திங்கள், 28 ஜூன், 2010

ராவணன் திருட்டு விசிடி, தூக்கப்படும் நிலையில் சுஹாஸினி புகார்

ராவணன் படம் திரையரங்குகளை விட்டு தூக்கப்படும் நிலையில், அந்தப் படத்தின் திருட்டு விசிடி வெளியாகிவிட்டதாக மணிரத்னம் மனைவி சுஹாஸினி போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் தெலுங்கு [^] மற்றும் இந்தி மொழிகளில் கடந்த வாரம் வெளியானது ராவணன் திரைப்படம்.

படம் வெளியான அன்று இரவே படத்தின் முழு வீடியோவும் இணையதளங்களில் வெளியாகிவிட்டது. இந்த ஒரு வாரத்துக்குள் 6 வெவ்வேறு பிரிண்டுகள் பர்மா பஜார் உள்ளிட்ட இடங்களில் விற்பனைக்கு வந்துவிட்டன.

திரையரங்குகளிலும் இந்தப் படத்துக்கு கூட்டம் குறைந்துவிட்டது. சிறுநகரங்களில் ஏற்கெனவே படம் தூக்கப்பட்டுவிட்டது. இதன் இந்திப் பதிப்பு ராவண், மிக மோசமான தோல்வியைத் தழுவியுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் திருட்டு வி.சி.டி.க்கள் விற்பனை செய்யப்படுவதாக மணிரத்னத்தின் மனைவியும் படத்துக்கு வசனம் எழுதியவருமான நடிகை சுஹாசினி புகார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனைச் சந்தித்து அவர் மனு கொடுத்தார்.

பின்னர் நிருபர்களிடம் சுஹாஸினி கூறுகையில், "ராவணன் திரைப்படம் இந்தியில் ராவண் என்ற பெயரிலும், தெலுங்கில் வில்லன் என்ற பெயரிலும் வெளிவந்துள்ளது.

இப்படத்தின் திருட்டு வி.சி.டி.க்கள் சென்னையில் விற்கப்படுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து இன்று முறையிட்டோம்.

நாங்கள் சொன்னதை கவனமுடன் கேட்ட போலீஸ் கமிஷனர் உடனடியாக வீடியோ தடுப்பு பிரிவு போலீசாரை போனில் அழைத்து அதிரடி சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளார். மாநில அளவில் செயல்படும் திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீசிடமும் போனில் பேசினார்.

இன்று மட்டும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி ராவணன் திருட்டு சி.டி.யை யார் விற்றாலும் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

எனவே ராவணன் திருட்டு சி.டி.யை யார் வைத்திருந்தாலும் உடனடியாக தூக்கி போட்டு விடுங்கள். யாரிடமாவது திருட்டு சி.டி. இருந்தால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவியுங்கள்.

புதுவை முதல்வர் [^] வைத்திலிங்கமும் எங்களை தொடர்பு கொண்டு பேசினார். புதுவையில் இருந்து ராவணன் சி.டி.க்கள் சப்ளை செய்யப்படுவதாக அவரிடம் புகார் தெரிவித்தோம். உரிய நடவடிக்கை [^] எடுப்பதாக அவரும் உறுதி அளித்துள்ளார்.

கனடாவில் இருந்து கேமராவில் எடுக்கப்பட்டு ராவணன் திருட்டு சி.டி. யாக தற்போது வெளி வந்துள்ளதை கண்டு பிடித்துள்ளோம். வெளிநாடுகளில் புதுப் படங்களின் திருட்டு சி.டி.க்கள் தயாரிக்கப்பட்டு புதுவையில் இருந்து சப்ளை செய்யப்படுகிறது.

வெளிநாட்டில் இருப்பவர்கள் தங்கள் வீடுகளில் போட்டுப் பார்ப்பதற்காகத்தான் ஹோம் வீடியோ என்ற பெயரில் வெளிநாட்டு உரிமத்தை வழங்குகிறோம். ஆனால் சிலர் அதனை திருட்டு சி.டி.க்களாக தயாரித்து வெளியிட்டு விடுகிறார்கள்.

எனவே தயாரிப்பாளர்கள் புதிய படங்களின் வெளிநாட்டு உரிமம் வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

ராவணன் வெற்றிப் படமா தோல்விப் படமா என்பதை இப்போது கூறமுடியாது" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக