வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கதிரவெளி, வெருகம்பல் மலைப்பகுதியில் புராதன காலத்தில் உருவாக்கப்பட்டதாக நம்பப்படும் உலோகத்தாலான 2 அடி உயரமான அம்மன் சிலையையும் மலையில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களையும் பிரதேசவாசிகள் இன்று கண்டுபிடித்துள்ளனர்.
அச்சிலையை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு கொண்டு செல்ல வேண்டும் என பொலிஸார் கூறியுள்ள நிலையில், அச்சிலையை அதே இடத்தில் வைத்து மக்கள் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா கோரியுள்ளார்.
கதிரவெளி வைத்தியசாலைக்கு அருகில் செல்லும் இரண்டரை கிலோமீற்றர் தூரம்கொண்ட வெருகம்பல் வீதியின் முடிவில் உள்ள குரங்கு மாலையிட்ட அல்லது குரங்கு கொடிபோட்ட மலை எனும் பகுதியிலேயே இச்சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வாகரை அண்டிய பகுதிகளில் இயக்கர் நாகர் வாழ்ந்தாகக் கூறப்படுகிறது. அப்பகுதியில் வட்டவடிவான ஒரு கல்லும் அதைச் சுற்றி கற்களால் அமைக்கப்பட்ட கதிரைகளும் காணப்பட்டன. அவ்வழியால் செல்லும் மக்கள் அங்கு வழிபாடு நடத்திவிட்டுச் செல்வது வழக்கம். மதிப்பு மிக்க பல பொருட்கள் இருப்பதாகவும் அங்குள்ள மக்கள் நம்புகின்றனர்.
இந்நிலையில் இன்று ஞாயிறு காலை வேலையின் நிமித்தம் அப்பகுதிக்குச் சென்ற கனகராஜா, குமார் ஆகிய இரு பிரதேசவாசிகள் இளைப்பாறிக் கொண்டிருந்தபோது, மலையிலுள்ள குகையொன்றிலிருந்து வித்தியாசமான ஒளிக்கீற்றுகள் தென்பட்டதை அவதானித்துள்ளனர். அருகில் சென்று பார்த்தபோது உலோகத்தாலான 2 அடி உயரமான அம்மன் சிலையும் அதனை அண்டிய மலைப்பகுதியில் சில எழுத்துகள் பொறிக்கப்பட்டிருப்பதையும் அவதானித்துள்ளனர். அவர்கள் இவ்விடயம் குறித்து அப்பிரதேச மக்களுக்குத் தெரிவித்ததையடுத்து பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அப்பகுதிக்கு வந்தனர்.
இன்று காலை 9.45 தொடக்கம் 10.50வரை அம்மன் சிலைக்கு அருகில் சென்று மக்கள் பார்வையிட்னர். காலை 11 மணிக்குப் பின் அதை அருகில் சென்று பார்வையிடுவதற்கான அனுமதி பொலிஸாரால் மறுக்கப்பட்டதுடன் பெருமளவிலான பொலிஸாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இச்சிலை விவகாரம் தொடர்பாக பிரதேச செயலாளர் செல்வி இராகுல நாயகி, பிரதேச சபை தவிசாளர் க.கணேஸ் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்து.
அப்பகுதியை பிரதேச செயலாளர், பிரதேச சபைத் தவிசாளர், கிராமத் தலைவர்கள், கதிரவெளி பத்திரகாளி அம்மன் ஆலய பிரதம குரு பி. மகேஸ்வரம் , பொலிஸ் அதிகாரிகள், தொல் பொருள் நிலைய மாவட்ட அதிகாரிகளளும் சென்று பார்வையிட்டனர்.
அவ்விடத்துக்கு வருகை தந்த பொலிஸ் அதிகாரிகள் அச்சிலை அவ்விடத்தில் இருந்து ஒரு பாதுகாப்பான இடத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுடன் இவ்விடம் தொல்பொருள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே முழுமையான தகவல் கூற முடியும் எனக் கூறுகின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக பிரதேச செயலாளர் செல்வி.இராகுல நாயகி மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளதுடன், சிலை தொடர்பாக பொது மக்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், பொலிஸாரின் ஒருமித்த முடிவு பிரதானமானது எனவும் குறிப்பிட்டார்.
தாம் காட்சி கண்ட இடத்தில் இருந்து சிலை அகற்றப்பட்டால், வேறு புது வித வரலாற்றுக் கதை அவ்விடத்துக்கு புனையப்பட்டு வேறு யாரும் உரிமை வர் எனவும் அதைவிடதமக்கு காட்சி தந்தவரே அவ்விடத்தில் இருக்க வேண்டும் என பிரதேச இளைஞர் கழகம் மற்றும் பொது மக்கள் பொது அமைப்புக்கள் கூறுகின்றன.
இச்சிலை வேறு இடத்துக்கு மாற்றப்படாமல் அவ்விடத்தில் வைப்பத்ற்கு மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடியுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட த.தே.கூட்டமைப்பு நாடாளுனம்ற உறுப்பினர் பொன்.செல்வராஜா 'தமிழ் மிரர்' இணையத் தளத்திற்குத் தெரிவித்தார். அச்சிலையை கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலேயே வைத்து அதற்குரிய வழிபாடுகளைச் செய்வது சாலச் சிறந்தது எனவும் வேறு இடத்துக்கு மாற்றுவது மக்களை வேதனைப்படுத்தும் செயல் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக