வெள்ளி, 4 ஜூன், 2010

சென்னையில் இன்று அருந்ததி ராய் பேசுகிறார்


சட்டீஸ்கார், ஒரிசா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் மாவோயிஸ்ட்களை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து மேற்கொண்டுவரும் பச்சை வேட்டை என்ற நடவடிக்கையை எதிர்த்து எழுத்தாளர் அருந்ததி ராய் இன்று சென்னையில் பேசுகிறார்.

பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேச பொதுவுடமைக் கட்சி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், மே 17, தமிழர் உரிமை இயக்கம், சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உறுப்பினர்களாகக் கொண்ட உள்நாட்டு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பாக பச்சை வேட்டையைக் கண்டித்து மாபெரும் அரங்கக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை தியாகராயர் நகர், வேங்கட நாராயணா சாலையில் உள்ள செ.தெ. நாயகம் மேனிலைப் பள்ளியில் (திருப்பதி தேவஸ்தானம் எதிரில்) இன்று மாலை 5 மணிக்கு இந்த அரங்கக் கூட்டம் நடைபெறுகிறது.
இதில், சமீபத்தில் பச்சை வேட்டை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவரும் தண்டகாரண்ய காட்டுப் பகுதிக்குச் சென்று அங்குள்ள பழங்குடி மக்களையும், மாவோயிஸ்ட்டுகளையும் சந்தித்துப் பேசிவிட்டு வந்த எழுத்தாளர் அருந்ததி ராய் இக்கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார்.

ஏகாதிபத்திய எதிர்ப்பியக்கத்தைச் சேர்ந்த வேலுச்சாமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலர் விடுதலை இராசேந்திரன் வரவேற்புரை நிகழ்துகிறார். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் தோழர் தியாகு அறிமுக உரை நிகழ்த்துகிறார்.

டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகப் பேராசிரியர் அமித் பாதுரி, பேராசிரியர் கிலானி, பேராசிரியர் சாய்பாபா ஆகியோர் உரை நிகழ்த்தியப் பிறகு அருந்ததி ராய் சிறைப்புரையாற்றுகிறார்.

பன்னாட்டு உள்நாட்டு பெரு முதலாளிகளின் நலனுக்காக சொந்த நாட்டு மக்களின் மீது போரைத் திணிக்காதே என்றும், பச்சை வேட்டை நடவடிக்கை பயங்கரவாதத்திற்கு எதிரான போரல்ல, அது மக்களுக்கு எதிரான போர் எனற முழக்கங்களுடன் இந்த அரசங்கக் கூட்டம் நடக்கிறது.

சாதி ஒழிப்பு விடுதலை முன்னணியைச் சேர்ந்த வழக்கறிஞர் ரஜினிகாந்த் நன்றி கூறுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக