தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைந்திருந்தால் பெரும் உயிரிழப்புக்களை தவிர்த்திருக்கலாம் என நோர்வேயின் சுற்றாடல் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். யுத்தத்தை நிறுத்தி சரணடையுமாறு புலிகளிடம் நோர்வே விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால் ஐக்கிய நாடுகள் அமைப்பு, அமெரிக்கா அல்லது இந்தியா போன்றவற்றின் கண்காணிப்பில் யுத்தத்தை நிறுத்தியிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். யுத்த காலத்தில் தொடர்ச்சியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும் தொடர்புகளைப் பேணி வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு பட்ட காரணங்களினால் யுத்தத்தை நிறுத்துவதற்கு அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் இணங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். நிபுணர்கள் குழுவில் அங்கம் வகிக்கும் நபர்கள் சர்வதேச ரீதியான விவகாரங்கள் தொடர்பில் அனுபவமிக்கவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது புலித்தேவன், நடேசன் போன்ற விடுதலைப் புலித் தலைவர்கள் சரணடைவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு தம்மை கோரியதாகவும், இது தொடர்பில் அரசாங்கத்திற்கு தகவல் வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்த பேச்சுவார்த்தைகளில் யார் யார் பங்குபற்றினார்கள் என்பது தொடர்பில் சொல்ஹெய்ம் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
எவ்வாறெனினும், புலிகளின் சரணடையும் கோரிக்கை காலம் கடந்த கோரிக்கை என்பதனை அவர்களுக்கு அறிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை ஊடகங்கள் தமக்கு எதிராக கடுயைமான விமர்சனங்களை வெளியிட்டு வருவதாக சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். மீண்டும் யுத்தத்தை முன்னெடுப்பதற்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்காது என புலம்பெயர் தமிழர்களுக்கு அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்திற்கான அவசியமில்லை என்பதனை புலம்பெயர் தமிழர்கள் விளங்கிக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், தமிழர் உரிமைகளுக்கு சர்வதேச ரீதியில் பரந்த ஆதரவு காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் ரீதியான உரிமைகளை வென்றெடுப்பதற்கு நோர்வே ஆதரவளிக்கின்ற போதிலும் யுத்த ரீதியான முனைப்புக்களுக்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நோர்வே அரசாங்கம் மட்டுமன்றி உலகின் பெரும்பான்யைமான அரசாங்கங்களின் நிலைப்பாடும் இதுவே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக