செவ்வாய், 22 ஜூன், 2010

பாமகவும், விடுதலை சிறுத்தையும் இணைந்து பாடுபடும்: ராமதாஸ் பேச்சு


 

நானும், திருமாவளவனும் இணைந்து எத்தனையோ போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்.  இனியும் இணைந்து நடத்துவோம் என்று பேசினார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
வேலூரில் திருமண மண்டப திறப்பு விழாவில் கலந்துகொண்டு அவர் இவ்வாறு பேசினார்.

அவர் மேலும்,  ’’பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரை ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பாடுபடுவதுதான் நோக்கமாகும்.
வட ஆற்காடு மாவட்டத்தில் வன்னியர்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் ஒடுக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டு அடிமைகளாக உள்ளனர்.
 
ஒடுக்கப்பட்ட சமுதாயங்களாக உள்ள தலித் மக்களையும் வன்னிய மக்களையும் இந்த அளவுக்கு ஒடுக்கி வைத்தது யார்? என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

எனது தம்பி திருமாவளவனின் சகோதரர்களும் இங்கு வந்திருக்கின்றனர். உழைக்கும் கரங்கள் அனைவரும் ஒன்று கூடி இருக்கிறோம்.


ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக நானும், திருமாவளவனும் இணைந்து ஏராளமான போராட்டங்களை நடத்தி இருக்கிறோம். வன்னியர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் உழைத்தால்தான் மற்ற சமுதாய மக்களுக்கு நன்மை கிடைக்கும். ஆனால் ஒடுக்கப்பட்ட இந்த இரு சமுதாய மக்களுக்கு இதுவரை எந்த நன்மையும் கிடைக்கவில்லை.

ஆதிக்க சக்திகள் தொடர்ந்து நம்மீது ஆதிக்கம் செலுத்த வேண்டுமா? நம்மை இழிவுப்படுத்துவதை தொடர்ந்து தாங்க வேண்டுமா? ஒடுக்கப்பட்ட மக்கள் நலனுக்காக பா.ம.க.வும்- விடுதலை சிறுத்தையும் இணைந்து பாடுபடும்’’என்று பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக