திங்கள், 14 ஜூன், 2010

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி:  வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்கும் சட்டத்திருத்த மசோதா மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் பெற்றது.

இம் மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் வைக்கப்பட்டு அதன் ஒப்புதல் பெற்ற பின்னர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டு சட்டமாகும்.

இந்த சட்ட மசோதா மூலம் வாக்குரிமை கோரி வரும் லட்சக்கணக்கான வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்குரிமை பெறுவார்கள். கடந்த நான்கு ஆண்டுகளாக இது தொடர்பாக வெளிநாடு வாழ் இந்தியர்களிடமிருந்து வெளியுறவு அமைச்சகத்திற்கு கோரிக்கை மேல் கோரிக்கையாக வந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டது.

இதுகுறித்து மத்திய வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி கூறுகையில்,

இந்தியாவில் வாக்களிக்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக பிரதமர் கூறியிருந்தார். அவ்வாறே அவர்களுக்கு வாக்குரிமை அளிக்க மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் இந்திய ஜனநாயகம் மென்மேலும் வலுவடையும் என்றார்.

தற்போதுள்ள சட்டப்படி ஒருவர் வெளிநாட்டிற்கு சென்று 6 மாதங்களுக்கு மேல் தங்கி விட்டால் வாக்காளர் பட்டியலில் இருந்து அவர் பெயர் நீக்கப்படும்.

ஆனால் புதிய சட்டப்படி, இந்தியாவிலிருந்து இடம் பெயர்ந்து வெளிநாடுகளில் குடியேறி வசித்தாலும், அவர்கள் வாக்களிக்கலாம். தாங்கள் சார்ந்த தொகுதிகளுக்கு நேரில் வந்து அவர்கள் வாக்களிக்க அனுமதி கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக