தமிழ் சினிமா பாரடைஸின் சூப்பர் ‘இந்திரன்’ ரஜினிகாந்தும், ஒவ்வொரு முறையும் தான் செய்கிற ரிகார்ட்களை அடுத்த முறை அவரே ப்ரேக் பண்ணுகிற ‘தந்திரன்’ ஷங்கரும் கைக்கோர்க்க, தமிழ் சினிமாவின் ‘குபேரன்’ கலாநிதி மாறன் நூற்றியைம்பது கோடிகளை வாரியிறைக்க, தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறான் ‘எந்திரன்’. இறுதிக்கட்ட வேலைகளில் மும்முரமாக இருக்கும் ’பிரமாண்ட பிரம்மா’ ஷங்கர் ‘எந்திரன்’ பற்றி நம் குமுதம் வாசகர்களுக்காக மனம் திறக்கிறார்.
இரண்டு வருடங் களாக ஒரு தவம் போல் பண்ணியிருக்கும் ‘எந்திரன்’ பற்றி..
’’ ‘எந்திரன்’ 2000ல் தயார் பண்ணிய கதை. ஒவ்வொரு படத்தை முடித்ததும் அடுத்ததாக ரோபோவை எடுக்கலாம் என்று அந்த ஸ்கிரிப்ட்டில் இரண்டு மாதங்களாவது வொர்க் பண்ணுவேன்.
’சிவாஜி’க்குப் பிறகு எந்திரனை நினைத்துப் பார்த்த போது இன்னும் ஃப்ரெஷ்ஷாகத்தான் இருந்தது. இந்தக் கதையை எடுத்து முடிக்க இரண்டு ஆண்டுகள் பிடிக்கும். அதனால் அது ரிலீஸாகும் போதும் கூட, மக் களின் மனதில் ஒரு நிறைவைத் தரக் கூடிய படமாக இருக்க வேண் டும். இன்று ஆங்கிலப் படங்கள் ‘டப்’ செய்யப்பட்டு திரையிடப்படுகின்றன. அதன் வீச்சு கிராமங்கள்வரை இருக்கின்றன. இதனால் எல்லோருக்கும் தொழில்நுட்பங்கள், அதன் பயன்பாடு பற்றி தெரிந்திருக்கிறது. அதனால் இவ்வளவு மெச்சூர்டான மக்களை இரண்டாண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் போது எப்படங்களின் சாயலும் இல்லாமல், ஏற்கெனவே இடம்பெற்ற காட்சிகள் இல்லாத முற்றிலும் புதிய படத்தை நாம் கொடுக்க வேண்டும். அதாவது குறைந்தபட்சம் பத்தாண்டுகள் முன்னோக்கி இருக்கும் படத்தைத் தரவேண்டிய கட்டாயம் இருக்கும். அந்தளவிற்கு ஒரு ஃப்ரெஷ்னெஸ் தேவைப்படுவதால், எல்லாவிதமான முழு ஏற்பாடுகளையும் செய்து விட்டுதான் ஷூட்டிங்கில் இறங்கினோம்.’’
ரஜினியின் பங்கு எப்படி வந்திருக்கிறது?
”கமல் சார், அஜீத், விக்ரம் இவர்களைத்தான் கடுமையாக மெனக்கெடுவதற்கான உதாரணமாகச் சொல்வார்கள். அதேயளவிற்கு கடுமையான உழைப்பைக் கொடுத்திருக்கிறார் ரஜினி சார். தினமும் உடலை வருத்தக்கூடிய அளவிற்கு மேக்கப் போடுவது, ரிஸ்க் எடுத்து நிதானமாக நடிப்பது என்று கொஞ்சம் அதிகமாகவே மெனக்கெட்டிருக்கிறார். சிம்பிளாக சொல்ல வேண்டுமென்றால் ’எந்திரன்’ ரஜினி சாரின் விஸ்வரூபம் என்று சொல்லலாம்.”
இதுவரை தமிழ் சினிமாவில் தொட முடியாத உயரத்தில் இருக்கும் ஹாலிவுட்டின் ‘ஸ்டான் வின்ஸ்டைன் ஸ்டூடியோ’வில் நுழைந்து மிரட்டியிருக்கிறீர்களே. அந்த அனுபவம் எப்படி?
”இந்த ஸ்கிரிப்டை முடித்ததும் அதை எந்தெந்த யுக்திகளால் காட்சி வடிவில் பிரமாண்டமாக கொடுப்பது என்று ஆராய்ந்த போதுதான் ‘அனிமேட்ரானிக்ஸ்’ கைகொடுத்திருக்கிறது. உலகில் இந்த யுக்திகளில் முன்னணியிலிருக்கும் நிறுவனங்களை பட்டியலிட்ட போது, ‘பீட்டா டிஜிட்’ என்ற நிறுவனம் ஆஸ்திரேலியாவிலிருக்கிறது. ‘கிங்காங்’ போன்ற படங்களை எடுத்தவர்கள். அடுத்ததாக ’டெர்மினேட்டர்’, ‘அவதார்’, ‘ப்ரி டேட்டர்’ ஆகிய படங்களை எடுக்க உதவிய ‘ஸ்டான்வின்ஸ்டைன் ஸ்டூடியோ’ அமெரிக்காவில் இருக்கிறது. இவர்களில் நம் கதைக்கு யார் செட்டாவார்கள் என்று பேசிப் பார்த்த போது ‘ஸ்டான் வின்ஸ்டைன்’ நிறுவனம் உற்சாகமாக ஒப்புக் கொண்டார்கள். அனிமேட்ரானிக்ஸ் என்ற தொழில் நுட்பம் எந்திரன் படம் முழுவதும் தேவைப்படுகிறது.
உதாரணமாக ஒரு ரோபோ நடப்பது, பேசுவது, சண்டையிடுவது போன்ற காட்சிகளுக்கு இந்த அனிமேட்ரானிக்ஸ் யுக்திதான் பயன்படுத்தப்படுகிறது. ஒரு ரோபோவைப் போல் மோல்ட் எடுத்து உருவாக்குவார்கள். கையுறை, முகமூடி, உடைகள், ரோபோவின் பாகங்கள் என அந்தக் கதைக்குத் தேவையான அனைத்து எக்ஸ்ட்ரா ப்ராபர்ட்டிகளையும் உருவாக்கிக் கொடுப்பார்கள். ‘டெர்மினேட்டருக்கு’ ஹாலிவுட் ஹீரோவான அர்னால்ட்டின் உருவத்திற்காக அவரை மோல்ட் எடுத்தது போல நம் சூப்பர் ஸ்டாருக்கும் ஒரு மோல்ட் எடுத்திருக்கிறார்கள். ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரோடு நம் சூப்பர் ஸ்டாரின் மோல்ட் இருப்பதைப் பார்ப்பதற்கே ஒரு தமிழனாக எனக்குப் பெருமையாக இருக்கிறது. ஸ்டான் வின்ஸ்டைன் ஸ்டூடியோவின் அனிமேட்ரானிக்ஸ் ஜர்னலில் ‘எந்திரனும்’ இடம்பெற்றிருக்கிறான்.’’
ரஜினி பிறந்தமேனியில் நடித்திருப்பதாக ஒரு செய்தி உலா வருகிறதே. அது உண்மையா?
”அதில் உண்மையில்லை. ரோபோ சம்பந்தப்பட்ட கதை என்பதால் ‘டெர்மினேட்டர்’ படத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். வேறெந்தப் படங்களிலும் இடம்பெற்ற காட்சிகள் எதுவும் எந்திரனில் மறந்தும் கூட இடம்பெற்றுவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனத்தோடு உருவாக்கியிருக்கிறேன்.’’
‘சிவாஜியில்’ ‘சிங்கம் சிங்கிளாகத்தான் வரும்’ என்று பஞ்ச் டயலாக் வைத்திருந்தீர்களே. அதேபோல் எந்திரனிலும் ஏதேனும் பஞ்ச் டயலாக் இருக்கிறதா?
‘மனுஷன் படைச்சதிலேயே உருப்படியான ரெண்டே விஷயங்கள் ஒண்ணு நான், இன்னொன்னு நீ’’’ என்று ரஜினி ஐஸ்வர்யா ராயிடம் சொல்வார். இந்த வசனம் ரஜினி சாருக்கு மிகவும் பிடித்த வசனம்.’’
அப்படியானால் ரஜினியின் இமேஜிற்கு ஏற்ப அனல் பறக்கும் அரசியல் பஞ்ச் டயலாக் இல்லையா?
”எந்திரனில் அரசியல் வாசனையுள்ள வசனங்களே இல்லை. படத்தில் அரசியல் ஸீரோதான்.’’
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக