இந்த வழக்கில் கீழ்கோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்தவர்கள், பஸ்சுக்கு தீ வைக்காமல் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியிருக்கலாம். அதற்கு அவர்களுக்கு உரிமையுள்ளது. அதை விடுத்து, தங்களின் விருப்பதற்கு ஏற்ப கோர்ட் தீர்ப்பு வழங்கவில்லை என்பதற்காக, மற்றவர்களுக்கு துயரம் மற்றும் பாதிப்பை ஏற்படுத்தும் செயல்களில் இறங்கி இருக்கக் கூடாது.விவசாய பல்கலைக்கழக மாணவியர் வந்த பஸ் எரிக்கப்பட்டது பரபரப்பான நகரின் மையப்பகுதியில் நடந்துள்ளது. தீ வைக்கப்பட்ட பஸ்சில் சிக்கிக் கொண்ட மாணவியர் உதவி கோரி கத்திய போது, அவர்களின் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர்களே உதவி செய்துள்ளனர். சில மாணவியரை காப்பாற்றியுள்ளனர். கடைக்காரர்கள், பத்திரிகையாளர்கள், போலீசார் என, பல தரப்பினர் அங்கிருந்தும் யாரும் மாணவியரைக் காப்பாற்ற முன்வரவில்லை.இதுபோன்ற சம்பவங்களின் போது, பொதுமக்கள் தங்களின் மனசாட்சிக்கு விரோதமாக செயல்பட்டாலும் கூட, போலீசார் அப்படி இருக்கக் கூடாது. அவர்கள் துரிதமாக செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யவில்லை. போலீசார் ஏன் செயல்படவில்லை என்பது பற்றி நிர்வாகத்தினரும் கேட்கவில்லை. சமூகத்தின் பாதுகாவலர்களான போலீசாரே அங்கு நடந்த கொடிய சம்பவத்தை வேடிக்கை பார்த்துள்ளனர். பஸ்சை எரியவிட்டு, அதில் மூன்று மாணவியர் தீயில் கருகி சாக காரணமாக இருந்ததன் மூலம், போலீசார் தங்களின் கடமையைச் செய்ய தவறியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்களும், அதிகாரிகளும் தங்களின் கடமையைச் செய்திருந்தாலும், அப்பாவி மாணவியர் காப்பாற்றப்பட்டிருப்பர்.இவ்வாறு நீதிபதி சவுகான் கூறினார்.

இதையடுத்து, இனி  தூக்கு தண்டனை  பெற்ற மூவரும் மேல்முறையீடு  செய்யலாம். அதற்குப் பின், ஜனாதிபதி  கருணை மனு என்று  நடைமுறைகள் உள்ளன.

உறவினர்கள்  வெளியூர்  பயணம்? தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நெடு என்கிற நெடுமாறன், மாது என்கிற ரவீந்திரன் ஆகியோர் தர்மபுரி மதிக்கோன்பாளையம் காமாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள். அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகள், நேற்று தீர்ப்பு வருவதையொட்டி, குடும்பத்தினருடன் வெளியூர் சென்றனர். தூக்கு தண்டனை பெற்ற முனியப்பன், தர்மபுரியை அடுத்த புளியம்பட்டியை சேர்ந்தவர். அவரது குடும்பத்தினரும் வெளியூர் சென்று விட்டனர். மூவரின் வீடுகளும் பூட்டியிருந்தன. அவர்கள் மூவரும் வேலூர் சிறையில் உள்ள மூவரையும் பார்க்கச் சென்றதாக சிலர் தெரிவித்தனர்.

தண்டனை பெற்றவர்கள் அ.தி.மு.க.,வில் வகித்த பதவிகள் :  தர்மபுரி இலக்கியம்பட்டியில் வேளாண் கல்லூரி மாணவியர் வந்த பஸ் எரிப்பு வழக்கில் தண்டனை பெற்றவர்கள் வகித்த பதவிகள் விவரம் வருமாறு:தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட குற்றவாளிகள் விவரம் மற்றும் சம்பவம் நடந்த போது, அ.தி.மு.க.,வில் வகித்த பதவிகள் விவரம்:
முனியப்பன் காட்டம்பட்டி ஊராட்சி தலைவர் அ.தி.மு.க., கிளை நிர்வாகி. (வழக்கில் நான்காவது குற்றவாளி) நெடு என்கிற நெடுஞ்செழியன் தர்மபுரி மூன்றாவது வார்டு செயலர் (வழக்கில் இரண்டாவது குற்றவாளி), மாது என்கிற ரவீந்திரன் நகர அ.தி.மு.க., இளைஞரணி செயலர். (வழக்கில் மூன்றாவது குற்றவாளி).

இரு ஆண்டுகள் தண்டனை பெற்றவர்கள் விவரம் மற்றும் சம்பவம் நடந்த போது வகித்த பதவிகள்:
ராஜேந்திரன் (வழக்கில் முதல் குற்றவாளி) - ஒன்றிய செயலர் மற்றும் இலக்கியம்பட்டி ஊராட்சி தலைவர்.
 முருகன் (எம்.ஜி.ஆர்., மன்ற நகர செயலர்), தாவூத் பாஷா (சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட இணை செயலர்).
வேலாயுதம் (அ.தி.மு.க., உறுப்பினர்), முத்து என்கிற அறிவழகன் (33வது வார்டு செயலர்), ரவி (ஒன்பதாவது வார்டு செயலர்), முருகன் (தர்மபுரி யூனியன் மாணவர் அணி செயலர்), ஏ.பி.முருகன் (அ.தி.மு.க., பிரமுகர்), வடிவேல் (முன்னாள் தர்மபுரி நகர செயலர்).
சம்பத் (பழைய தர்மபுரி முன்னாள் ஊராட்சி தலைவர்), நஞ்சன், பழனிசாமி, ராஜு (அ.தி.மு.க., உறுப்பினர்கள்), டெய்லர் மணி (தர்மபுரி ஒன்றிய எம்.ஜி.ஆர்., மன்ற தலைவர், இவர் வழக்கு நடக்கும்போதே இறந்து விட்டார்), ஆத்துமேடு மாது (கிளைச் செயலர்).
ராமன் (அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு உறுப்பினர்), டிராக்டர் சண்முகம், சந்திரன் (அ.தி.மு.க., உறுப்பினர்கள்), செல்லகுட்டி (அண்ணாநகர் கிளை செயலர்), காவேரி மேஸ்திரி, மணி (அ.தி.மு.க., உறுப்பினர்கள்), மாதையன் (கிளை செயலர்), செல்வம், மாதேஸ், செல்வராஜ், மாணிக்கம் (அ.தி.மு.க., உறுப்பினர்கள்),  வீரமணி (மாணவர் அணி தலைவர், கடந்தாண்டு அ.தி.மு.க., கோஷ்டிப் பூசலில் கொலை செய்யப்பட்டவர்), உதயகுமார் (அ.தி.மு.க., உறுப்பினர்).

பஸ் எரிப்பு வழக்கில் தண்டனை பெற்றவர்கள் குடும்பத்தினருக்கு அ.தி.மு.க.,வினர் ஆறுதல் : தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அ.தி.மு.க., பிரமுகர்கள் நெடு என்கிற நெடுஞ்செழியன், மாது என்கிற ரவீந்திரன், முனியப்பன் ஆகியோர் மனைவி மற்றும் குழந்தைகள் நேற்று காலை தீர்ப்பு வெளியான போது, வீடுகளை பூட்டி விட்டு வெளியூர் சென்றனர்.தண்டனை உறுதி செய்யப்பட்ட தகவல் அறிந்து நேற்று மதியம் வெளியூர்களில் இருந்து திரும்பியவர்கள், வீடுகளில் சோகத்துடன் அமர்ந்திருந்தனர்.அ.தி.மு.க., மாவட்ட செயலர் அன்பழகன், முன்னாள் ஒன்றிய செயலர் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., பழனியப்பன், கட்சி நிர்வாகிகள் முனுசாமி, கோவிந்தசாமி, குமார், குப்புசாமி உள்ளிட்ட பலர், தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறினர்.நேற்று காலை தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட தகவல் அறிந்ததும், தண்டனை பெற்றவர்களின் வீடுகளுக்கு பத்திரிகை நிருபர்கள், போட்டோகிராபர்கள் சென்றதால், பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக