வியாழன், 1 ஜூலை, 2010

தாய்க்கு உணவளிக்காமல் வீட்டை விட்டு துரத்திய மகன்கள் கைது

சென்னை: வயதான காலத்தில் பெற்றோர்களை கவனித்துக்கொள்ளாமல் வீட்டைவிட்டு விரட்டும் பிள்ளைகளை போலீசார் தொடர்ந்து கைது செய்து வருகிறார்கள். பெற்ற தாய்க்கு சாப்பாடு கொடுக்காமல் வீட்டைவிட்டு துரத்திய மகன்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

பெற்றோர்களைப் புறக்கணிக்கும் பிள்ளைகளைப் போலீஸார் பிடிக்க ஆரம்பித்துள்ளனர். அந்த வரிசையில், 70 வயது தாயாருக்கு சாப்பாடு கொடுக்காமல் வீட்டை விட்டு விரட்டிய 2 மகன்களை சென்னை வேப்பேரி போலீசார் கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட தாயின் பெயர் ஆதிலட்சுமி. இவரது கணவரான செங்கல்வராயன் காலமாகிவிட்டார்.

இவர்களுக்கு சண்முகம், மணி, ஜெகன் என்ற 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சண்முகம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். அவர் தன் குடும்பத்தோடு தனியாக வாழ்ந்து வருகிறார். ஆட்டோ டிரைவர்களான 2-வது மகன் மணியும், 3-வது மகன் ஜெகனும் புரசைவாக்கம் பெருமாள்பேட்டையில் குடும்பத்தோடு வசித்து வந்தார்கள்.

ஆதிலட்சுமி இவர்களோடு தங்கி 2 மகன்கள் வீட்டிலும் முறைவைத்து சாப்பிட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் அவருக்கு சாப்பாடு கொடுக்காமல் 2 மகன்களும் சேர்ந்து வீட்டை விட்டே துரத்திவிட்டனர்.



இதையடுத்து போக்கிடம் இல்லாமல் பசிக்கொடுமையால் பிச்சை எடுக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டார். அப்போது தான் வயதான பெற்றோரை தவிக்கவிடும் பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் அறிவித்திருந்ததை கேள்விபட்டார்.

இதையடுத்து தனது மகன்கள் மீது நேற்று வேப்பேரி போலீசில் புகார் கொடுத்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் அவரின் மகன்கள் இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் இந்த நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த இரு மகன்களும், இனிமேல் தனது தாயாருக்கு ஒழுங்காக சாப்பாடு கொடுத்து அவரை நல்லபடியாக பார்த்துக் கொள்வதாக போலீசாரிடம் உறுதி கொடுத்துள்ளனராம்.

பதிவு செய்தவர்: பகுத்தறிவு
பதிவு செய்தது: 01 Jul 2010 6:58 pm
எல்லாம் வேல வாசி ஏறிப் போச்சில்ல. அதான். இன்னும் என்ன எல்லாம் ஏறப் போகுதோ. இந்த நாடு எங்க போகுது?

பதிவு செய்தவர்: anwar
பதிவு செய்தது: 01 Jul 2010 6:56 pm
முதுமையான உன் தாயை நீ கவனித்தால் தான் உன்னை முதுமையில் உன் மக்கள் கவனிப்பார்கள் . இது சத்தியம் /சத்தியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக