புதன், 25 ஆகஸ்ட், 2010

பணிப்பெண் சித்திரவதை உடலுக்குள் 23 இரும்பு ஆணிகள்கள் மத்திய கிழக்கு

மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கைப் பணிப்பெண்கள் அனுபவிக்கின்ற துன்பங்களும் சித்திரவதைகளும் முடிவின்றித் தொடருகின்றன. குடும்ப வறுமையைப் போக்குவதற்காக கடல் கடந்து அங்கு செல்கின்ற பெண்கள் உடல், உள ரீதியாக பல்வேறு இம்சைகளை எதிர்கொள்வதாக தகவல்கள் வந்தவண்ண முள்ளன. ஒருசில பெண்கள் உயிரற்ற பிணமாகவும் இங்கு வந்து சேர்ந்துள்ளனர்.
மாத்தறை பிரதேசத்திலுள்ள கம்புறுப்பிட்டியிலிருந்து சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண் வேலைக்குச் சென்ற பெண் ஒருவர் சித்திரவதையின் உச்சக் கட்டத்தை அனுபவித்து விட்டு இலங்கை திரும்பியிருக்கிறார். எஜமானரால் மிகவும் காட்டுமிராண்டித்தனமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டதாக இப்பெண் தெரிவித்துள்ளார்.
இரவு பகலாக ஓய்வின்றி வேலை செய்யுமாறு வீட்டு எஜமானரால் பலவந்தப்படுத்தப்பட்டதாக இப்பெண் கூறுகிறார். இரவில் உறங்குவதற்கு இடமளிக்கப்படுவதில்லை. சம்பளமும் இப்பெண்ணுக்குக் கிரமமாக வழங்கப்பட்டிருக்கவில்லை.இவையெல்லாம் போதாதென்று உடல் ரீதியாக இப்பெண் மோசமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். உடலெங்கும் கூரிய ஆயு தங்களால் தாக்கிய காயங்கள் காணப்படுகின்றன. அங்குள்ள வீட்டு எஜமான் பல தடவைகளில் ஆணிகளைச் சூடாக்கி இப்பெண்ணின் உடலுக்குள் செலுத்தியுள்ளார்.
மேற்படி பெண் கூறுவதை நிரூபிப்பது போல அவரது உடலுக்குள் இருபத்து மூன்று இரும்பு ஆணிகள் இருப்பதை கம்புறுப்பிட்டிய ஆதார வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் கமல் வீரதுங்க உறுதிப்படுத்தியுள்ளார். இப்பெண்ணின் எக்ஸ்கதிர் படத்தில் ஆணிகள் துல்லியமாகத் தென்படுகின்றன.
மனிதாபிமானத்துக்கு அப்பாற்பட்டதான காட்டுமிராண்டித்தனத்தின் உச்சமென்றுதான் இதனைக் கூற வேண்டியுள்ளது. மனித உருவில் நடமாடுகின்ற கொடிய மிருகமொன்றின் கையில் அகப்பட்டு உயிருடன் நாடு திரும்பியிருக்கிறார் இந்த அப்பாவிப் பெண்.உடல் ரீதியாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு மாத்திரமன்றி உளரீதியில் உண்டான தாக்கங்களுக்கும் மருத்துவ சிகிச்சையளிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இங்கு நாம் கண்டது ஒரேயொரு பெண்ணின் வேதனைகள்.
மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கைப் பணிப்பெண்கள் மாத்திரமன்றி பல்வேறு நாடுகளையும் சேர்ந்த பணிப்பெண்கள் அநீதிகளையும் கொடுமைகளையும் எதிர்கொள்கின்றனர். அங்குள்ள வீட்டு எஜமானர்கள் அத்தனை பேரையும் கொடியவர்களென்று கூறிவிட முடியாது. ஆனால் கணிசமான தொகையினர் இரக்க சுபாவ மற்றவர்களாக இருப்பதையே பணிப்பெண்கள் கூறுகின்ற அனுபவங்கள் வாயிலாக அறிய முடிகிறது.
ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதன் பிரகாரம் வேதனம் வழங்கப்படாமை, இரவுபகலாக ஓய்வின்றி வேலை வாங்கப்படுதல், இரவில் உறங்குவதற்கு நேரம் கிடைக்காமை, சித்திரவதைக்கு உட்படுத் தப்படுதல், பாலியல் ரீதியான தொந்தரவுகள், தாயகம் சென்று திரும்புவதற்கு விடுமுறை வழங்கப்படாதிருத்தல் போன்றவை அங்குள்ள பணிப்பெண்கள் எதிர்நோக்குகின்ற பொதுவான பிரச்சினைகளாக உள்ளன.
இதுபோன்ற கொடுமைகளைப் பொறுக்க முடியாமல் பணிப்பெண்கள் அவ்வீட்டிலிருந்து தப்பிச் சென்று அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகங்களில் தஞ்சமடைவது முண்டு. இவ்விதம் அடைக்கலம் அடைந்த பணிப்பெண்கள் பலர் இலங்கை அரசாங்கத்தின் ஏற் பாட்டில் இங்கு பாதுகாப்பாக அழைத்து வரப்படுகின்றனர்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்காகச் செல்கின்ற பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளில் எமது அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருகிறது. இலங்கைப் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண் வேலைக்குச் செல்லும் விடயத்தில் அரசாங்கத்துக்கு உடன்பாடு கிடையாது. பெண்கள் குடும்பத்தைப் பிரிந்து வெளிநாட்டு வேலைக்குச் செல்வதால் குடும்பக் கட்டமைப்பில் உருவாகின்ற பிரச்சினைகள் எவரும் அறியாததல்ல…. தாயின் பராமரிப்புக் கிடைக்காததால் பிள்ளைகள் தவறான பாதைக்கு இட்டுச் செல்லப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெறுகின்றன.
எனினும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் தேடிச் செல்வதென்பது இங்குள்ள பிரஜை கொண்டுள்ள உரிமையென்பதால் அவ்விடயத்தில் அரசாங்கம் கெடுபிடிகளைக் கொண்டு வர முடியாத நிலையிலுள்ளது. ஆனாலும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் திணைக்களத்தில் உரியபடி பதிவு செய்தே மத்திய கிழக்கு வேலை வாய்ப்புக்குச் செல்ல வேண்டுமென அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.
போலி முகவர்கள் செயற்படுவதால் மத்திய கிழக்கு வேலை வாய்ப்புக்குச் செல்வோர் அவதானமாக இருத்தல் அவசியம். போலி முகவர்கள் ஊடாகச் செல்வோரே அங்கு சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டியேற்படுகிறது. அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களைக் கடைப்பிடித்துச் செல்லும்போதே பாதுகாப்பும் உத்தரவாதமும் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக