உலகத்தலைவன் என்னும் பாணியில் உள்ளதைச் சொல்லுகிறேன் என்று வந்து விட்டானே என்று அங்கலாய்க்காதீர்கள். உலகத்தில் நடக்கும் நிகழ்வுகளைப் பலரும் பல கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் பார்வ்வைக்குப் பார்வை காட்சிகள் வித்தியாசப்படுகின்றன. நாம் காணும் காட்சியை எப்படி பார்க்க விரும்புகிறோமோ அப்படியே பார்க்கத் தலைப்படுகிறோம். அது தவறில்லை ஆனால் அந்தப் பார்வைக்கு நாம் கற்பித்த அர்த்தத்தை மற்றவர் மீது திணிக்கத் தலைப்படும் போதுதான் நிலமை மோசமடைகிறது. அந்தத் திணிப்புகள் வெறும் திணிப்புகளாக மட்டும் இருந்து விடாது மற்றவர்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் நிலையை அடையும் போது அது மனிதர்களின் வாழ்வின் அடிப்படையே அசைக்கிறது. எதற்கு இவ்வளவு பீடிகை ? உங்கள் கேள்விகள் என் காதுகளில் விழுகிறது. ஈழத்தமிழர்களின் இன்றைய நிலை பலராலும் பல அரசியல் தேவைகளுக்காகப் பந்தாடப்படும் நிலையைப் பார்க்கும் போது நெஞ்சத்தில் எழும் வேதனையின் ஒலி மெளனமாய் இதயத்தில் வலிப்பதனால் காகிதத்தில் விழுகிறது. புலிகள் அழிக்கப்பட்டார்களா ? இல்லை அவர்களது சகாப்தம் முடிவுக்கு வந்து விட்டதா? இதைப்பற்றியெல்லாம் ஆராயும் அளவிற்கு புத்தி ஜீவியல்ல நான். ஆனால் புலிகளின் காலம் என்றொரு காலம் ஈழத்தின் அரசியல் வரலாற்றில் இருந்தது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. அந்தக்காலம் ஈழத்தமிழர்களின் வரலாற்றை ஒளியுறச் செய்ததா? அன்றி இருளடையச் செய்ததா? என்பதுவே கேள்வி. பிரபாகரன் என்றொரு மனிதன் ஈத்தமிழர்களின் வரலாற்றில் மறைக்கப்பட்முடியாத அடையாளத்தை விட்டிருப்பது மட்டும் உண்மை என்பது தெளிவு. அதன் தாக்கம் எத்தகையது என்பதை இப்போது என் அன்பான புலி ஆதரவாளர்கள் என்னும் பெயரில் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் தமிழ் அன்பர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் காலத்தின் சக்கரச் சுழர்வில் நிச்சயம் புரிந்து கொள்வார்கள் என்பது உண்மை. அதற்காக ஈழத்தமிழ் போராட்டங்களில் ஈடுபட்ட மற்றைய இயக்கங்கள் அனைத்தும் சுத்தமான வெள்ளைப்புறாக்கள் என்று நான் கூறவில்லை. ஈழத்து தமிழர்களின் அரசியல் வாழ்வில் சுபீட்சத்தை ஏற்படுத்தப் போகிறோம் என்று கோஷமிட்டு உண்மையான உணர்வுகளினால் உந்தப்பட்டு அந்த இலட்சியத்துக்காக தம்மை ஈந்த உன்னதமான எம் தமிழ் உயிர்கள் பலவற்றை விடுதலை இயக்கங்கள் அனைத்துமே முற்றிலும் சரியான வழியில் தான் வழிநடத்தினார்களா ? என்பது கேள்வியே. ஏன் இன்று ஈழத்தமிழன் இந்த நிலையை வந்தடைந்துள்ளான். சிந்தித்துப்ப்பார்க்கிறேன் உண்மையாக, உள்ளதைச் சொல்லப்போனால் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருமே தாம் சார்ந்த இயக்கங்களை நேசித்தார்களே ஒழிய தமிழர்களின் விடுதலையை நேசிக்கவில்லை. ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான வழி என்பதை தாம் சார்ந்த இயக்கங்கள் என்னும் குறுகிய ஜன்னல் வழியாகப் பார்த்தார்களே ஒழிய, தமிழர்கள் என்னும் பரந்த பார்வையைக் கொண்டிருக்கவில்லை. இன்றும் கூட என்ன நடந்து கொண்டிருக்கிறது? புலம் பெயர்ந்த தமிழர்கள் தாம், தமது என்னும் சுயநலப்போக்கான பார்வையைக் கொண்டிருக்கிறார்களே ஒழிய ஈழம் என்னும் அந்த குறுகிய நிலப்பரப்புக்குள் தமிழர் வாழும் பகுதிகள் என்னும் இன்னும் குறுகிய நிலத்தினுள் அடைப்பட்டு, அல்லல் பட்ட தமிழர்களின் நலன்களைக் கணக்கிலெடுத்துக் கொள்கிறார்களா என்பது சந்தேகமே? போராட்டத்தின் உசச நிலைக்குள் ஈழத்தின் வடபுலம் சிக்கிக் கொண்டிருந்த வேளையில் அங்கு சென்று வந்த என் நண்பனொருவன் கூறிய செய்தி. தான் சென்ற ஒரு இல்லத்தில் வசிக்கும் சிறுவன் தன் தந்தையிடம் மேலே பொருத்தப்பட்டிருக்கும் மின்விசிறியைக் காட்டி அது என்ன? அது ஏன் அங்கே பொருத்தப்பட்டிருக்கிறது.
அந்தக் கேள்விக்கு என்ன காரணம், அந்தக்காலகட்டத்தில் வடபகுதியில் மின்சாரமே இல்லாமல் இருந்ததால் அந்த மின்விசிறி இயங்கி அந்தச் சிறுவன் பார்த்ததேயில்லை அவனுக்கு அந்த மின்விசிறியின் இயக்கம் என்னவென்றே தெரியாது. இதை ஏன் சொல்கிறேன் என்றால் அப்படியான ஒரு இருளடைந்த காலகட்டத்தை கடந்து, பசி, பட்டினி, பஞ்சம், வியாதி என்னும் பல நிலைகளை அம்மக்கள் அனுபவித்த போது புலம்பெயர்ந்தோர்கள் வசதியாகத்தான் வாழ்ந்தார்கள் ஈழத்தில் வாழும் தம் தொப்புள் கொடி உறவுகளின் மூலம் தமது கொள்கைகளைப் பரீட்சித்துப் பார்க்கத் தலைப்பட்டார்கள். அது மட்டுமா? தமக்கு சுபீட்சத்தை ஏற்படுத்தப் போகிறோம் என்று கூறிய இயக்கங்கள் மீதமிருந்த தமது ஒன்றிரண்டு சுதந்திரங்களையும் பறித்து ஆயுத பலத்தின் அதிகாரத்தை நிரூபித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அனைவரும் இயக்கங்களின் விசுவாசத்தைத் தான் சுவாசித்துக் கொண்டிருந்தோம். அதற்கு நாம் சூட்டிய பெயர் ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டம். இயக்கங்கள் தம்முள் நடந்த உட்கட்சிப் போராட்டங்களினால் உயிரிழந்த தமிழ் இளைஞர், விடுதலையின் பெயரால் மாற்று இயக்கத்தினரால் காவு கொள்ளப்பட்ட இளைஞர், யுவதிகள். நாமே தமிழரின் ஏகோபித்த பிரதிநிதிகள் என்று கூறிக் கொண்ட புலிகளால் காவு கொள்ளப்பட்ட இளம் உயிர்கள் . ஈழப்போராட்டத்தை நசுக்குகிறோம் என்று தம்மோடு பொருதிய புலிகளை எதிர்க்கிறோம் என்று சிறீலங்கா அரசு எடுத்த இராணுவ நடவடிக்கைகளினால் அழிந்த உயிர்கள். பழிக்குப்பழி என்று புலிகளினால் காவு கொள்ளப்பட்ட சிங்கள மக்கள். அப்பப்பா, ஒரு இனத்தின் விடுதலைக்காக நாம் கொடுத்த விலை. . . எண்ணிப்பார்க்கவே நெஞ்சம் அச்சத்தால் நடுக்குகிறது.
உங்கள் கர்ஜனை எனக்குக் கேட்கிறது. சேர,சோழ, பாண்டிய மன்னர் காலத்து வீர சகாப்தங்களை எல்லாம் உங்கள் துணைக்கு நீங்கள் இழுத்துப் போட்டுக் கொள்வது தெரிகிறது. சரித்திரக் கதைகளைச் சான்றாக வைத்துக் கொண்டு ஒரு இனத்தின் சரித்திரத்தையே இருளடையச் செய்வதுதான் புத்திஜீவிகளின் புத்தி சாதுர்யமா? போகட்டும், ஒர் சூரிய அஸ்தமனம் மற்றொரு விடியலுக்கு ஆரம்பமாக அமைவதில்லையா? சூரியகுமாரன் என்று போற்றப்படும் புலிகளின் தலைவனின் அஸ்தமனமும் ஒரு விடியலுக்கு அத்திவாரமிட்டதாகவே எடுத்துக் கொள்ளுங்கள். இப்போதாவது நாம் என்ன செய்யவேண்டும் ? நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்று புலம்பிக் கொண்டிருப்பதை விட்டு விட்டு, எஞ்சியிருக்கும் தமிழ் அமைப்புக்களை இனியாவது இயக்கங்கள், அமைப்புக்கள் என்னும் கண்ணடிக்குள் பார்க்கும் பார்வையைத் தவிர்த்து, தமிழன் என்னும் பரந்த அடிப்படையில் ஒன்றுபடச் செய்வதே இன்றைய புலம்பெயர் சமூகத்தின் கடமையாகிறது. அன்று இயக்கமாக இருந்த போதோ அன்றி சாதாரணத் தமிழனாக இருந்த போதோ எமது இன்னல்களுக்கு உறுதுணையாகவும், ஆதரவாகவும் இருந்தவர்கள் எமது அருமைத் தமிழக உடன்பிறப்புக்களே. அவர்கள் எந்தக் கட்சி என்பது பெரிதல்ல அவர்கள் அனைவரும் தமிழர் என்ற ரீதியில் ஈழத்தமிழர்களுக்கு அனுசரணையாகவும், ஆறுதலாகவும் இருந்தார்கள் என்பதுவே உண்மை. ஈழத்தமிழர்கள் நாம் அனைவரும் ஓரணியில் திரண்டு தமிழகத்தில் இருக்கும் மாநில சுயாட்சியை முன்மாதிரியாகக் கொண்ட அரசியலமைப்பு ஒன்று ஈழத்தமிழருக்கு அளிக்கப்பட்வேண்டும் என்று கோருவதே தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் எமக்கு ஆதரவாக குரல் கொடுப்பதற்கு நாமளிக்கும் பலமாக இருக்கும். அதை விடுத்து தமிழக முதல்வர் கலைஞர் கருணாதிக்கு எதிராகவோ, அன்றி எதிர்க்கட்சித் தலைவர் செல்வி ஜெயலலிதாவிற்கு எதிராகவோ, அன்றி திரைப்பட உலகினர்க்கு எதிராகவோ, அன்றி இந்திய அரசிற்கு எதிராகவோ அன்றி உண்மையை உரக்கக் கூவிடும் நண்பர் சோவிற்கு எதிராகவோ கூக்குரலிடுவதனால் பலனேதும் இல்லை. தமிழகத்தில் தங்கள் அரசியல் பயணத்தை நடத்த ஈழத்தமிழர்களை ஓடங்களாகப் பயன்படுத்தும் ஒரு சில தலைவர்களின் வலைக்குள் நாம் விழுந்து விடக்கூடாது. திரைப்படங்களில் நடிப்பது, விழாக்களில் பங்கு கொள்வது என்பது தமிழக சினிமாத்துறையினரின் அன்றாடப்பணிகள் எமது நிறைவேறாக் கனவுகளுக்கு அவர்களின் மீது வசைபாடுவதை, காழ்ப்புணர்ச்சியைக் காட்டிக்கொள்வதை ஈழத்தமிழர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஈழத்தில் நடைபெறும் அனைத்து விழாக்களையும் பகிஷ்கரியுங்கள் என்னும் ஓலம் சிங்கள மக்களை மட்டும் பாதிக்கவில்லை கால்நூற்றாண்டுக்கு மேலாக இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்த எமது இன்னுயிர் ஈழத்தமிழ் உறவுகளின் கொஞ்சநேர நிம்மதியான இடைவேளையையும் தட்டிப்பறிக்கும் செயல் என்பதை மறந்து விடாதீர்கள். ஈழத்தில் எதுவிதமான கலைவிழாக்களும் நடைபெறக்கூடாது என்று கோஷமிடும் அதேவேளை புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் கலைவிழாக்களையும், திரைப்படங்களையும் வேறு நிகழ்வுகளையும் கண்டுகளிக்கத் தவறுவதில்லை.
என் அன்பான உறவுகளே சுய அறிவுக்கு கொஞ்சம் வேலை கொடுங்கள்.
செம்மொழி மாநாடு கோவையில் நடைபெறுவதால் ஈழத்தமிழரின் அரசியல் தீர்வு எந்த வகையில் பாதிக்கப்படுகிறது ?
ஈழத்தமிழருக்குத் தீர்வு வரும்வரை தமிழத் தமிழ் என்றே அழைக்கக்கூடாது என்றும் கோஷம் போடலாமே? அதுவும் எமக்கு இனிக்கத்தானே செய்கிறது. ஈழத்தமிழர் என்றால் என்ன? மலேசியத் தமிழர் என்றால் என்ன, கனடாத் தமிழர் என்றால் என்ன. தமிழன்னையின் தலையில் மகுடம் சூட்டப்படுவதும் அதைச் சூட்டுவதற்கான பணிகளுக்காக கலைஞர் போற்றப்படுவதையும் உலகத்தமிழர்கள் அனைவரும் வரவேற்க வேண்டும். ஏனெனில் இது அரசியலுக்கு அப்பாற்பட்டது. தயவுசெய்து தமிழர்களின் அரசியலை நடத்துங்கள். தமிழை அரசியலாக்காதீர்கள். அதேபோல ஈழத்தமிழருக்காக பதினெட்டு அம்சக் கோரிக்கையை முன்வைக்கும் செல்வி ஜெயலலிதாவின் முயற்சிகளையும் பாராட்டத் தயங்கக்கூடாது. தொடர்ந்து கலஞர் கருணாநிதியையும், இந்திய அரசையும் வசைபாடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். இப்போது ஈழத்தமிழருக்குக் கிடைக்ககூடிய அனைத்து ஆதரவுகளையும் ஒன்று திரட்டுவது ஒன்றே எமது குறிக்கொளாக இருக்க வேண்டும். ஒன்றுபட்ட இலங்கைக்குள் மாநில சுயாட்சி அதிகாரம் கொண்ட இனமாக நாம் வாழும் நிலையைத் தோற்றுவிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும். டக்லஸ் தேவானந்தாவை குற்றவாளி எனப்புனைந்திட முயற்சிப்போரே ! இயக்கங்களைச் சார்ந்தவர்களில் குற்றம் புரியாதோர் எத்தனை பேர் என்று கணக்கிட்டு விட்டுப் பின்னர் கோஷமிடுங்கள். பேச்சுவார்த்தை என்ற பெயரில் எத்த்னை தடவைகள் புலிகளின் தலைவர்களும், இராணுவத் தளபதிகளும் உலகை வலம் வந்தார்களே ! அப்போது எங்கே போயிற்று உங்கள் கோஷம் ? இன்றும் கூட உண்மைகளை நெஞ்சுக்குள் அமுக்கி வைத்துக் கொண்டு மெளனமாய் அழும் எத்தனையோ பேர் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள். அவர்களின் இதயத்தின் ஓலங்களை வாய்விட்டுக் கதற முடியாத அளவிற்கு தமிழீழ அரசியலின் அதிகாரவெறி கண்களை மறைத்து நிற்கிறது.உள்ளதைச் சொன்ன எனக்குக் கிடைக்கப் போகும் வசைகளை அறியாதவன் அல்ல, இருந்தாலும் உண்மை நெஞ்ச உறுத்தும் ஒரு ஈழத்தமிழன் என்பதால் கொஞ்சம் கதறுகிறேன்.
ஊர்க்குருவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக