வெள்ளி, 4 ஜூன், 2010

திடீர் தேர்தலுக்கு தயாராகுங்கள்: அதிமுகவினருக்கு ஜெயலலிதா கோரிக்கை

தமிழக சட்டசபைக்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார்.

இன்று அக் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்த ஜெயலலிதா, அங்கு நடந்த இளம் பெண்கள் மற்றும் இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

பாசறையின் மாநிலச் செயலாளரான சசிகலாவின் உறவினர் டாக்டர் வெங்கடேஷ் தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா,

அதிமுக இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை அமைத்த பிறகு ஒவ்வொரு மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தின் மூலம் சில ஆலோசனைகளையும், வழிமுறைகளையும் எடுத்துச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

ஒவ்வொரு ஒன்றியத்திலும், நகரத்திலும் செயல் வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதில், எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பதை மாவட்டச் செயலாளர்கள் எடுத்துச் சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு ஒன்றிய நகர, பேரூர், அளவிலும் பொதுக் கூட்டங்கள் நடத்துங்கள். அந்த கூட்டத்திற்கு நகரச் செயலாளர் பேரூர் செயலாளர், ஒன்றியச் செயலாளர், மாவட்டச் செயலாளர்களை அழைக்க வேண்டும்.

பொதுக் கூட்டத்தில் உங்கள் பகுதி திமுகவினரின் செயல்பாடுகளை விமர்சியுங்கள்.

தமிழக சட்டமன்றத்துக்கு விரைவிலேயே தேர்தல் வரவுள்ளது. எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம். வாக்குச் சாவடிகளில் நீங்கள் தான் பணியாற்ற வேண்டும், விழிப்புடன் இருந்து வாக்குச் சாவடிகளை கண்காணிக்க வேண்டும்.

பாசறை உறுப்பினர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று பாசறை செயலாளர்கள் வழி காட்ட வேண்டும் என்றார் ஜெயலலிதா.

முன்னதாக சேலம் புறநகர் மாவட்டதைச் சேர்ந்த 39 பேர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

பின்னர் ஆந்திர மாநில அதிமுக நிர்வாகிகள் ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெற்றனர்.

அதிமுக வேட்பாளர்கள்-ஜெ முன்னிலையில் மனு தாக்கல்:

இந் நிலையில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் மனோஜ் பாண்டியன், ஈரோடு கே.வி.ராமலிங்கம் ஆகியோர் இன்று ஜெயலலிதா முன்னிலையில் மனுத் தாக்கல் செய்தனர்.

இதற்காக ஜெயலலிதா இன்று பகல் 12.20 மணிக்கு கோட்டைக்கு வந்தார். அவர் முன்னிலையில் சட்டமன்றச் செயலாளரும், ராஜ்யசபா தேர்தல் அதிகாரியுமான செல்வராஜிடம் அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்தனர்.

'உளமாற' வேண்டாம்.. 'ஆண்டவன் மீது சூளுரைத்து'...

மனுத் தாக்கலின் போது அதிமுக வேட்பாளர்கள் உறுதிமொழி எடுத்தனர். அவர்கள் 'உளமாற' என்று சொல்லி உறுதிமொழி எடுக்க இருந்தனர்.

ஆனால், ஜெயலலிதா கேட்டுக் கொண்டபடி 'உளமாற' என்பதற்கு பதில் 'ஆண்டவன் மீது சூளுரைத்து' என்ற வாசகத்தை சொல்லி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

மனுத்தாக்கல் செய்து முடித்ததும் வேட்பாளர்கள் இருவரும் ஜெயலலிதாவிடம் ஆசி பெற்றனர்.

அப்போது இந்த வேட்பாளர்களை ஆதரித்து வாக்களிக்கவுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குணசேகரன், மதிமுக சார்பில் சதன் திருமலைக்குமார் எம்எல்ஏ ஆகியோரும் உடனிருந்தனர்.

பதிவு செய்தவர்: முத்துராஜா
பதிவு செய்தது: 04 Jun 2010 5:56 pm
ஏண்டி ஜெயா மன்னார்குடி அலை விட்டால் தமிழ் நாட்டில் வேறு யாரும் இல்லையா

பதிவு செய்தவர்: கருணாநிதி
பதிவு செய்தது: 04 Jun 2010 5:39 pm
நான் ஆத்திகனாக இருந்திருந்தால் ஆத்ம திருப்தி என்றிருப்பேன் ஆனால் நாத்திகனாக் இருப்பதாம் மனநிறைவு கொள்கிறேன் என்று சொன்னதற்கு ஆத்திக ஜெயலலிதா நன்றாகவே ஆப்பு வைக்கிறார். வாழ்க சிறுதாவூர் சீமாட்டி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக