திங்கள், 19 ஜூலை, 2010

ராமராஜன்கண்கலங்கினார், மேதை பட ஆடியோ விழாவில்

எனக்கும் இன்னும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது அவர்களை கை கூப்பி வணங்கத் தோன்றுகிறது என்று கண் கலங்க கூறினார் நடிகர் ராமராஜன்.

ஒருகாலத்தில் பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியவர் ராமராஜன். அவரை எம்.ஜிஆராக பார்த்தனர் கிராமத்து மக்கள். அந்த அளவுக்கு சின்ன எம்.ஜி.ஆராக கிட்டத்தட்ட வாழ்ந்து காட்டியவர் ராமராஜன். முதல் முறையாக சினிமாவில் ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய முதல் நடிகரும் இவர்தான்.

கரகாட்டக்காரன் அவருக்குக் கொடுத்த ஏற்றத்தைப் போல எந்த நடிகருக்கும் நிச்சயம் ஒரு படம் அமைந்திருக்காது. அப்படி ஒரு ஓட்டம் அந்தப் படத்துக்கு.

ஆனால் காலத்தின் கோலமாய் இன்று எங்கே இருக்கிறார் ராமராஜன் என்று டெலஸ்கோப் வைத்து தேட வேண்டிய நிலைமை. அந்த அளவுக்கு தேய்ந்து போய் விட்டது ராமராஜனின் சினிமா மார்க்கெட்.

பெரும் இடைவெளிக்குப் பிறகு மேதை என்ற படத்தில் நடித்துள்ளார் ராமராஜன். இப்படத்தின் ஆடியோ வெறியீடு பிலிம்சேம்பர் தியேட்டரில் நடந்தது. இதில் ராமராஜனின் ரசிகர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

சென்னை நகர தியேட்டர் உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் ஆகியோர் ஆடியோவை வெளியிட நடிகர் பார்த்திபன் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் உணர்ச்சிகரமாக பேசினார் ராமராஜன். அவர் பேசுகையில், என்னிடம் டைரக்டர்கள் கதை சொல்ல வரும்போது, கதையை மட்டும்தான் கேட்டேன். பணம் எவ்வளவு? என்று கேட்டதில்லை. பெரிய பட நிறுவனங்களின் படங்களில் ஏன் நடிக்கவில்லை? என்று நிறைய பேர் என்னிடம் கேட்கிறார்கள். எனக்கு, பணக்காரரை மேலும் பணக்காரர் ஆக்குவதில் உடன்பாடு இல்லை. சாமான்யர்களை பணக்காரர்கள் ஆக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதனால்தான் சிறு பட தயாரிப்பாளர்களின் படங்களில் மட்டும் நடித்தேன்.

ஒரே வருடத்தில், எட்டு படங்களில் நடித்து இருக்கிறேன். இப்போது எட்டு வருடங்களுக்கு பிறகு ஒரு படத்தில் நடித்து இருக்கிறேன். நான் நடித்த படம் வெளிவந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டன. என்றாலும், பத்தாயிரம் மன்றங்கள் இன்னும் செயல்படுகின்றன.என் தாய்-தந்தையை விட, உங்களுக்குத்தான் (ரசிகர்களுக்குத்தான்) அதிகம் கடமைப்பட்டு இருக்கிறேன் என்று கூறியபோது அவரது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

இதைப் பார்த்த ரசிகர்கள், அழக்கூடாது. நாங்கள் உங்களுடன் எப்போதும் இருப்போம் என்று குரல் எழுப்பி ஆறுதல்படுத்தினர். பின்னர் தன்னைத் தேற்றிக் கொண்டு அனைவருக்கும் நன்றி கூறினார் ராமராஜன்.

அதெல்லாம் ஒரு காலம்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக