சனி, 5 ஜூன், 2010

"ல'கர "ழ'கரங்களைக் கூடச் சரியாக உச்சரிக்கத் தெரியாத நிலையில்

கோவையில் நடைபெற இருக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பரவலாக ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருப்பதைக் காண முடிகிறது. 14 ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த அறிஞர்கள் பலருடைய ஆய்வுக் கட்டுரைகள் அரங்கத்தில் பதிவு செய்யப்பட்டுத் தமிழுக்குச் செழுமையும், வளமையும் சேர்க்க இருக்கின்றன.
நடக்க இருப்பது ஒரு தமிழ்த் திருவிழா என்பதை நினைவில் நிறுத்தி, அரசியல் காழ்ப்புணர்ச்சி, மனமாச்சரியங்கள் போன்றவற்றைத் துணிந்து அகற்றி, ஈழக்கவிஞர் முனைவர் சச்சிதானந்தனின் கவிதை வரிகளான ""தேவர்க்கரசுநிலை வேண்டியதில்லை; அவர் தின்னும் சுவையமுது வேண்டியதில்லை; சாவில் தமிழ் படித்துச் சாகவேண்டும்; என்றன்   சாம்பல் தமிழ்மணந்து வேக வேண்டும்'' என்பதை உணர்வில் இருத்தித் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைத் தமிழினத்தின் ஒற்றுமை மாநாடாக்கிக் காட்ட வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு.
சமீபத்தில் கோவை மாநகரின், செம்மொழி மாநாட்டு ஏற்பாடுகளைப் பார்வையிடச் சென்றிருந்த முதல்வர் கருணாநிதி விடுத்திருக்கும் வேண்டுகோளை ஆளும் கட்சியினர் மனதில் இருத்தக் கடமைப்பட்டவர்கள். "செம்மொழி மாநாட்டைக் கட்சி மாநாடாக்கி விடாதீர்கள்' என்கிற முதல்வரின் வேண்டுகோளை முழுமையாக ஏற்றுக் கொண்டால் மட்டுமே, தமிழை நேசிக்கும் மாற்றுக் கட்சியினரும், இந்தத் தமிழ்த் திருவிழாவில் கலந்து கொள்ள முன்வருவர் என்பதை அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டியதில்லை. உடன்பிறப்புகள் தங்கள் தலைவரின் கட்டளையை மீறமாட்டார்கள் என்று நம்புவோமாக! எதிர்க்கட்சியினர் மனமாச்சரியங்களை மறந்துவிட்டு மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்போமாக!
செம்மொழி மாநாட்டுக் குதூகலங்களுக்கு இடையே மனதில் சற்று வருத்தம். தமிழுக்கு மாநாடு எடுக்கிறோம். உலகெங்கிலும் இருந்து தமிழறிஞர்கள் கோவையில் வந்து கூட இருக்கிறார்கள். தமிழுக்கும் தமிழனுக்கும் பெருமை சேர்க்கும் ஒரு சரித்திர நிகழ்வு நடைபெற இருக்கும் வேளையில், தாய்த் தமிழகத்தில் தமிழின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை நினைத்தால் வேதனைப்படாமல் இருக்க முடியவில்லை.
ஒருபுறம் தமிழே தெரியாத, தாய்மொழி தெரிய வேண்டும் என்கிற உணர்வே இல்லாத ஒரு தலைமுறை வளர்ந்து வருகிறது. இன்னொருபுறம், "ல'கர "ழ'கரங்களைக் கூடச் சரியாக உச்சரிக்கத் தெரியாத நிலையில் நாமமது தமிழரென வாழ்ந்திடுவோர். நுகர்வோர் பொருளாதாரமும், பன்னாட்டு நிறுவனங்களின் வருகையும், தொழில்நுட்ப வளர்ச்சியும் ஏற்படுத்தி இருக்கும் கலாசாரச் சீரழிவும், பண்பாட்டுச் சிதைவும் மிக அதிகமாகப் பாதித்திருப்பது தமிழ் மொழியைத்தான். ஊடகங்களும் தமிழுக்கு எதிரான தாக்குதல்களுக்குத் துணைபோகின்றன என்பதுதான் அதனினும் கொடிய வேதனை.
இவையெல்லாம் போகட்டும். அறுபதுகளில் காணப்பட்ட தமிழின எழுச்சி என்ன ஆனது?  தமிழ் படிப்பது பெருமை என்று கருதிய தலைமுறையினரேகூடத் தங்களது சந்ததியர் தமிழ் படிக்க வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்கிவிட்டனரே, ஏன்? இன்னார் தமிழ் வித்வான், தமிழ்ப் புலவர் என்று மரியாதையுடன் அழைக்கப்பட்டு வந்த காலம்போய், யாரும் தங்களைத் தமிழாசிரியர் என்று பெருமைப்பட்டுக் கொள்ளத் தயார் இல்லையே, ஏன்?
தமிழின் இழிநிலையைப் போக்க, 1901-ம் ஆண்டு, மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி மண்டபத்தில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை அறிவித்த கையோடு, சேதுபதி செந்தமிழ்க் கலாசாலையையும் நிறுவினார் வள்ளல் பாண்டித்துரைத் தேவர். அதைத் தொடர்ந்து, திருவையாறு அரசர் கல்லூரி, தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கம், மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை, கணேசர் செந்தமிழ்க் கல்லூரி என்று கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில், அந்நியர் ஆட்சிக் காலத்தில் தமிழுக்குக் கல்லூரிகள் கண்ட பெருமை இப்போது பழங்கதையாகி விட்டதே ஏன்?
தருமபுரம், திருப்பனந்தாள், மயிலம், பேரூர் போன்ற சைவத் திருமடங்கள், தங்களது பணி சைவத்தை வளர்ப்பதுடன் நின்றுவிடவில்லை என்று தமிழ் வளர்க்கும் குறிக்கோளுடன் தமிழ்க் கல்லூரிகளை நிறுவி நடத்த முற்பட்டன. காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரி மற்றும் நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் குன்றக்குடி ஆதீனத்தால் நிறுவப்பட்ட திருவள்ளுவர் தமிழ்க் கல்லூரி போன்றவை தமிழார்வம்மிக்க மாணவர்களின் மொழிப் பற்றைத் தமிழ் வார்த்து வளர்த்தன. சுமார் பத்துத் தமிழ்க் கல்லூரிகள், தமிழ் மொழி வளர்ச்சியை மட்டுமே மனத்தில் கொண்டு நிறுவப்பட்டு, நடத்தப்பட்ட நிலைமை மாறி இப்போது காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியைத் தவிர ஏனைய கல்லூரிகள் அனைத்துமே கலை அறிவியல் கல்லூரிகளாக மாறிவிட்டனவே, ஏன்?
இந்தத் தமிழ்க் கல்லூரிகளில் தமிழ் படிக்க மாணவர்கள் வருவதில்லை என்பதுதான் அடிப்படைக் காரணம். மாணவர் சேர்க்கை இல்லாத நிலையில் கல்லூரிகளை மூடிவிடவா முடியும்? சுயநிதிப் பிரிவில் வணிகவியல், கலை, அறிவியல் கல்லூரிகளாக அவை செயல்பட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. தமிழ்வழிக் கல்விக்கே யாரும் தயாராக இல்லாத நிலையில், தமிழைப் பாடமாகப் படிக்க மாணவர்கள் வராததில் வியப்பென்ன இருக்கிறது? இப்படிப்பட்ட ஓர் இழிநிலை தமிழுக்கு வரக் காரணம் என்ன? தமிழ் படித்தால் வேலை இல்லை என்கிறபோது மாணவர்கள் எப்படி தமிழ்க் கல்லூரிகளில் சேரத் துணிவர்? தமிழ் படித்தவர்கள் ஆசிரியராகக் கூடப் போக முடியாத நிலைமை அல்லவா காணப்படுகிறது? இடைநிலை ஆசிரியர்கள், தமிழைப் பாடமாக எடுத்து இளங்கலை, முதுகலைப் பட்டங்கள் பெற்றுத் தமிழாசிரியர்களாக உயர்வு பெற்று விடுகிறார்கள். நேரடியாகத் தமிழ் படித்தவர்களுக்கு இங்கும் வாய்ப்பில்லை என்கிற நிலைமை.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்க இருக்கும் இந்த நேரத்தில், தமிழ் படித்தவர்களுக்கு அரசுப் பணியிலும், தமிழாசிரியர் பணியிலும் முன்னுரிமை என்கிற சட்டம் இயற்றப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டால் மட்டுமே மீண்டும் தமிழுக்குப் புத்துணர்வும், புத்துணர்ச்சியும் ஏற்படும். தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு அடுத்த முன்னுரிமை தரப்பட வேண்டும்.
தமிழ் உள்ளளவும், கோவையில் நடைபெற இருக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, தமிழனின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக, சரித்திர நிகழ்வாக நிலைபெற வேண்டுமானால், துணிந்து இப்படியொரு முடிவை எடுத்துத் தமிழைக் காப்பாற்றியாக வேண்டும். இதை முதல்வர் கருணாநிதியால் செய்ய முடியும் என்று சொன்னால் தவறு. அவரால் மட்டுமே செய்ய முடியும் என்பதுதான் உண்மை!
தினமணி தலையங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக