திங்கள், 28 ஜூன், 2010

டக்ளஸ், வேலுப்பிள்ளை பிரபாகரன் தான் முழுக்காரணம் என கூறிவிட முடியாது

தமிழ் மக்களின் அழிவுகளுக்கு புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தான் முழுக்காரணம் என கூறிவிட முடியாது. அதனை அனைத்து தமிழ்க்கட்சிகளும் பொறுப்பேற்க வேண்டும் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

தமிழ்க்கட்சிகள் மத்தியில் தமிழ் மக்களின் ஒற்றுமை தொடர்பில் காலம் காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால் அது சாத்தியபடாமல் போய்விட்டது. அதுவே இன்று தமிழ் மக்கள் பாரிய அழிவை சந்தித்தமைக்கு காரணமாகியும் உள்ளது. இதனாலேயே தமிழ் கட்சிகளின் ஒற்றுமை குறித்து வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.
பி.பி.சி. தமிழோசைக்கு வழங்கிய செவ்வியிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ் மக்களின் அரசியல் உரிமை பிரச்சினைகள் நாளாந்த உரிமை பிரச்சினைகள் குறித்து ஒரு முடிவினை எட்டுவதற்காக நாம் ஒன்று கூடினோம். குறிப்பாக தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை ஒரு பொதுவான நிலைப்பாட்டிலிருந்து கொண்டு அதை விரைவாக பெறுவதற்கான முன் முயற்சியின் ஒரு ஏற்பாடே இவ் அனைத்துக்கட்சி சந்திப்பு.
தமிழ்மக்கள் தற்போது மீள்குடியேற்றம் இடப்பெயர்வு உட்பட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர் கொள்கின்றனர். அது தொடர்பிலும் நாம் அனைவரும் ஒன்று கூடி ஆராய்ந்தோம். நடைபெற்ற கூட்டத்தில் எமது கட்சிகளின் நலனைக்கருதிக்கொண்டு செயற்படவில்லை. தமிழ் மக்களின் நலன்களின் அடிப்படையிலேயே செயற்படுகின்றோம். நாம் இக் கூட்டத்தின் போது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளுக்கும் அழைப்பு விடுப்பதாக முடிவு செய்யப்பட்டது. த.ம.வி.பு. கட்சியின் தலைவர் சந்திரகாந்தன் த.தே.கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஆகியோருடன் பேசியுள்ளேன்.
சந்திரகாந்தன் அவர்களுடன் பேசிய போது அவர் எதிர்வரும் கூட்டத்தில் தான் கலந்து கொள்வதாகவும் தெரிவித்தார். சம்பந்தன் அவர்கள் சாதகமாகவே பேசினார். இது தொடர்பில் கட்சி உறுப்பினர்களுடன் பேசி முடிவெடுப்பதாகவும் தெரிவித்தார். இவர்கள் எதிர்வரும் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று நம்புகின்றேன். கடந்த காலங்களில் ஏற்பட்ட மக்களின் அழிவுகளுக்கு வேலுப்பிள்ளை பிரபாகரன் தான் முழுக் காரணம் என்று கூறிவிடமுடியாது.
அனைத்துத் தமிழ் கட்சிகளும் பொறுப் பேற்க வேண்டும். இதனை அனைவரும் உணர்ந்துள்ளார்கள் என்று நம்புகிறேன். நடைபெற்ற சந்திப்பும் நடைபெறப்போகிற சந்திப்புக்களும் நன்மையளிக்கக் கூடியதாக அமையும் என்று கருதுகிறேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தெரிவித்துள்ளார்.
இதே கருத்தினையே புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாழ் வீரசிங்க மண்டபத்தில் இடம்பெற்ற மனித உரிமைகள் தொடர்பான கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு தெரிவித்திருந்ததுடன். இந்த அழிவுகளுக்கு அனைத்து தமிழ்கட்சிகளும் பொறுப்பு என்றும், விகிதாசாரத்தில் சிலவேனை கூடிகுறையலாமே தவிர அனைத்து கட்சிகளுமே தவறுவிட்டுள்ளன. அந்த வகையில் நான் சார்ந்திருக்கும் எமது அமைப்புசார்பாக விடப்பட்ட தவறுகளுக்கு மன்னிப்பு கோருகின்றேன் என்றும் அன்றே தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக