ஞாயிறு, 27 ஜூன், 2010

கைவிடப்பட்ட வாகனங்கள் கையளிப்பு 14000 Cycles,7000 Motor cycles,

யுத்தத்தின்போது மக்களால் கைவிடப்பட்ட வாகனங்களையும் துவிச்சக்கர வண்டிகளையும் மாவட்டச் செயலகம் மீட்டு கிளிநொச்சிக்கு எடுத்து வந்து பொது மக்களின் பார்வைக்கும் அடையாளம் காணும் முகமாக வைத்திருந்தது.

இதனையடுத்து பொதுமக்கள் தமது வாகனங்களை அவற்றுக்குரிய ஆவணங்களுடன் அடையாளங்காட்டி உறுதிப்படுத்தியதை அடுத்து அவை பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டன.

இந்த வைபவத்தில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் கிளிநொச்சி பதில் பிரதேச செயலர் முகுந்தன் மற்றும் உயர் அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் உரையாற்றுகையில் இழந்து போன அனைத்தையும் மக்கள் திரும்பப் பெறவேண்டும். அதேவேளை இருப்பவற்றையும் நாம் பாதுகாக்க வேண்டும். அத்துடன், மேலும் மக்களுக்குத் தேவையானவற்றையும் நாம் பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும் எனத் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில் ஆவணங்கள் உடையவர்களுக்கான வாகனங்களே தற்போது வழங்கப்படுகின்றன. ஆனால் அதிகமானவர்கள் யுத்தத்தின்போது தமது ஆவணங்களை இழந்து விட்டதாகத் தெரிவித்திருக்கின்றனர். அவர்கள் கூடியவிரைவில் தமது வாகனங்களைப் பெறுவதற்கு தமது கிராம அலுவலர் பிரதேச செயலர் ஆகியோரிடம் உறுதிப்படுத்திப் பெற்றுக் கொண்ட கடிதங்களைச் சமர்ப்பித்து தங்களின் வாகனங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். நீண்டநாட்களாக தமது உடமைகளை மீட்டுத்தருமாறு கேட்ட மக்களுக்கு இன்று இந்தப் பொருட்களை பெற்றுக் கொள்வது மகிழ்ச்சியானதாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி அவர்கள் தெரிவிக்கையில் ஏராளம் சைக்கிள்கள் இங்கே கொண்டுவரப்பட்டிருக்கின்றன. உரித்தாளர்களுக்கு வழங்கியவை தவிர ஏனையவற்றை திருத்தி தேவைப்படுவோருக்கு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

இங்கே பதினான்கு ஆயிரம் துவிச்சக்கர வண்டிகளும் ஏழாயிரம் மோட்டார் சைக்கிள்களும் நூற்றுக்கணக்கான வாகனங்களும் மாவட்டச் செயலகத்தின் மூலம் மீட்கப்பட்டதாகவும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய படைத்தரப்பினரையும் வடமாகாண ஆளுநரையும் நாடாளுமன்ற உறுப்பினரையும் நன்றி தெரிவித்துப் பாராட்டினார் அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன்.

இந்த ஆரம்ப நிகழ்வில் ஒரு உழவு இயந்திரமும் 300 மோட்டார் சைக்கிள்களும் 400 க்கு மேற்பட்ட சைக்கிள்களும் வழங்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக