புதன், 2 ஜூன், 2010

பஷில் ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்று விஜயம்

முல்லைத்தீவு  மாவட்டத்திற்கு   இன்று விஜயம்   செய்கின்ற    பொருளாதார   அபிவிருத்தி   அமைச்சரும்,    ஜனாதிபதியின் முக்கிய ஆலோசகருமாகிய பஷில் ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் மாவட்டத்தின் மீள்கட்டுமான,   மீள்குடியேற்றம்  மற்றும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் ஆராயவுள்ளனர்இதற்கான கூட்டம் முல்லைத்தீவு கச்சேரியில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்திலும் கள விஜயங்களிலும் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னிமாவட்ட   பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.
அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுடன் உலகவங்கி அதிகாரிகள் கொண்ட குழுவொன்றும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்று விஜயம் செய்யவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு முதலில் செல்லும் அமைச்சர் மற்றும் உலகவங்கி அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஒட்டுசுட்டான் மற்றும் வித்தியாபுரம் ஆகிய இடங்களில் மீளக்குடியமர்ந்துள்ள மக்களுக்கு என்ரிப் எனப்படும் வடபிரதேச அவசர மீளெழுச்சித்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற சம்பளத்திற்குப் பொது இடங்களைச் சுத்தம் செய்யும் வேலைகளைப் பார்வையிடுவார்கள்.
அதன் பின்னர்,   ஒட்டுசுட்டான்   பிரதேச செயலகத்தில்    பிரதேசசெயலாளர் உள்ளிட்ட பிரதேச செயலக மட்ட அதிகாரிகள்,     கிராமியமட்ட    மக்கள் பிரதிநிதிகள் ஆகியோருடனான சந்திப்பும் கலந்துரையாடலும் நடைபெறும்.     இதில் அந்தப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்றப் பணிகள் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகக் கலந்துரையாடி முடிவுகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தச் சந்திப்பின் பின்னர் அமைச்சர் தலைமையிலான குழுவினர் முல்லைத்தீவு கச்சேரிக்கு    விஜயம் செய்து அந்த மாவட்டத்தின்   திணைக்களத் தலைவர்கள் அடங்கிய உயர்மட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள்   உள்ளிட்ட    விடயங் கள் தொடர்பாக கலந்துரையாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்புக்களிலும் கூட்டங்களிலும் வன்னி மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வார்களா என்பது பற்றிய தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக