கோவையில் செம்மொழி மாநாடு முடிந்த கையோடு, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து பெரிய கூட்டத்தைக் கூட்டியுள்ளார். தமிழக அரசு மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்களை சுமத்தி, தமிழக அரசியலில் மாற்றம் வந்துவிடுவது போன்ற ஒரு எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இதுபற்றி வெவ்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள்? சந்தித்தோம்.
வீரபாண்டி ஆறுமுகம்
(தி.மு.க.)
செம்மொழி மாநாடு நடத்தி ஐந்து நாட்களும் லட்சக்கணக்கான மக்கள் வந்ததைக் கண்டு தாங்கிக்கொள்ள முடியாமல், பிள்ளைகள் பெற்ற குந்தியைப் பார்த்து குழவிக் கல்லால் தன் வயிற்றில் குத்திக் கொண்ட காந்தாரியைப் போல குத்திக் கொண்டுள்ளார் ஜெயலலிதா. கோவையில் அவருக்கு வந்த கூட்டம், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் வந்த கூட்டம். சொல்லப்போனால் உள்ளூர்க் கூட்டம் ரொம்ப கம்மி.
ஏதோ அரசியல் மாற்றம் வந்துவிடுவது போல அவர் பேசியதெல்லாம் கட்சிக்காரர்களை உற்சாகப்படுத்த... திருப்திப்படுத்த வழக்கம்போல கன்னா பின்னாவென்று பேசியிருக்கிறார். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டம், கலைஞர் காப்பீட்டுத் திட்டம் உள்பட தி.மு.க. அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் இன்று தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்றடைந்துள்ளது. எனவே, முதல்வர் கலைஞரின் செல்வாக்கு நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போவதை ஜெயலலிதாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தவிக்கிறார். புலம்புகிறார். எங்களைத் திட்டுகிறார். அவ்வளவுதான்! விட்டுத் தள்ளுங்கள்!
நயினார் நாகேந்திரன்
(அ.தி.மு.க.)
‘கோவைக்கு வாருங்கள். அணி திரண்டு வாருங்கள். படை திரண்டு வாருங்கள்' என்று செம்மொழி மாநாடு அறிவித்து ஆறு மாதங்கள் கூவிக் கூவி அழைத்தார்கள். அரசுப் பணம் தண்ணீராக செலவானது! மூன்றே நாள்தான் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வரும்படி அம்மா அழைத்தார்கள். கோவையே திக்குமுக்காடும் அளவுக்கு ஐந்து லட்சம் பேர் கூடிவிட்டது எதைக் காட்டுகிறது? மக்கள் அம்மா தலைமையில் எம்.ஜி.ஆர். ஆட்சி வரவேண்டும் என்று உறுதியாக இருப்பதையே காட்டுகிறது! அதுவும் ‘கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் தேர்தல் பணியைப் பாருங்கள்' என்றது தொண்டர்கள் மத்தியில் மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மா மதியம் வந்ததிலிருந்து மாலை நான்கு மணிக்கு சென்னைக்கு விமானம் திரும்பும் வரை யாருக்கும் சோறு, தண்ணீர் பற்றிகூட நினைக்கத் தோன்றவில்லை. திரும்பும்போது அம்மாவின் ‘கான்வாயேÕ நகர முடியவில்லை என்பது இதுவே முதல்முறை. குறித்து வையுங்கள். ஆட்சி மாற்றத்திற்கு தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
(காங்கிரஸ்)
ஜெயலலிதா இப்போதாவது தூக்கத்திலிருந்து எழுந்திருக்கின்றாரே! காலம் கடந்த விடிவு. தொடர்ந்து மக்களுக்காக ஜனநாயக முறைப்படி அவர் பணியாற்றினால் பாராட்டப் படுவார். ஆனால் ஒன்று, இந்தச் சூழ்நிலையிலும் தற்போது தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி வலுவாகத்தான் இருக்கிறது. தி.மு.க. அரசும், மத்திய அரசின் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது. அதில் சில குறைகள் இருக்கலாம். உதாரணமாக, மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம். இதில் கிராமத்தில் வேலை செய்யும் பெண்களுக்கும், வயதானவர்களுக்கும் நூறு ரூபாய் ஊதியம் தரப்படுவது அவர்களை முறையாகச் சேரவில்லை. இடையில் 30 சதவிகிதம் காணாமல் போகிறது. இதுபோன்ற குறைகளை கலைஞர் களைவார் என்ற நம்பிக்கை எனக்குண்டு. மற்றபடி, ஜெயலலிதாவுக்குக் கூடிய கூட்டத்தைப் பார்த்து பிரமிக்க ஒன்றுமில்லை. இந்தக் கூட்டத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு திருப்பூரில் நான், ப. சிதம்பரம், தங்கபாலு ஆகியோர் பேசியபோதும் பயங்கர கூட்டம் வந்தது. செம்மொழி மாநாட்டுக்கும் பெரிய கூட்டம் திரண்டது. இதனாலேயே மக்களின் மனநிலையை நூறு சதவிகிதம் கணித்துவிட முடியாது.
நாஞ்சில் சம்பத்
(ம.தி.மு.க.)
ஐந்து நாள் செம்மொழி மாநாட்டுக்கு வந்த கூட்டம், ஒரே நாளில் அ.தி.மு.க.வுக்கு திரண்டது. மக்கள் ஒரு மௌனப் புரட்சிக்குத் தயாராகி விட்டார்கள். எங்கள் கூட்டணி வரும் காலத்தில் இன்னும் வலுவாக கட்டி அமைக்கப்படும். இரு நூறுக்கும் மேற்பட்ட தொகுதிகளை வரும் தேர்தலில் வெற்றி பெறத் தகுந்த வகையில் வியூகங்கள் வகுக்கப்படும். பொறுத்திருந்து பாருங்கள்!
- வி. சந்திரசேகரன்
மக்கள் பேட்டி
மலர் விழி :
ஜெயலலிதாவிடமிருந்து தினமும் ஆட்கள் போய்க்கிட்டே இருக்கிறார்கள். இந்தம்மாவோட அரசியல் பண்ணா இனி சரிப்பட்டு வராதுங்கற அளவிற்கு தொண்டர்கள் துவண்டு போயுள்ளார்கள். பயந்து போய் இப்போ ‘கோயமுத்தூரில் ஷோ' காட்டியிருக்காங்க. ஏழைங்க பசிக்கு, கலைஞர் ஐயா ஒரு ரூபாய்க்கு அரிசி போடறாரே.. அது ஒண்ணே போதும்ங்க!
மீனு
அம்மா சிங்கம் மாதிரி எந்திரிச்சுட்டாங்க. அவங்க அந்த மீட்டிங்கில் தி.மு.க. ஆட்சி மேல சொன்ன ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் என்ன பதில் சொல்லப் போறாங்க?
ஒரு பொலிட்டிகல் அலசல் ரிப்போர்ட்
1. விலைவாசி உயர்வு, மின் தடை போன்ற எல்லா விஷயங்களுக்கும் கருணாநிதியே காரணம் என்று ஜெ. சொல்வது மக்களிடம் பொதுவாக எடுபடவில்லை. .
2. திடீரென எழுச்சி காட்டிய ஜெயலலிதா, தேர்தல் வரை இப்படியே இருப்பார் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.
3. கூடும் கூட்டத்தை மட்டும் வைத்து மக்கள் எழுச்சி என்று எந்த முடிவுக்கும் வந்து விட முடியாது.
4. அ.தி.மு.க.வுக்கு எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து மந்திரமும், கிராமத்துப் பெண்களின் வாக்கும் இன்னும் ஜெயலலிதாவை நம்பியிருக்கும் விசுவாசிகளான தொண்டர்கள் கூட்டமும் பெரிய பலம்.
5. தி.மு.க. அரசின் சாதனைகளை மக்கள் அத்தனை சுலபமாக மறந்துவிட மாட்டார்கள்.
6. தென் மாவட்டங்களை தன் வசப்படுத்தியிருக்கிறார் மு.க.அழகிரி.
7. தேர்தல் நேரத்தில் செலவு செய்ய கோடிகளும், மீடியாவும் தி,மு,க.வின் கையில் நிரம்பி வழிவது மிகப் பெரிய பலம்.
8. ஜெயலலிதா கூட்டணிக்காகக் காத்திருக்கிறார். குதிரை பேரம் சரியாக அமைந்தால்தான் சரியான சவால் இருக்கும். இல்லாவிட்டால் கலைஞர் நாற்காலியில் அமர்ந்தபடியே ரொம்ப சுலபமாக மகுடத்தை மீண்டும் சூடிக் கொள்வார்...
- நமது குமுதம் அரசியல் டீம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக