செவ்வாய், 29 ஜூன், 2010

நெல்லை புத்தர் கோயில் இடிப்பு விவகாரம்:பின்னணி நபர்கள் மீது நடவடிக்கை தேவை: வை. பாலசுந்தரம்

திருநெல்வேலி:நெல்லையில் புத்தர் கோயில் இடிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய அம்பேத்கர் மக்கள் கட்சித்தலைவர் வை. பாலசுந்தரம் பேசினார்.நெல்லை அருகே என்.ஜி.ஓ., காலனி திருமால் நகர் பகுதியில் "புத்தவிகார்' வழிபாட்டுத்தலம் கட்டப்பட்டிருந்தது. அரசு இடத்தில் கட்டப்பட்டதாக கூறி கடந்த மே 21ம்தேதி புத்தர் கோயிலை அதிகாரிகள் இடித்து அகற்றினர். புத்தர் சிலை நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.இடிக்கப்பட்ட புத்தர் கோயிலை மீண்டும் கட்டித்தர வலியுறுத்தி நெல்லையில் புத்தர் கோயில் மீட்புக்குழுவினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நெல்லை ரயில்வே ஸ்டேஷன் முன்பு நேற்று புத்தர் கோயில் மீட்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

குழுத்தலைவர் செல்லையா தலைமை வகித்தார். மும்மணி கல்வி அறக்கட்டளை மானேஜிங் டிரஸ்டி சம்பத் வெல்கம், அகில இந்திய தம்மசேனா தலைவர் ராமகிருஷ்ணா, தம்மசேனா மாநில பொதுச்செயலாளர் தங்கவயல் வாணிதாசன்
அகில இந்திய அம்பேத்கர் கட்சி பொதுச்செயலாளர் சொல்லழகன், செய்தித்தொடர்பாளர் பத்மநாபன், பேராசிரியர் முத்தையா, அம்பேத்கர் ஆதிதிராவிடர் நலச்சங்க செயலாளர் சுப்புரத்தினம், பன்னாட்டு பவுத்த இளைஞர் இயக்கத்தலைவர் கவி.சுப்பையா, ஏ.ஐ.ஆர்., எஸ்.சி.எஸ்.டி., ஊழியர் சங்கச்செயலாளர் கவிப்பாண்டியன், எஸ்.சி.எஸ்.டி., அலுவலர் நலச்சங்க செயலாளர் சாமுவேல், மாநகர் மாவட்டத்தலைவர் கனகராஜ், மாநகரச்செயலாளர் சசி, வக்கீல்கள் செல்வராஜ், ராஜகோபால் உட்பட பலர் பேசினர்.அகில இந்திய அம்பேத்கர் மக்கள் கட்சித்தலைவர் வை. பாலசுந்தரம் பேசும்போது, ""அமைச்சர் திறந்துவைத்த புத்தர் கோயிலை இடிப்பதற்கு முன் சம்பந்தப்பட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம். இதற்கு பின்னணியில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.புத்தர் கோயில் இடத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் அடுத்தக்கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் தர்ணா நடக்கும்'' என்றார்.

ஷாமியானா இல்லையா..."டென்ஷன்' ஆன வை.பா.,:ஆர்ப்பாட்டம் நடந்த இடத்திற்கு வந்த வை. பாலசுந்தரம் அங்கு ஷாமியானா பந்தல் போடப்படாதது குறித்து நிர்வாகிகளிடம் கேட்டார். ""ஷாமியானா அமைக்க போலீசார் அனுமதி அளிக்கவில்லை, கட்சிக்கொடிகள் கட்ட அனுமதிக்கவில்லை'' என நிர்வாகிகள் கூறினர்.உடனே வை. பாலசுந்தரம் ஆவேசத்துடன், ""வெயிலில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று என் உடல்நிலை பாதிக்கப்பட்டால் நீங்கள் தான் பொறுப்பு...

இதுகுறித்து ஐ.ஜி.,யிடம் பேசினேன்''... என கூறி போலீஸ் உதவி கமிஷனர் ராமமூர்த்தி, இன்ஸ்பெக்டர் ராஜ்பாலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.""வழக்கமாக ரயில்வே ஸ்டேஷனில் ஆர்ப்பாட்டம் நடக்கும் போது ஷாமியானா பந்தல் அமைக்க அனுமதிப்பதில்லை... கொடிகள் வைத்துக்கொள்ளலாம்'' என உதவி கமிஷனர் ராமமூர்த்தி பதில் கூறினார். பின்னர் நிர்வாகி ஒருவர் விரித்த குடையின் கீழ் நின்றபடி பேசிய வை. பாலசுந்தரம், ""இதே இடத்தில் வேறு யாராவது ஷாமியானா பந்தலின் கீழ் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தால்... இப்பிரச்னையை சும்மா விடமாட்டேன்'' என ஆவேசப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக