திங்கள், 7 ஜூன், 2010

முறிகண்டி நட்டயீடும் பதில் காணிகளும் வழங்கப்படும் ,முல்லைத்தீவு அரசாங்க அதிபர்

சிக்கலில் முறிகண்டி மீள்குடியேற்றம்
பி.பி.சி
முல்லைத்தீவு மாவட்டம் முறிகண்டி பகுதியில் ஏ9 வீதிக்கு கிழக்கே மீள்குடியேற்றம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் பிரதேசத்தில் உள்ள திருமுறிகண்டி, செல்வபுரம், இந்துபுரம் போன்ற கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தம்மை தமது சொந்தக் கிராமங்களில் விரைவாக மீள்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
முறிகண்டி பிரதேசத்தின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் கடந்த டிசம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டன. ஆயினும் ஏ9 வீதியின் கிழக்குப் பிரதேசத்தில் உள்ள குடும்பங்கள் இன்னும் முற்றாக மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை.

அதிகாரிகள் தம்மை அலைக்கழிப்பதாகவும், தமது காணிகள் வேறு தேவைகளுக்காக எடுக்கப்படப் போகின்றதோ என்ற அச்சம் தமக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.

இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்ட முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமார், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் சிவில் நிர்வாகத்துடன் இணைந்துள்ள இராணுவ பொலிஸ் சேதவைகளுக்கென அரச காணிகளுக்கே அவர்கள் விண்ணப்பம் செய்திருப்பதாகவும் பொதுமக்களின் காணிகள் அவற்றிற்குப் பயன்படுத்தப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்கள் பொதுமக்களின் காணிகளை எடுக்க நேரிட்டால், சம்பந்தப்பட்ட பொதுமக்களுக்கு நட்டயீடும் பதில் காணிகளும் வழங்கப்படும் என்றும், எவரும் காணியில்லாமல் பாதிப்படைய இடமளிக்கப்படாமாட்டாது என்றும் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

முறிகண்டி பகுதி மக்களின் கோரிக்கை குறித்து ஜனாதிபதியின் நேரடி கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும் என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக