வியாழன், 29 ஜூலை, 2010

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் நேற்று ஒன்றுகூடி அடுத்த கட்ட

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் நேற்று ஒன்றுகூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினார்கள்

இலங்கைத் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் முக்கியஸ்தர்களும் நேற்றையதினம் மீண்டும் கொழும்பில் ஒன்றுகூடி தமிழ் மக்களின் அரசியல் நிலவரம் தொடர்பான எதிர்கால வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது குறித்து ஆராய்ந்துள்ளனர்.
கொழும்பிலுள்ள புளொட் அமைப்பின் தலைமைச் செயலகத்தில் நேற்றைய சந்திப்பு இடம்பெற்றது. கடந்த மாதம் 24ம் திகதி தமது ஆரம்ப சந்திப்பினை மேற்கொண்ட தமிழ்க்கட்சிகளின் அரங்கத்தினர் இம்மாதம் 2ம் திகதி இரண்டாவது சந்திப்பில் திட்ட வரைபுகளை மேற்கொள்ளுமுகமாக சகல கட்சி பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய உப குழுவொன்றினையும் அமைத்திருந்தனர். கடந்த 4ம் திகதி கூடிய தமிழ்க்கட்சிகளின் அரங்க உபகுழுவினர் தயாரித்த திட்ட வரைபுகள் இம்மாதம் 7ம் திகதி கலந்தாலோசிக்கப்பட்டு அதன் நோக்கங்கள் மற்றும் அரசியல் வழிமுறைகள் தொடர்பான முடிவு மேற்கொள்ளப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக நேற்றையதினம் ஒன்றுகூடிய அரங்கத்தினர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஒரு பொதுக் களத்தில் பேசி ஒருமித்த கருத்தையும் நிலைப்பாட்டையும் தமிழ் கட்சிகளுக்குள் உருவாக்குவது தொடர்பாக கலந்துரையாடினர். இதன் முக்கிய அம்சமாக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இதுதொடர்பாக அழைப்பு விடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது. நேற்றையதினம் கூடிய ஒன்பது பிரதான தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கையொப்பமிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு அழைப்பினை விடுவதாக ஏகமனதாக முடிவுமேற்கொள்ளப்பட்டது. மேலும் தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் அடுத்த சந்திப்பினை கிழக்கு மாகாண முதலமைச்சர் திரு.சந்திரகாந்தனின் வேண்டுகோளின் பேரில் மட்டக்களப்பில் நடாத்துவதெனவும் இதற்குரிய திகதி ஓகஸ்ட் மாதம் 14ம் திகதி எனவும் தீர்மானிக்கப்பட்டது.
நேற்றைய சந்திப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு.வீ.ஆனந்தசங்கரி தந்தை செல்வாவின் புதல்வரும் ஒவ்பர் அமைப்பின் இயக்குனருமாகிய திரு. செல்வநாயகம் சந்திரகாசன் மற்றும் பேரின்பநாயகம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் சார்பில் அதன் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான திரு.சந்திரகாந்தன் மற்றும் ஊடகச் செயலாளர் ஆசாத் மௌலானா நாபா ஈபிஆர்எல்எப் சார்பில் அதன் செயலாளர் திரு.தி.சிறிதரன் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் சதானந்தம் மற்றும் ஆர்.ராகவன் தமிழ் தேசிய விடுதலை முன்னணி சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவாஜிலிங்கம் சிறி ரெலோ அமைப்பின் தலைவர் திரு உதயன் திரு. ஜீ.சுரேந்திரன் ஜனநாயக மக்கள் முன்னணி செயலாளர் திரு.நல்லையா குமரகுருபரன் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜீ.ராஜ்குமார் மற்றும் எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் உட்பட பல முக்கியஸ்தர்களும் மேற்படி சந்திப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : TELOnews

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக