ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீரவை படுகொலை செய்வதற்கான தகவல்களை புலிகளுக்கு திரட்டிக் கொடுத்தார்கள் என்ற பெயரில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 11 வருட கடூழியச் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. |
மங்கள சமரவீர எம்.பி. முன்னர் வெளிவிவகார அமைச்சராகப் பதவிவகித்த காலத்திலேயே அவரைப் படுகொலை செய்வதற்கான புலிகளின் திட்டத்திற்கு மேற்படி குற்றவாளிகள் இருவரும் உதவி புரிந்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பிலான வழக்கு நேற்று புதன்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, குற்றவாளிகள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதன் அடிப்படையிலேயே அவர்களுக்கு மேற்படி கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. தொடக்கும்புர கெதர ரணவீர, டீ.எஸ்.ஜி. துஷார ஆகியோரே இவ்வாறு தண்டனை பெற்றவர்களாவர். 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி வரையிலான ஒருவார காலப் பகுதிக்குள் மேற்படி குற்றவாளிகள் இருவரும் மங்கள சமரவீர எம்.பி.யின் கொழும்பு மற்றும் மாத்தறையிலுள்ள வாசஸ்தலங்கள் உள்ளிட்ட தகவல்களை புலிகள் அமைப்புக்கு வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். அத்துடன், மங்கள சமரவீர எம்.பி. தொடர்பிலான தவவல்கள் புலிகள் அமைப்பிடமிருந்து கோரப்பட்டமை தொடர்பில் பொலிஸாருக்குத் தெரிவிக்கப்படாமை குறித்தும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக