சனி, 24 ஜூலை, 2010

காயமடைந்த இரு மயில்கள், விவசாயி வீட்டில் பராமரிக்கப்படுகிறது

அவிநாசி : காயமடைந்த இரு மயில்கள், கோதபாளையத்தில் விவசாயி வீட்டில் பராமரிக்கப்படுகிறது. அவிநாசி அருகே வஞ்சிபாளையத்தில் ஆண் மயில் ஒன்று பறக்க முடியாமல் அவதிப்பட்டதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள், திருப்பூரிலுள்ள வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் கொடுத் துள்ளனர். இருப்பினும் ஒருவரும் வரவில்லை.

இந்நிலையில், கோதபாளையம் - கரைத் தோட்டத்தை சேர்ந்த குருசாமி என்ற விவசாயி, மயிலின் நிலை குறித்து கால்நடை மருத்துவர் செந்தில்குமாரிடம் தெரிவித்தார். உடனடியாக அவர் சென்று, மயிலுக்கு சிகிச்சை அளித்தார். இதற்கிடையே, அதே பகுதியில் மற்றொரு ஆண் மயில் நோயுற்ற நிலையில் காணப் பட்டது. அதற்கும் சிகிச்சை அளிக்கப் பட்டது. இரு மயில்களின் நிலை குறித்து பல்லடம் வனச்சட்ட அமுலாக்கப்பிரிவு அலுவலகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது.

வனக்காப்பாளர் வாசியப்பன், கோதபாளையம் சென்று மயில்களின் நிலை குறித்து ஆய்வு செய்தார். கால்நடை மருத்துவர் செந்தில்குமார்,""இரு நாட்கள் மயில்களை வைத்து உரிய மருந்து அளித்தால் மட்டுமே அவை குணமடையும்,'" என்றதால், வனத்துறை ஒப்புதலோடு, இரு மயில்களும் தற்போது குருசாமி வீட்டில் பராமரிக்கப்படுகின்றன.

பொதுமக்கள் கூறுகையில், "இப்பகுதியில் அடிக்கடி மயில்கள் காயமடையும் சம்பவம் நடக்கிறது. எனவே, இப்பகுதிக்கென்று தனியாக கால்நடை மருத்துவரை நியமிக்க வேண்டும்,' என்றனர்.கடந்த 18ம் தேதி கருவலூர் அருகே உப்பிலிபாளையத்தில் காயமடைந்த மயில் ஒன்றை, பொதுமக்கள் காப்பாற்றி, அவிநாசிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.  இரு தினங்களுக்கு பின், மயில் காட்டில் விடப்பட்டது. அதற்குள் கோதபாளையத்தில் இரு மயில்கள் காயமடைந்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக