வெள்ளி, 11 ஜூன், 2010
போபால் விஷவாயு கசிவு சம்பவத்துக்கு அமெரிக்காவின் மனப்பான்மையே காரணம்
போபால், ஜூன் 9: மோசமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்ற காரணத்தால் யூனியன் கார்பைடு தொழிற்சாலையை இந்தியாவில் அமெரிக்கா அமைத்தது என்று விஷவாயு கசிவு வழக்கில் தீர்ப்பை வழங்கிய நீதிபதி மோகன் பி. திவாரி தெரிவித்துள்ளார். போபாலில் நடந்த யூனியன் கார்பைடு நிறுவன விஷவாயு கசிவால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்தனர். இந்த சம்பவம் நடந்து 26 வருடங்களுக்குப் பின்னர் தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 7 பேருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது. ÷வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட சில மணி நேரங்களில் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேர், ஜாமீன் பெற்றுவிட்டனர். வழக்கை விசாரித்த தலைமைக் குற்றவியல் மாஜிஸ்திரேட் மோகன் பி. திவாரி தற்போது கூடுதல் மாவட்ட நீதிபதியாக பணி உயர்வு பெற்றுள்ளார். இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு நகல் செய்தி நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது. தீர்ப்பில் மோகன் பி. திவாரி கூறியுள்ளதாவது: அமெரிக்காவில் பாதுகாப்புக் கட்டுப்பாட்டு விஷயங்கள் கடுமையாக கடைப்பிடிக்கப்படுகின்றன. எனவே விஷவாயு போன்ற ரசாயன தொழிற்சாலைகளை அமைப்பதை அந்த நாடு இந்தியா போன்ற 3-ம் உலக நாடுகள் பக்கம் தள்ளிவிட்டு விடுகின்றன. அதே நேரத்தில் பாதுகாப்பு விஷயங்களில் போதுமான விழிப்புணர்வு இல்லாத காலத்தில் யூனியன் கார்பைடு நிறுவனம் இந்தியாவில் அமைக்கப்பட்டது. போபால் விஷவாயு கசிவு சம்பவத்துக்கு அமெரிக்காவின் மனப்பான்மையே காரணம். மோசமான பாதிப்புகள் ஏற்படும் என்ற காரணத்தால் இதுபோன்ற தொழிற்சாலையை இந்தியாவில் அமைக்க முடிவு செய்தது அமெரிக்கா. யூனியன் கார்பைடு நிறுவனத்தில் பாதுகாப்பு விஷயங்கள் மிகவும் குறைவாக இருந்தன. இதுகுறித்து அமெரிக்க நிறுவனமோ அல்லது உள்ளூர் நிர்வாகமோ பொருட்படுத்தவில்லை. விஷவாயு கசிவானால் அதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை திட்டம் ஏதும் அந்த நிறுவனத்திடம் இல்லை. விஷவாயு கசிந்தபோது உள்ளூர் நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தால் ஏராளமான மக்களின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும் என்றார் அவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக