திங்கள், 5 ஜூலை, 2010

கட்டாய திருமணம் : மணமாலையை வீசிச் சென்றார் மணப்பெண்

சேலத்தில் நேற்று கூலி தொழிலாளியின் மகளுக்கு கட்டாய திருமணம் முடிக்க பெற்றோர் ஏற்பாடு செய்திருந்தனர். மணக்கோலத்தில் இருந்து மணமகள், மாப்பிள்ளை தாலி கட்டுவதற்கு முன் மணமாலையை கழற்றி வீசிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் செரி ரோடு பாண்டியராஜன் தெருவை சேர்ந்தவர் நீம்பு(52); ரிக்ஷா தொழிலாளி. அவரது மனைவி சாந்தி(47). இவர்களுக்கு செல்வி, அமுதா, ராஜேஸ்வரி, சதாம் உசேன் என நான்கு பிள்ளைகள் உள்ளனர்.தென்காசியை சேர்ந்தவர் குமார்(30). பத்து ஆண்டுக்கு முன் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல இடங்களில் கல் குவாரிகளில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். தற்போது அவர் சேலத்தில் வசிக்கிறார்.சில ஆண்டுக்கு முன் நீம்புவுக்கும், குமாருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. குமாரின் பழக்க வழக்கங்கள் நீம்பு மற்றும் அவரது குடும்பத்தாருக்கு பிடித்தன.குமாரை, மகள் ராஜேஸ்வரிக்கு திருமணம் செய்து வைக்க நீம்பு முடிவு செய்தார். ராஜேஸ்வரிக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. நீம்புவின் பெற்றோர் அவரை கட்டாயப்படுத்தி திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தனர்.

ஒரு வாரமாக திருமண ஏற்பாடுகள் நடந்தது. ஓமலூர், தின்னப்பட்டி, சேலம் பழைய பஸ் ஸ்டாண்டு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் உறவினர்களிடம் நேரடியாக சென்று நீம்பு, திருமணத்துக்கு அழைப்பு விடுத்தார். நேற்று காலை 10 மணிக்கு சேலம் சுகவனேஸ்வரர் கோவிலுக்கு மணமகன் குமார், மணமகள் ராஜேஸ்வரி ஆகியோர் அழைத்து வரப்பட்டனர்.நீம்புவின் உறவினர்கள் 300க்கும் மேற்பட்டோர் திருமணத்துக்கு வந்திருந்தனர். காலை 10.45 மணிக்கு முகூர்த்தம் வைக்கப்பட்டிருந்தது.  10.30 மணிக்கு திடீரென மணப்பெண் ராஜேஸ்வரி மணவறையில் இருந்து ஆவேசமாக எழுந்து, மணமாலையை கழட்டி வீசியெறிந்தார்.ராஜேஸ்வரியின் இந்த நடவடிக்கையால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 "இந்த திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை' என்று கூறிய அவர், சுகவனேஸ்வரர் கோவில் மண்டபத்தில் இருந்து வெளியேறினார்.உறவினர்கள் ராஜேஸ்வரியிடம் சமாதானம் செய்ய முயன்றனர். ராஜேஸ்வரி திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை. திடீரென்று திருமணம் நின்றதால், மணமகன் குமார் மற்றும் உறவினர்கள் சோகத்தில் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக