புதன், 14 ஜூலை, 2010

நடிகர், நடிகைகள் இலங்கை பயணம்?

ஈழத் தமிழர்களை சந்திக்க தமிழ் நடிகர், நடிகைகள் இலங்கை பயணிக்கலாம் என்று தெரிகிறது.

இதன்மூலம் நடிகை ஆசி்ன் இலங்கை சென்ற விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் இறுதிக் கட்ட போரின்போத தமிழர்கள் கொல்லப்பட்டதை நடிகர் சங்கம் கண்டித்தது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டியும் அரசிடம் அளித்தது.

போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் முகாம்களில் முடங்கியுள்ளனர். ஏராளமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போரில் பெற்றோரை இழந்த குழந்தைகள் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையி்ல் கடும் எதிர்ப்பை மீறி படப்பிடிப்புக்காக இலங்கை சென்ற நடிகை ஆசின், அதிபர் ராஜபக்சேவின் மனைவியுடன் ஈழத் தமிழர்களை நேரில் சந்தித்தார்.

யாழ்ப்பாணம், வவுனியா பகுதிகளுக்குள் சென்ற அவர் தனது சொந்த செலவில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தினார்.
பெற்றோரை இழந்த சிலரை தத்தெடுக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். இந் நிலையில் தன்னை சந்தித்த தமிழர்கள், எங்களைப் பார்க்க ஏன் அக்கா யாருமே வரவில்லை என்று கேட்டதாக பேட்டியும் அளித்துள்ளார்.

இது குறித்து நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறுகையில், நடிகர், நடிகைகள் அனைவரும் இலங்கை செல்வது பற்றி நடிகர் சங்க செயற்குழுவில் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

இலங்கையில் நடந்த சர்வதேச பட விழாவுக்கு செல்லக்கூடாது என்று தான் தடை விதிக்கப்பட்டது. ஆசின் தொழில்ரீதியாகத்தான் இலங்கை சென்றுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கும் முடிவை மறுபரிசீலனை செய்வோம் என்றும் அறிவித்துள்ளார்.

முகாம்கள், மருத்துவமனைகளுக்குச் சென்று தமிழர்களை சந்தித்தன் மூலம் ஆசின் தனக்கு விதிக்கப்படவிருந்த தடையை மிக விவகாரமாக கையாண்டு தப்பிவிட்டதாகத் தெரிகிறது. கேரளாவா சும்மாவா?.

நடிகர், நடிகைகள் இலங்கை சென்று தமிழர்களை சந்திப்பதால் எந்த வகையிலாவது தமிழர்களுக்கு நன்மை ஏற்படுமா என்பது தெரியவில்லை.

முதல்வருடன் சந்திப்பு:

இந் நிலையில் முதல்வர் கருணாநிதியை இனறு அவரது இல்லத்தில் சரத்குமார், ராதிகா தம்பதியினர் சந்தித்தனர். அப்போது சரத்குமார் தனது பிறந்தநாளையொட்டி முதல்வரிடம் வாழ்த்துப் பெற்றார்.

சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய சரத்குமார் அளித்த பேட்டி:

கேள்வி: சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும்?

பதில்: கூட்டணி அமைப்பது குறித்து சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக் குழுவில் கட்சித் தலைவராகிய எனக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் நிர்வாகிகளுடன் மீண்டும் கலந்து பேசி யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்வோம்.

கேள்வி: எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா திமுக அரசு மீது சரமாரியாக குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளாரே?

பதில்: ஒரு கட்சிக்கு தலைவர் என்ற முறையில் அவர் குற்றச்சாட்டு சுமத்தியிருக்கிறார். அதற்கு திமுக தான் பதில் சொல்ல வேண்டுமே தவிர நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன்.

கேள்வி: ஜெயலலிதா கூறிய குற்றச்சாட்டு தவறு என்கிறீர்களா?, சரி என்கிறீர்களா?

பதில்: இன்றைக்கு என்னுடைய பிறந்தநாள் என்பதால் அரசியல் பேச நான் விரும்பவில்லை. திமுக அரசு செய்துள்ள நல்ல திட்டங்களை நாங்கள் வரவேற்கிறோம். செய்யாத சில திட்டங்களை நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம். அதையும் அரசு செய்கிறது.

நாகரீக அரசியலைதான் சமத்துவ மக்கள் கட்சி எப்போதும் நடத்தும். அதனால்தான் என்னுடைய பிறந்தநாள் அன்று முதல்வர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளேன். பதவியில் அமர வேண்டும் என்பது என் ஆசை இல்லை. மற்றவர்களை பதவியில் அமர வைக்கும் தகுதியை உருவாக்குவதுதான் எனது ஆசை.

எனது தந்தை மறைவுக்கு பின்பு நான் அப்பா என்று அழைப்பது முதல்வர் கருணாநிதியைதான். எனது பிறந்தநாளான இன்று அவரிடம் நான் ஆசி பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக