:"மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு இந்த அரசு பரிசீலித்து வருகிறது. விரைவில் அதுபற்றி நல்ல முடிவு எடுக்கப்படும்' என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அவரது, "கேள்வி - பதில்' அறிக்கை:டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று ராமதாஸ் அறிக்கை விட்டிருக்கிறார். அந்த கோரிக்கைகளை மட்டுமல்ல; மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டுமென்று அவர் வலியுறுத்தி வரும் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கும் இந்த அரசு பரிசீலித்து வருகிறது. விரைவில் அது பற்றி நல்ல முடிவு எடுக்கப்படும்.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரில் ஆர்ப்பாட்டம் நடத்தச் சொல்லி, தொண்டர்களை உசுப்பிவிட்டு அறிக்கை விட்டு வந்த ஜெயலலிதா, தற்போது மாதத்துக்கு ஒரு முறை, தானே அவற்றில் கலந்து கொள்வது, தேர்தல் நெருங்கி விட்டதைத் தான் காட்டுகிறது.
தினபூமி பத்திரிகை ஆசிரியர் கைது பற்றி, 23ம் தேதி நாளிதழ்கள் செய்தி வெளியிட்டிருந்தன. உடனடியாக போலீஸ் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, விவரம் கேட்டு விட்டு, என்ன காரணம் இருந்தாலும் உடனடியாக அவர்களை விடுவிக்க வேண்டுமென கூறி, அவர்களும் ஒரு சில மணி நேரத்தில் விடுவிக்கப்பட்டனர். இது என்னுடைய நடைமுறை.பத்திரிகையாளர்களுக்கு வக்காலத்து வாங்கி அறிக்கை விடுத்துள்ள அம்மையாரின் கதை தமிழக மக்களுக்கு மறந்துவிட்டதா, என்ன?
மத்திய அரசு மானியத்தில் தான் ஒரு ரூபாய் அரிசி வழங்கப்படுவதாக இளங்கோவன் பேசியிருக்கிறார். அப்படி என்றால், எல்லா மாநிலங்களிலும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்கலாமே.அவசர உதவிக்கான 108 ஆம்புலன்ஸ் திட்டத் தொகை முழுவதையும் கூட மத்திய அரசு அளித்து வருவதாகப் பேசியிருக்கிறார். அதுவும் தவறான செய்தி தான். அந்தத் திட்டம், உலக வங்கியிடமிருந்து தேவையான நிதியை தமிழக அரசு கடனாகப் பெற்று, ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கி நடத்தப்படுகிற திட்டம். இந்தத் திட்டத்துக்கான நடைமுறை செலவில், ஒரு பகுதியை மட்டும் தான் மத்திய அரசு வழங்குகிறது.
ராதாபுரம் பஸ் நிலையத்துக்கு காமராஜர் பெயரைச் சூட்டியது, அ.தி.மு.க.,வுக்கு கிடைத்த வெற்றி என ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். ஆமாம். அவர் என்ன செய்து விடுவாரோ என பயந்து கொண்டு தான் அந்தப் பெயர் சூட்டப்பட்டது. காமராஜரிடம் அந்த அம்மையாருக்கு அவ்வளவு பக்தி, பாசம். அவரது ஆட்சிக் காலத்தில் காமராஜர் பெயராலும், கக்கன் பெயராலும் அவர் தீட்டிய திட்டங்கள், திறந்து வைத்த பஸ் நிலையங்கள் எத்தனை? சிரிப்பு தான் வருகிறது. காமராஜர், கக்கன் புகழ் பாட தி.மு.க., அரசு நிறைவேற்றிய திட்டங்களை மறந்து விடலாமா; மறதிக் குடுக்கை.இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக