சனி, 3 ஜூலை, 2010

சட்ட சிக்கல்களுக்கு உள்ளாகப் போகும் தமிழ் தேசிய கூட்டமைப்பு!

-அர்ச்சுணன்
இதுவரையில் ஊடகத்திற்கான கட்சியாக மட்டுமே இருந்து வந்த தமிழ்தேசிய கூட்டமைப்பு கட்சியானது, உத்தியோகபூர்வ கட்சியாக அதாவது அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தினை தேர்தல் ஆணையகத்திடம் வழங்கியுள்ளது. இவர்களின் இந்த விண்ணப்பத்தினை தேர்தல் ஆணையகம் ஆய்வு செய்து ,சட்ட விதிகளுக்கு ஏற்ப முறையில் விண்ணப்பம் கோரபட்டிருக்குமாயின் அந்த கட்சியை அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கான அனுமதியினை வழங்கும். சட்ட விதிகளுக்கு ஒவ்வாத முறையில் அந்த விண்ணப்பம் கோர பட்டிருக்குமாயின் அதனை நிராகரிப்பதற்கு தேர்தல் ஆணையத்திற்கு உரிமை உண்டு.

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டு விட்டதாக லண்டனில் இருந்து முழங்கும் வானொலி ஒன்று வெளியிட்ட செய்தி தவறானதாகும். அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கான விண்ணப்பம் மட்டுமே, தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் தேர்தல் ஆணையகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்னமும் பதிவு செய்யப்படவில்லை என்பதே சரியான செய்தியாகும்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழரசு கட்சி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்ணணி சுரேஷ் அணி ஆகிய கட்சிகளின் கூட்டாகிய தமிழ் தேசிய கூட்டமைப்பானது கடந்த மூன்று தேர்தல்களில் தமிழரசு கட்சியின் “வீட்டு” சின்னத்திலேயே போட்டியிட்டு இருந்தது. தொடர்ந்து தமிழரசு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவதின் மூலம் அந்த கட்சியின் பிரமுகர்களான சம்மந்தன் ,சேனாதிராஜா ஆகியோர்களின் கைகளே ஓங்கி இருக்கும் என்பதினால்! ரெலோ தலைவர் செல்வன் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர் அதனை விரும்பவில்லை. இவர்கள் இருவருமே தமிழ் தேசிய கூட்டமைப்பினை அரசியல் கட்சியாக பதிவு செய்யவேண்டும் என்பதில் அதிக ஆர்வமாக இருந்தவர்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினை பதிவு செய்யும் போது அதி உட்ச அதிகார பதவியான செயலாளராக யாரை நியமிப்பது என்பதில் போட்டிகள் எழலாம் என்று எதிர்பார்கப்பட்டு இருந்தது. இந்தவேளையில் மூவர்கள் செயலாளர்களாக நியமிக்கப்பட்டதாக அறியவந்தது. செல்வன் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் செயலாளர்களாகவும், சம்மந்தன் தலைவராவும் நியமிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தமிழ் தேசிய கூட்டமைப்பினை அரசியல் கட்சியாக அங்கீகரிப்பதில் இங்குதான் பிரச்சனைகள் எழலாமென எதிர்பார்க்கப் படுகின்றது. இலங்கை தேர்தல் ஆணையகத்தின் விதிகளுக்கு அமைய ஏற்கனவே ஒரு கட்சியின் செயலாளராக பதவி வகிக்கும் ஒருவர் மற்றொரு கட்சியின் செயலாளராக பதவி வகிக்க முடியாது. அது மட்டும் அல்லாது கட்சியின் செயலாளராக ஒருவருக்கு மேல் பதவி வகிக்க முடியாது. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பானது மூவரை கட்சியின் செயலாளர்களாக தெரிவு செய்து விண்ணபத்தினை வழங்கியுள்ளது.
ஏற்கனவே தமிழரசு கட்சியின் செயலாளராக இருக்கும் சேனாதிராஜாவும், ஈ.பி,ஆர்,எல்.எவ் கட்சியின் செயலாளராக இருக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளர்களாக நியமிக்கப்பட்டு இருப்பதினால்! தேர்தல் ஆணையகம் இந்த கட்சியின் விண்ணப்பத்தினை நிராகரிக்க கூடுமென தோன்றுகின்றது.
இருப்பினும் முதிர்ந்த அரசியல் அனுபவமும், வழங்கறிஞருமான இராவரோதயம் சம்மந்தருக்கு இது தெரியாமல் இருக்கமுடியாது.அது மட்டுமல்லாது சட்டவல்லுனர் என்பதற்காகவே தேசியல் பட்டியலின் மூலம் நாடாளமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்ட சுபத்திரன் என்பவர் தேர்தல் ஆணையகத்தின் சட்ட விதிகளை நன்றாக ஆராய்ந்த பின்னரே மேற்கூடப்பட்ட வகையில் பதவிகளை உள்ளடக்கிய விண்பத்தினை வழங்கியிருக்க வேண்டும். எனது சிற்றறிவிற்கு எட்டிய வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சட்ட சிக்கல்களை எதிர்நோக்கலாம் போன்றே தெரிகின்றது. முடிவு எப்படி வரும் என்பதினை பொறுத்திருந்து பார்ப்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக