வெள்ளி, 30 ஜூலை, 2010

கடும் போட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தான தலைவர் பதவிக்கு

உலகின் பணக்கார கடவுளான திருப்பதி ஏழுமலையான் கோவில் நிர்வாகத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் கவனித்து வருகிறது.
 
இந்த தேவஸ்தானத்தின் தலைவராக டி.கே.ஆதிகேசவலுநாயுடு இருந்து வருகிறார்.
 
குண்டூர் பாராளுமன்றத்தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு 5 தடவை தேர்வான ஆதிகேசவலு நாயுடு, திருப்பதி தேவஸ்தான தலைவர் பதவியை 2-வது முறையாக வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 24-ந் தேதியுடன் முடிகிறது.
 
எனவே திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டியதுள்ளது. ஆந்திர மாநில அரசு பரிந்துரை செய்யும் நபர் தான் திருப்பதி தேவஸ்தான தலைவர் பதவிக்கு வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளும் கட்சியை சேர்ந்தவர்களே பெரும்பாலும் தேவஸ்தான தலைவர் பதவிக்கு வருவார்கள்.
 
தற்போதைய தலைவர் ஆதிகேசவலு நாயுடு தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.ஆக இருந்தவர். பாராளுமன்றத்தில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது கட்சி கட்டளையை மீறி ஆதிகேசவலு நாயுடு காங்கிரசுக்கு சாதகமாக நடந்து கொண்டார். அதற்கு பரிசாக சோனியா உத்தரவின் பேரில் இவரை திருப்பதி தேவஸ்தான தலைவராக அப்போதைய முதல்- மந்திரி ராஜசேகர ரெட்டி ஆக்கினார்.
 
தற்போது 3-வது முறையாக திருப்பதி தேவஸ்தான தலைவர் பதவிக்கு வர ஆதிகேசவலு நாயுடு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். ஆனால் தலைவர் பதவிக்கு இந்த தடவை கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
 
கடலோர ஆந்திராவில் செல்வாக்கு பெற்ற தொழில் அதிபர் ராயப்பட்டி சாம்ப சிவராவ், மேல்-சபை முன்னாள் எம்.பி.க்கள் கிராந்தி மல்லிகார்ஜூன ராவ், கிரீஸ் சங்கி, முன்னாள் எம்.பி. சுப்பிராமி ரெட்டியின் மனைவி இந்திரா ரெட்டி ஆகிய 4 பேரிடையே பலத்த போட்டி நிலவுகிறது.
 
ஆதிகேசவலு நாயுடு சிறப்பு தரிசனம் என்ற பெயரில் பணக்காரர்களுக்கு மட்டும் வசதி செய்து கொடுத்து விட்ட தாகவும், திருப்பதி வரும் ஏழை பக்தர்களின் நலனை கவனத்தில் கொள்ளவில்லை என்றும் குற்றச்சாட்டு உள்ளது. எனவே அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
 
தொழில் அதிபர் ராயப்பட்டி சாம்பசிவ ராவ் கடந்த 20 ஆண்டுகளாக திருப்பதி தேவஸ்தான தலைவர் பதவிக்கு முயன்று வருகிறார். இவர் முதல்வர் ரோசய்யாவை சந்தித்து பேசியுள்ளார்.
 
அது போல சுப்பிராமிரெட்டி மனைவி இந்திராரெட்டியும் ரோசய்யாவிடம் பேசியுள்ளார். தலைவர் பதவி கேட்டு அவர் டெல்லி காங்கிரஸ் மேலிட தலைவர் களிடமும் ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்திராரெட்டி தலைவரானால், திருப்பதி தேவஸ்தானத்தின் முதல் பெண் தலைவர் என்ற சிறப்பைப்பெறுவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக