செவ்வாய், 29 ஜூன், 2010

கற்பனை அல்ல, புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள மன்னர்களின் பெயர்கள்

சங்க காலம் என்பது எப்போது? :டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி


கடந்த 1894 ஆம் ஆண்டில், தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் அவர்கள், சங்க இலக்கியமான  புறநானூற்றைப் பதிப்பித்தார். அந்த நூலில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களைப்பற்றிய செய்திகள் இருந்தன. பல மன்னர்களின் பெயர்களும் இருப்பதை வரலாற்று ஆசிரியர்கள் அறிந்தனர். ஆனால் அத்தகவல்களை உறுதிப்படுத்த வேறு சான்றுகள் கிடைக்காததால் அகில இந்திய அளவில் வரலாற்று ஆசிரியர்கள் அதிகமாக கண்டுகொள்ளவில்லை.

இந்நூல் வெளியாகி சுமார் நூறு ஆண்டுகளில் சதுர வடிவிலான செப்பு நாணயத்தின் மூலம் ஒரு முடிவு ஏற்பட்டது. 1984 ஆம் ஆண்டு நான் ஆய்விற்காக சில செப்புக்காசுகளை ஒரு மதுரை வணிகரிடம் வாங்கினேன். வாங்கிய காசு ஒன்றில் தமிழ் - பிராமி  எழுத்துமுறையில் "பெருவழுதி' என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. காசின் முன்புறம் நின்ற நிலையில் குதிரை ஒன்று இருந்தது. இக்காசைச் சங்ககால மன்னர் வெளியிட்டார் என்றும், சங்க இலக்கியத்தில் கூறப்பட்ட பெயர் காசிலும் இருக்கிறது என்பதும் உறுதியானது. இக்காசின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்று வரலாற்று ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தினர். இக்காசின் பின்புறம் கோட்டு வடிவுடைய மீன் சின்னமும் இருந்தது. ஆக பின்புறம், கோட்டு வடிவம் உள்ள காசுகள் அனைத்தும் சங்க காலப் பாண்டியர்கள் வெளியிட்டனர் என்பது உறுதியானது.

சென்ற நூற்றாண்டில் மதுரை மாவட்டம் போடி நாயக்கனூர் பகுதியில் வெள்ளிக்காசுகள் அடங்கிய புதையலை அரசு கைப்பற்றியது. அந்த புதையலில் இருந்த காசுகள் அனைத்தும் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் நாடு முழுவதும் வழக்கில் இருந்த வெள்ளி முத்திரைக் காசுகளைப் போல் இருந்தன. வரலாற்று அறிஞர் டாக்டர் கேஸாம்பி அவர்கள் இக்காசுகள் அனைத்தும் மவுரிய பேரரசின் இறுதிக்காலத்தில் அவர்கள் வழிவந்தவர்கள் வெளியிட்டிருக்கலாம் என்று எழுதினார். ஆனால் அக்காசுகளின் பின்புறத்தில் கோட்டு வடிவுள்ள மீன் சின்னம் மட்டும்தான் உள்ளது என்பதன் காரணமாக அக்காசுகளை சங்ககால பாண்டியர்கள்தான் வெளியிட்டிருக்க வேண்டும் என்று எழுதினேன். அக்கருத்தை இதுவரை யாரும் மறுக்கவில்லை.

இந்த ஆராய்ச்சி மூலம், சங்க கால இலக்கியங்கள் கி.மு. மூன்று அல்லது இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பதும், புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள மன்னர்களின் பெயர்கள், கற்பனையானவை அல்ல என்பதும் தெளிவாகிறது.

சங்க கால சேரர் காசுகள் :பாண்டியர்களைப் போல், சங்க கால சேர மன்னர்களும், காசுகள் வெளிட்டுள்ளனர் என்பது கரூர், அமராவதி ஆற்றங்கரையில் கிடைத்த காசுகள் மூலம் தெரியவந்துள்ளது. சங்க கால சேர மன்னர்களின் தலைநகரமாக கரூர் விளங்கியது. கிரேக்க, ரோமானிய மன்னர்களுடன் சேர மன்னர்கள் வர்த்தகத் தொடர்பு வைத்திருந்தனர். தென்னிந்தியாவில் மேற்கு கடற்கரையோரத்தில் அமைந்துள்ள முசிறி துறைமுகம் வழியே, வெளிநாட்டுப் பொருட்களின் ஏற்றுமதி, இறங்குமதி வர்த்தகம் நடைபெற்று வந்துள்ளது.சேர மன்னர்கள் வெளியிட்டுள்ள காசுகளில் ரோமானிய தாக்கம் உள்ள. செப்பு காசுகளை தற்போது பார்ப்போம்.

கொல்லிப்புறை காசு:கொல்லிப்புறை காசில் முன்புறம், ஒரு வீரர், அலங்கரிக்கப்பட்ட தோரண வாயிலில் நிற்கிறார். வலது கையில் கத்தி, நிலத்தில் குத்தியபடி உள்ளது. இடது கையை இடுப்பில் வைத்துள்ளார். அந்தக் கையில், தரையை தொட்டுக் கொண்டிருக்கும் ஒரு கேடயமும் உள்ளது. தொப்பி அணிந்துள்ளார். அவருடைய ஆடை, ரோமானிய உடையை ஒத்துள்ளது. இத்தோரணவாயிலைச் சுற்றி கொல்லிப்புறை என்ற பெயர் தமிழ் -  பிராமி எழுத்தில் பொறிக்கப் பட்டுள்ளது. காசின் பின்புறம், வில், அம்பு மற்றும் பிற சின்னங்கள் உள்ளன.

கொல்லிரும்புறை காசு:முந்தையக் காசுகள்  போலவே, கொல்லிரும்புறை காசின் முன்புறம், அலங்கரிக்கப்பட்ட தோரண வாயிலின் முன், ஒரு வீரர் நின்று கொண்டிருக்கிறார். அவர் வலது கையில் ஒரு கத்தி; இடது கையை இடுப்பில் வைத்துள்ளார். ஒரு தொப்பி அணிந்துள்ளார். இவருடைய ஆடை, ரோமானிய உடையை ஒத்துள்ளது.இந்த சின்னத்தைச் சுற்றி தமிழ் - பிராமியில், "கொல்லிரும்புறை' என்ற பெயர், இடது புறத்திலிருந்து வலது புறத்தை நோக்கி, வளைந்து எழுதப்பட்டுள்ளது. காசின் பின்புறம், ஒரு வில்லும், அம்பும், மற்ற சின்னங்களுடன் காணப்படுகிறது.இந்த இரு காசுகளின் முன்புறமும் நின்றிருக்கும் வீரர் சின்னங்கள், மன்னர் அகஸ்டஸ் மற்றும் அவருக்குப் பிந்தைய மன்னர்கள் வெளியிட்ட காசுகளில் காணப்படும் சின்னங்களை ஒத்துள்ளன.கி.மு. 27 முதல் கி.பி. 128 வரை ஆண்ட ரோமானிய பேரரசர்கள் அகஸ்டஸ், டைபீரியஸ், நீரோ மற்றும் ஹத்ரியன் ஆகியவர்கள் வெளியிட்ட காசுகளின் பின்புறம், இரண்டு அல்லது நான்கு தூண்கள் கொண்ட தோரண வாயிலில் ஓர் உருவம் நிற்பது போன்ற சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த காசுகள் பெரும்பாலானவற்றில், அந்த உருவம் பேரரசரின் உருவமாக கருதப்படுகிறது.

இந்த காசுகளில் உள்ள சின்னங்களைப் போலவே, கொல்லிப்புறை மற்றும் கொல்லிரும்புறை ஆகிய சேர மன்னர்கள், தாங்கள் வெளியிட்ட காசுகளில் உருவங்கைள பதித்திருக்கின்றனர். இரண்டு தூண்கள் சின்னம் கொண்ட காசுகளை அகஸ்டஸ் பேரரசர் வெளியிட்டுள்ளார். சேர மன்னர்கள் வெளியிட்ட காசுகளிலும், இரண்டு தூண்கள்தான் உள்ளன. எனவே, இந்த இரு மன்னர்கள் வெளியிட்ட காசுகள் கி.பி. முதலாம் நூற்றாண்டை சேர்ந்தவை என நான் கருதுகிறேன்.

மாக்கோதை மற்றும் குட்டுவன் கோதை காசுகள்:சங்க கால சேரர்கள், வெள்ளி காசுகளும் வெளியிட்டுள்ளனர். தமிழ் - பிராமி எழுத்தில், மாக்கோதை என்று எழுதப்பட்ட காசு ஒன்றை நான் கண்டுபிடித்துள்ளேன். தலையில், ரோமானிய தலைக்கவசத்தை மன்னர் அணிந்து இருக்கலாம் என கருதுகிறேன். காசின் பின்புறம், எந்த சின்னமும் பொறிக்கப்படாமல், வெற்றாக உள்ளது.என்னிடம் உள்ள மாக்கோதை காசுகளில் ஒன்று, வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தேன். இந்தக்காசு, அது வெளிவந்த காலம் மற்றும் உலோகம் குறித்து சில தகவல்களை தந்தது. அந்தக் காசின் முன்புறம், மன்னர் கழுத்தின் கீழ் நான்கு சிறிய ஆங்கில எழுத்துக்கள் இருந்தன. ரோமானி காசுகளில் காணப்படும் எழுத்துக்களின் சிதைந்த வடிவமாக அவை தோன்றின. காசின் பின்புறம், இரண்டு உருவங்கள் நிற்பது போன்ற வரைவுகள் காணப்பட்டன.

கவனமாக ஆராய்ந்தபோது, அவை ஏற்கனவே, அகஸ்டஸ் வெளியிட்ட வெள்ளி காசை உருக்கி, அக்காசின் மேல் மறு அச்சு பதிந்து மாக்கோதையின் காசை உருவாக்கினர் என்பதை உணர்ந்தேன். பேரரசர் அகஸ்டஸ் வெளியிட்ட வெள்ளிக் காசின் முன்புறத்தில் அகஸ்டஸின் உருவமும், பின்புறம், அவருடைய பேரன்கள் கையஸ் மற்றும் லூசியஸ் ஆகியோர் நிற்பது போலவும் பொறிக்கப்பட்ட வெள்ளி காசை பயன்படுத்தியதால் மாக்கோதை காசுகள் உருவாகின என்பதை உணர்ந்தேன். இதுகுறித்து 1998ல், தென்னிந்திய நாணயங்கள் குறித்த ஆண்டுவிழா மலரில் கட்டுரை வெளிவந்துள்ளது.

அகஸ்டஸ் வெள்ளிக் காசில் சூடு ஏற்றி, காசின் விளிம்புப் பகுதிகளை வெட்டி விட்டு சூடேற்றிய காசை பிடிப்புள்ள அச்சின் மேற்பகுதியில் வைத்து, அக்காசின்மேல் மாக்கோதை காசின் அச்சைப் பொருத்தி பலமாக அடிக்கும்போது அந்த மாக்கோதை அச்சின் சின்னம் அகஸ்டஸ் வெள்ளிக் காசில் பதிவாகிறது. பொதுவாக, அதிக சூட்டில் ஒரு காசை மறு அச்சு செய்யும்போது, முந்தைய சின்னங்கள் முற்றிலும் அழிந்து, புதிய சின்னமே ஏறும். காசை போதுமான அளவு சூடேற்றாமல் அச்சிட்டால், பழைய சின்னங்கள் சில, அப்படியே தங்கிவிடும்.  மேற்கண்ட காசு, சரியாக சூடேற்றப்படாத காசாக, புது சின்னங்களுடன், பழைய சின்னங்களும் சேர்ந்து காணப்படுகிறது. அகஸ்டஸ் காசின் மீது மறு அச்சிற்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு அச்சுகளில் ஒன்று மாக்கோதை தலையுடைய அச்சு முன்புறமும், மற்றொன்று வெற்றாக பின்புறமும் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ரோமானிய மன்னர்கள் வெளியிட்ட காசுகளுக்கு அதிக கிராக்கி இருந்தது. அதுவும், அகஸ்டஸ் மற்றும் டைபீரியஸ் காசுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதன் மூலம், கி.மு. 2ம் ஆண்டு முதல் கி.பி. 4ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், சேர மன்னர் மாக்கோதை நாணயம் வெளியிட்டுள்ளார் என்று தெரிகிறது. அதேபோல், குட்டுவன் கோதையும் காசு வெளியிட்டுள்ளார். இதிலும் ரோமானிய தாக்கம் தெரிகிறது. இந்த காசு கி.பி.100 முதல் 200 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வெளியிட்டிருக்கலாம் என்று தெரிய வருகிறது. இவை தவிர, அதியமானின் மோதிரம் ஒன்றை, கரூரிலிருந்து நான் வாங்கினேன். அந்த மோதிரத்தில், தமிழ் பிராமியில் ஐந்து எழுத்துக்கள் உள்ளன. மோதிரத்தில் இருக்கும் அந்த பெயரை அதியமான் என்று காலம் சென்ற தொல் எழுத்தறிஞர் கே.ஜி.கிருஷ்ணன் அவர்கள் படித்துரைத்திருக்கிறார். இந்த மோதிரம் கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்ததாகத் தெரிகிறது. மேலே குறிப்பிட்ட காசுகள் மற்றும் மோதிரத்தின் வாயிலாக, சங்க கால இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மன்னர்கள் கற்பனைப் பாத்திரங்கள் அல்ல என்பது தெளிவாகிறது.

ரோமானிய காசுகளின் காலம் தெளிவாக தெரிந்ததால், அதை ஒத்துள்ள சேர காசுகளும் அக்காலத்தைச் சார்ந்தவையே என்பதும் தெளிவாகிறது.சங்க கால சேர நாணயங்களில் உள்ள சில இலச்சினைகளை வைத்தும் ரோமானிய பேரரசர் ஆகஸ்டஸ் வெளியிட்ட சில நாணயங்களின் பின்புறம் காணப்படும் சில இலச்சினைகளை ஒப்பிட்டும் சங்க காலத்தை கணித்தும், தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி, கோவையில் நடந்த உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் 26.6.2010 அன்று படித்த கட்டுரையின் தமிழாக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக