சனி, 31 ஜூலை, 2010

சென்னையில் பெருகி வரும் கள்ளக்காதல்கள்-அதிகரிக்கும் கொலைகள்

சென்னையில் கள்ளக்காதல்கள் தொடர்பாக நடக்கும் கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

சமீபத்தில்தான் ஒன்றரை வயதே ஆன சிறுவன் ஆதித்யாவை கொடூரமாக கொலை செய்து பிணத்தை சூட்கேஸில் அடைத்து வைத்துபுதுச்சேரி வரை கொண்டு பஸ்சில் போட்டு விட்டு வந்ததாக பூவரசி என்ற பெண்ணைப் போலீஸார் கைது செய்தனர்.

பெயருக்கும், அவர் செய்த செயலுக்கும் சற்றும் சம்பந்தம் இல்லாமல் நடந்து கொண்ட பூவரசியின் கொலைச் செயலுக்குக் காரணம் -கள்ளக்காதல். தான் உயிரைக் கொடுத்து வந்த காதலர், தன்னை வெறும் உடல் பசிக்கு மட்டுமே பயன்படுத்தி வந்ததால் ஆத்திரமடைந்து அவர் பெற்ற பிள்ளையைக் கொன்று பழிதீர்த்துக் கொண்டார் பூவரசி.

இந்த அதிர்ச்சிச் மனதிலிருந்து மறைவதற்குள் இன்னும் ஒரு கள்ளக்காதல் கொலை சென்னை மக்களை உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் கள்ளக்காதலரை, அவரைக் காதலித்து வந்த பெண் போலீஸ்காரரின் கள்ளக்காதலன் வெட்டிக் கொன்று உடலை பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்துள்ளார்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். 35 வயதான இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த 37 வயதான சாஸ்திரக் கனிக்கும் இடையே இளம் வயது முதல் காதல் இருந்தது. ஆனால் இந்தக் காதலை சாஸ்திரக் கனியின் வீட்டில் ஏற்கவில்லை. மாறாக இன்னொருவருக்கு கட்டி வைத்து விட்டனர். அவர் மூலமாக சாஸ்திரக் கனிக்கு 2 குழந்தைகளும் உள்ளனர்.

இதனால் மனம் உடைந்து நீண்ட காலமாக கல்யாணமே செய்து கொள்ளாமல் இருந்து வந்தார் ராஜேந்திரன். பின்னர் அவரது தாயார் செல்லம்மாளின் வற்புறுத்தல் காரணமாக அனிதா என்ற பெண்ணை மணந்தார்.

ஆனால் மணமான ஒரே மாதத்தில் அனிதாவைப் பிரிந்து விட்டார். அதேபோல சாஸ்திரக் கனியின் கணவருக்கு, மனைவியின் முதல் காதல் தெரிய வந்ததால் அவரும் பிரிந்து போய் விட்டார்.

இருவரும் துணையின்றி தனி மரமானார்கள். இதையடுத்து மீண்டும் பழைய பழக்கம் துளிர்த்து நெருங்கிப் பழக ஆரம்பித்தனர்.

ராஜேந்திரன் சென்னை வேளச்சேரி நேரு நகரில் வசித்து வந்தார். பெருங்குடியில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் மின்கணக்கீட்டாளராகப் பணியாற்றி வந்தார். சாஸ்திரக்கனி வடபழனி காவல் நிலையத்தில் பெண் காவலராகப் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் ஜூன் 30ம் தேதி முதல் ராஜேந்திரனைக் காணவில்லை. இதுகுறித்து வேளச்சேரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார் செல்லம்மாள். வேளச்சேரி போலீஸார் நடத்திய விசாரணை யில் சாஸ்திரக் கனி சிக்கினார். அவரிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதையடுத்து பெண் போலீஸாரை விட்டு சாஸ்திரக் கனியிடம் தீவிர விசாரணை நடத்தியபோது உண்மை தெரிய வந்தது.

ராஜேந்திரன் வெட்டிக்கொல்லப்பட்டு விட்டார் என்றும், அவரது உடலை எரித்து விட்டதாகவும் சாஸ்திரக் கனி கூறியுள்ளார்.

இதையடுத்து தொடர்ந்து நடந்த விசாரணையில், சாஸ்திரக்கனியின் கள்ளக்காதலரான வீரராஜன்தான் தனது கூட்டாளிகளோடு சேர்ந்து இந்தக் கொலையைச் செய்தது தெரிய வந்தது.

ஒரு வருடத்திற்கு முன்பு வேளச்சேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார் சாஸ்திரக்கனி. அப்போது அங்குள்ள இன்ஸ்பெக்டரிடம் டிரைவராக இருந்தவர் வீரராஜன். இவருக்கு 25 வயதாகிறது. சாஸ்திரக் கனி பார்க்க அழகாக இருப்பார் என்பதால் அவரது அழகில் மயங்கினார் வீரராஜன். இதையடுத்து தனது வலையில் ஆசை வார்த்தைகளை கூறி அவரை விழ வைத்தார். அதன் பின்னர் இருவரும் கணவன், மனைவி போல உல்லாசமாக இருக்க ஆரம்பித்தனர்.

ஒருபக்கம் ராஜேந்திரன், இன்னொருபக்கம் வீரராஜன் என இரட்டை சவாரியை மேற்கொண்டு வந்தார் சாஸ்திரக்கனி. இந்த நிலையில்தான் தனது மாமியார் பாக்கியம், பெரும் தொல்லையாக இருந்து வருவதாகவும், அவரை கொல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார் ராஜேந்திரன். இதைக் கேட்ட சாஸ்திரக்கனி, தன்னிடம் ஒரு ஆள் இருப்பதாக கூறி வீரராஜனை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். வீரராஜன், சாஸ்திரக்கனியின் கள்ளக்காதலர் என்பது அப்போது ராஜேந்திரனுக்குத் தெரியாதாம். அது தெரியாமல் மாமியாரைக் கொல்ல வீரராஜனிடம் பேசியுள்ளார் ராஜேந்திரன். அவரும், ரூ. 2 லட்சம் கொடுத்தால் தீர்த்துக் கட்ட ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார்.

இந்த சமயத்தில்தான் வீரராஜனுக்கும், சாஸ்திரக் கனிக்கும் இடையே தொடர்பு இருப்பது ராஜேந்திரனுக்குத் தெரிய வந்து அதிர்ந்தார். இதுகுறித்துசாஸ்திரக்கனியிடம் சண்டை போட்டார். முதலில் எனது மாமியாரை தீர்த்துக் கட்டி விட்டு உன்னைக் கவனிக்கிறேன் என்று கோபத்துடன் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு பயந்துபோன சாஸ்திரக்கனி வீரராஜனிடம் இதைக் கூற, கவலைப்படாதே என்று அவரை அமைதிப்படுத்தினார் வீரராஜன். பின்னர் தனது கொலைத்திட்டத்தை மாற்றி, பாக்கியத்திற்குப் பதில் ராஜேந்திரனை தீர்த்துக் கட்ட தீர்மானித்தார்.

இதையடுத்து தனது ஆட்களை தயார் செய்த வீரராஜன், ராஜேந்திரனைத் தொடர்பு கொண்டு திருத்தணிக்குப் போய் திட்டத்தை இறுதிசெய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதை நம்பிய ராஜேந்திரனும் அவருடன் கிளம்பினார்.

காரில் வீரராஜன் ஏற்பாடு செய்து வைத்திருந்த அவரது நண்பர்கள் வேணுகோபால், பசுபதி, முருகன் இருந்தனர். சதீஷ் என்பவர் காரை ஓட்டினார்.

திருவள்ளூர் அருகே உள்ள கே.கே.சத்திரம் எல்லப்பநாயுடு பேட்டை சுடுகாட்டில் காரை நிறுத்தி அனைவரும் கீழே இறங்கினார்கள். பசுபதியும், முருகனும் மது குடித்தனர். வீராரஜானும், ராஜேந்திரனும் பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது பசுபதி திடீரென்று கத்தியை எடுத்து பாய்ந்து வந்து ராஜேந்திரனை ஓங்கி வெட்டினார். இதை எதிர்பாராத ராஜேந்திரன் அலறியடித்து ஓடினார். இதைப் பார்த்த வீரராஜன், வெட்டிக் கொல்லுங்கள் விடாதீர்கள் என்று சத்தம் போட்டு துரத்தினார். மற்றவர்களும் துரத்தினர். நீண்டதூரம் ஓடிய ராஜேந்திரன் ஒரு கட்டத்தில் கீழே விழுந்து விட்டார்.

இதையடுத்து அங்கேயே வைத்து சரமாரியாக வெட்டிக் கொன்றனர். உயிர் போனதை உறுதி செய்து கொண்ட பின்னர் ராஜேந்திரன் உடல் மீது வீரராஜன் பெட்ரோலை ஊற்றி தீவைத்தார்.

உடல் முழுவதும் எரிந்து சாம்பலான பின்னர் சென்னைக்குத் திரும்பி விட்டது இந்தக்கும்பல். பின்னர் ராஜேந்திரனின் செல்போனை எடுத்து சைதாப்பேட்டை ஆற்றில் போட்டு விட்டனர்.

அதன் பின்னர் கடந்த 26ம் தேதி சாஸ்திரக்கனியை சந்தித்த வீரராஜன் உல்லாசமாக இருந்துள்ளார். அதன் பிறகு ராஜேந்திரன் கொலை செய்யப்பட்டதைக் கூறியுள்ளார்.

தனது காதலர் வீரராஜனுக்கு 10 ஆயிரம் மட்டுமே கொடுத்ததாக சாஸ்திரக் கனி கூறியுள்ளார். மேலும் நேற்றுநடந்த விசாரணையின்போது கள்ளக்காதலால் தனது வாழ்க்கை சீரழிந்து விட்டதே என அழுதபடி இருந்தாராம்.

சாஸ்திரக் கனி கூறிய இந்தத் தகவல்களைத் தொடர்ந்து அவரையும், வீரராஜன், வேணுகோபால், முருகன், சதீஷையும் போலீஸார் கைது செய்தனர்.

தலைமறைவான பசுபதியை அவரது சொந்த ஊரான மதுரையில் வைத்து போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

சென்னை நகரில் கள்ளக்காதல்களும், முறை கெட்டகாதல்களும் அதிகரித்து வருவதோடு, அவை கொலையில் முடிவதும் மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக